பணிப் பெண் மரணம்: மரண தண்டனைச் சட்டத்தின் கீழ் அம்பிகா மீது குற்றச்சாட்டு!

சமூகம்
Typography

புக்கிட் மெர்டாஜாம், பிப்.22- தன்னிடம் பணிபுரிந்த இந்தோனிசியப் பணிப் பெண்ணான அடெலினா லிசாவ் (வயது 26)  என்பவரைக் கொலை செய்ததாக எம்.ஏ.எஸ். அம்பிகா (வயது 59) என்ற மாது மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

அதேவேளையில், அம்பிகாவின் மகளான ஆர்.ஜெயவர்த்தினி (வயது 32) என்பவர் மீது சட்டவிரோதமான வெளிநாட்டவர் ஒருவரை வேலைக்கு அமர்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இவ்வாண்டு பிப்ரவரி 10-ஆம் தேதிக்கும் இடையே இவர்கள் இருவரும்  புக்கிட் மெர்டாஜாம், தாமான் கோத்தா பெர்மாய் என்ற இடத்தில் இக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தம் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அதன் விபரம்  என்ன என்பதை தாம் புரிந்து கொண்டதாக அம்பிகா தலையை அசைத்தார். அவரிடம் நீதிமன்றம் வாக்குமூலம் எதனையும் பதிவு செய்யவில்லை. 

கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் அம்பிகா மீது குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டது.

அதே போன்று தம் மீதான குற்றச்சாட்டை தாம் புரிந்து கொண்டதாக கோடிகாட்டிய ஜெயவர்த்தினி, நீதிமறத்தில் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

1959/63ஆம் ஆண்டின் குடிநுழைவுச் சட்டத்தின் 55பி(1) என்ற பிரிவின் கீழ் ஜெயவர்த்தினி மீது குற்றஞ்சாட்டப் பட்டிருப்பதால் அவர் குற்றவாளி என நிருபணமானால், 10,000 ரிங்கிட் முதல் 50,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது கூடுதல் பட்சமாக 12 மாதச் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அம்பிகாவின் மூத்த மகனான 39 வயதுடைய நபர், இந்த விவகாரம் தொடர்பில் முதலில்  கைது செய்யப்பட்டார்  என்ற போதிலும் தற்போது அவர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப் பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது அவர் ஒரு சாட்சியாக இருப்பார்.

மேலும் தன்னையும் அவருடைய மகளையும் பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்த போது  அவ்வாறு படம் எடுக்க வேண்டாம் என்று கண்கலங்க அம்பிகா கேட்டுக் கொண்டார். 

ஜெயவர்த்தினிக்கு ஒரு நபர் உத்தரவாதத்துடன்  ஜாமின் தொகையாக 15,000 ரிங்கிட்டை மாஜிஸ்திரேட் முகம்மட் அனாஸ் நிர்ணயித்தார். மேலும் இரசாயன அறிக்கை, தடவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை  ஆகியவை சமர்ப்பிக்கப் படுவதற்காக ஏப்ரல் 19 ஆம் தேதியை மாஜிஸ்திரேட் நிர்ணயித்தார்.

தாமான் கோத்தா பெர்மாயிலுள்ள வீடு ஒன்றில் இருந்து பணிப்பெண்ணான அடெலினா போலீசாரால் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மறுநாள் அவர் உயிரிழந்தார். அவர் கொடுமைக்குள்ளானதால் தலை, கை கால்கள் ஆகியவற்றில் கடுமையான காயங்களுடன் இருந்ததாக கூறப்பட்டது.

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS