மரண ரயில் பாதையை நோக்கி மறுபயணம்!   91 வயது ஆறுமுகத்துடன் குழு புறப்பட்டது! (VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.20- சயாம் மரண ரயில் பாதை அமைக்க, ஜப்பானியர்களால் கொண்டு செல்லப்பட்டு கொடுமைக்குள்ளாகி   உயிர்நீத்த மலேசியத் தமிழர்களின் 75 ஆண்டுகால வரலாற்றில், முதன் முறையாக, உயிர் நீத்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த 20 பேர் கொண்ட குழு ரயிலில் இன்று  தாய்லாந்து புறப்பட்டது.

இவர்களில் , அந்த மரண ரயில் பாதைக்காக கொண்டு செல்லப்பட்டு மீண்டு வந்து விட்ட இரு முதியவர்களும் அடங்குவர். 91 வயதுடைய ஆறுமுகம் கந்தசாமி மற்றும் 84 வயதுடைய பொன்னம்பலம் வீச்சான் ஆகிய இருவரும் அந்த மரணக் கொடுமையில் உயிர்ப் பிழைத்திருப்ப வர்கள். 

அது மட்டுமல்ல, அன்று அவர்கள் எந்தக் கோலாலம்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களால் மரண ரயில் அமைக்க கொண்டு செல்லப்பட்டார்களே, அதே ரயில் நிலையத்திலிருந்து  இன்று தங்களது மறுபயணத்தைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.

1943 ஆம் ஆண்டு இதே ரயில் நிலையத்தில் இருந்து 8 வயது சிறுவனாக பொன்னம்பலமும் அவருடைய தந்தை மற்றும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஜப்பானியர்களால் திறந்த வெளி சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதை 84 வயது பொன்னம்பலம் வேதனையுடன் இன்று நினைவு கூர்ந்தார்.

சயாமிற்கு கொண்டு செல்லப்பட்ட நமது மக்கள், சென்ற அதே பாதையில் சென்று  மரண ரயில் பகுதிகளுக்கு மறு வருகை மேற்கொண்டு, பர்மா எல்லை வரையில், அப்போது அமைக்கப்பட்ட மரண ரயில் பாதையின் சுவட்டில், தாங்கள் பயணம் செய்து  பல இடங்களில் இறந்து போன நம்மவர்களுக்கான காரியங்களையும்  பிரார்த்தனைகளையும் செய்யவிருப்பதாக மரண ரயில் நல ஆர்வக்குழு  என்ற அமைப்பின் ஏற்பாட்டாளரான பி.சந்திரசேகரன் தெரிவித்தார்.

இந்த மறு பயணத்தை நாங்கள் அவசர அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது மரண ரயில் பாதை மறு பயணத்திற்கு திட்டமிட்ட போது அதில் சிக்கி மீண்டு வந்த 5 பேர் எங்களுடன் இணைந்திருந்தனர். 

ஆனால், அவர்களில் மூவர் அடுத்தடுத்து முதுமை காரணமக இறக்க நேர்ந்தது. இப்போது எஞ்சியிருப்பது 91 வயது ஆறுமுகமும் 84 வயது பொன்னம்பலமும் மட்டுமே. எனவே நாங்கள் உடனடியாக இந்தப் பிரார்த்தனைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று என்று சந்திர சேகரன் விளக்கினார்.

கோலாலம்பூர் பழைய ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 10 மணியளவில் மரண ரயில் பாதையில் தங்களது குடும்ப முன்னோர்களை இழந்த 20 பேர் கொண்ட குழு  பயணத்தைத் தொடங்கியது.

BLOG COMMENTS POWERED BY DISQUS