பணிப்பெண்  மரணம்:  60 வயது  மாதுக்கு மேலும் 7 நாள் காவல் நீட்டிப்பு!

சமூகம்
Typography

புக்கிட் மெர்டாஜாம் பிப்.19- இந்தோனிசியப் பணிப்பெண் ஒருவர் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிர் நீத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 60 வயதுடைய மாது ஒருவருக்கான போலீஸ் காவல் மேலும் 7 நாள்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.

இந்த மாதுவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 7 நாள் தடுப்புக் காவல், காலாவதியாவதை முன்னிட்டு மீண்டும் 7 நாள்களுக்கு காவல் நீட்டிக்கப் பட்டதாக செபராங் பிறை தெங்கா மாவட்டப் போலீஸ் தலைவர் துணை ஆணையர் நிக் ரோஸ் அஸ்லான் சொன்னார்.

மரணமடைந்த இந்தோனிசியப் பணிப்பெண்ணான அடெலினா (வயது 26) என்பவரை வேலைக்கு அமர்த்திய அண்ணன் -தங்கையான  39 வயதுடைய ஓர் ஆணும் 36 வயதுடைய ஒரு பெண்ணும் அந்தப் பணிப்பெண்ணைக் கொடுமைப் படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்ட அந்த 60 வயது மாது, இந்த அண்ணன் -தங்கையின் தாயார் என அடையாளம் கூறப்பட்டது.

கொடுமைப் படுத்தப் படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து புக்கிட் மெர்டாஜாம் தாமான் கோத்தா பெர்மாய் என்ற இடத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து அடெலினாவை கடந்த 11ஆம் தேதி  போலீசார் மீட்டனர்.

கார் நிறுத்துமிடத்தில் நாய்கள்  கட்டப்பட்டிருந்த பகுதியில் அந்தப் பணிப் பெண் உடல்நலம் குன்றிப் படுத்திருந்த போது போலீசார் அவரை மீட்டனர்.

அந்தப் பெண்ணின் முகத்திலும் தலையிலும் கடுமையான காயங்கள் காணப்பட்டன. மேலும் அவருடைய கைகள் மற்றும் கால்களில் தீராத ரணங்கள் இருந்தன.

நீண்ட காலமாகவே இந்தப் பெண் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கலாம் என்றும் அவர் ஏராளமான இரத்தத்தை இழந்திருந்தார் என்று கண்டறியப் பட்டிருப்பதாகவும் பிரேதப்  பரிசோதனை நடத்திய குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த டாக்டர் அமீர் சாட் குறிப்பிட்டதாக துணை ஆணையர் நிக் ரோஸ் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விரிவான விசாரணையைத் தாங்கள் மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், கொலைக் குற்றத்தின் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் விசாரணை  நடந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS