சயாம் மரண ரயில்: சாய் யோக் அருவி ஓரம் தமிழர்களுக்கு ஆத்ம சாந்தி பிரார்த்தனை!

சமூகம்
Typography

கோலாலம்பூர், பிப்.24-  சயாம் மரணபாதை ஆமிக்க கொண்டு செல்லப்பட்டு உயிர்நீத்த ஆயிரக்கணக்கான மலாயா  தமிழர்களுக்கான வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த ஆத்மா சாந்திப் பூஜை  நேற்று  சாய் யோக் ( SAI YOK)அருவிக்கரையில் முறையாக நடத்தப்பட்டது.

"எங்கள் முன்னோர்கள் முன்னோர்கள் தங்களின் இன்னுயிரை ஈந்த  சயாம் மரண ரயில் பாதையில் நாங்கள் எந்த நோக்கத்திற்காக மறு பயணம் மேற்கொண்டோமோ,  அந்த நோக்கத்தின் முக்கியமான அம்சம் நேற்று நிறைவேறியது என்று 20 பேர் கொண்ட மலேசியர்களின் குழுவுக்கு தலைமை ஏற்றுச் சென்றுள்ள மரண ரயில் நல ஆர்வக் குழு  தலைவர் பி.சந்திரசேகரன்,'வணக்கம் மலேசியா'விடம் கூறினார்.

சயாம் மரண ரயில் பாதை அமைக்க, ஜப்பானியர்களால்  கொண்டு செல்லப்பட்டு கொடுமைக்குள்ளாகி  உயிர்நீத்த மலேசியத் தமிழர்களின்  75 ஆண்டுகால வரலாற்றில்,  உயிர் நீத்தவர்களுக்கு முதன் முறையாக, இறுதி  அஞ்சலி செலுத்த 20 பேர் கொண்ட குழு  கோலாலமபூர் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி  தாய்லாந்து புறப்பட்டுச் சென்றது.

இந்த மரண ரயில்  கொடுமையில் உயிர்ப் பிழைத்திருக்கும் இரு மலேசியத் தமிழர்களான 91 வயதுடைய ஆறுமுகம் கந்தசாமி மற்றும்  84 வயதுடைய பொன்னம்பலம் வீச்சான் ஆகிய இருவரும் தாய்லாந்து சென்றுள்ள மலேசியக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தாய்லாந்தின் பான் போங் என்ற இடத்தை  அடைந்த மலேசியக் குழு, மரண ரயில் பாதை அமைப்புக்காக முதலில் தமிழர்கள் கொண்டுவந்து இறக்கி விடப்பட்ட 'டோம் டூம்' என்ற இடத்திற்கு வருகை புரிந்தனர். பின்னர் அங்கு  அமைந்துள்ள அருங்காட்சியகம், ஜப்பானியர்களின் நினைவுச் சின்னம் ஆகியவற்றுக்கு வருகை புரிந்தனர்.  அடுத்து மலாயா தமிழர்கள் பலர் உயிர்நீத்த குவாய் ஆற்றுப் பாலத்தை சென்று கண்டனர்.

இந்நிலையில்,  நேற்று எங்களுக்கு மிக முக்கியமான நாளாக அமைந்தது என்று கூறினார் சந்திரசேகரன். 

மரண ரயில் பாதையில் மாண்டவர்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த சாய் யோக்கில் உயிர்நீத்த மலாயா தமிழர்களுக்காக பிரார்த்த னையை நடத்தினோம்  சாய் யோக் நீர் வீழ்ச்சியை ஒட்டிய பகுதியில் ஆத்ம சாந்தி பூஜை நடத்தப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்து முறைப்படியான சடங்கையும் பூஜையையும்  மலேசியக் குழுவில் இடம்பெற்றிருந்த பச்சையப்பன் நடத்தினார். ஜப்பானியர்களின் மரண ரயில் கொடுமையில் இருந்து தப்பிப் பிழைத்த ஒருவரின் புதல்வரே பச்சையப்பன் ஆவார்.

கிறிஸ்துவ முறைப்படியான பிரார்த்தனையும் இங்கு உயிர்நீத்த தமிழர்களுக்காக நடத்தப்பட்டது. இந்தப் பிரார்த்தனைச் சடங்கை, குழுவில் இடம்பெற்றிருந்த டேவிட் அந்தோணி மேற்கொண்டார்.

மேலும்  தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்ட இடமான எராவான் தேசிய பூங்காவில் உள்ள வழி பாட்டுத் தலத்திற்கும் மலேசிய குழுவினர் வருகை புரிந்தனர்.  இது அருவிக் கரை என்பதால் தண்ணீர் தேவையை முன்னிட்டு ஜப்பானியர்கள் இங்கு மரண ரயில் தொழிலாளர்களின் முகாமை அமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS