பினாங்கில் போர் கால பீரங்கிகள் கண்டெடுப்பு! 200 ஆண்டுகள் பழமையானதா?

சமூகம்
Typography

ஜோர்ஜ்டவுன், பிப்.21- போர் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரு பீரங்கிகள் இங்குள்ள ஃபோர்ட் கோர்ன்வல்லீஸ் பகுதியில் மண்ணுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டது. இது 200 ஆண்டு கால பீரங்கிகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கோட்டை அருகே கால்வாய் தோண்டும் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது இந்த பீரங்கிகள் பூமியில் 1.2 மீட்டர் ஆழத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டன என பினாங்கு மாநில தலைமை அகழ்வாராய்ச்சியாளர் டத்தோ டாக்டர் மொக்தார் சைடின் கூறினார்.

மேலும், இதுநாள் வரை 'அமைதியான கோட்டை' என்று வர்ணிக்கப்பட்ட இந்த ஃபோர்ட் கோர்ன்வல்லீஸ் (Fort Cornwallis) பகுதியின் வரலாறு மாறும் நிலை வரலாம் எனவும் அவர் கூறினார்.

நேற்று மாலை 2 மணியளவில் கோட்டையில் கால்வாய் அமைப்பதற்காக தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது 2.2 மீட்டர் மற்றும் 2.35 மீட்டர் நீள இரு பீரங்கிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை 200 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார். 

இந்த பீரங்கிகள் மீது ஆய்வுகள் நடத்த பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், பெருநாள் காலத்தில் பீரங்கிகள் கிடைத்திருப்பது 'இரு அங் பாவ்' கிடைத்திருப்பதற்கு சமம் என தெரிவித்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS