வாங்கிய கடனுக்காக  வீட்டுக்குத் தீ! அதிர்ஷ்டவசமாக தப்பிய குடும்பம்!

சமூகம்
Typography

காஜாங், பிப்.24-  வாங்கிய கடனைக் கட்டவில்லை என்பதற்காக  குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்த ஒருவரின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்ட அராஜகம் இங்கு நடந்தது. இந்தத் தீயிலிருந்து   அந்தக் குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பியது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. சம்பந்தப்பட்ட ஆடவரும் அவருடைய குடும்பத்தினரும்  மேல்மாடியில் உறங்கிக் கொன்டிருந்த போது கீழ் தளத்தில் இருந்து தீப் பரவியதாகத் தெரிகிறது.

கடுமையான புகை நெடி வந்ததைத் தொடர்ந்து, வீட்டு உரிமையாளர் திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். உடனடியாக கீழே இறங்கிய போது  கீழ்த் தளத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

உடனடியாக  தனது குடும்பத்தினர் அனைவரையும்  எழுப்பிய பின்னர், அங்கிருந்து தப்பித்தார்.  அதோடு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து உடனுக்குடன் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 

தொடக்கப் புலன் விசாரணையின் போது வீட்டின் முன்புறக் கதவு, வெளியிலிருந்து பூட்டப்பட்டிருப்பதும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வீட்டு உரிமையாளரின் காரில் சிவப்புச் சாயம் ஊற்றப்பட்டிருந்ததும் தெரிய வந்தது என்று காஜாங் ஓசிபிடி அகமட் ஷப்பிர் தெரிவித்தார். 

மேலும் 'எங்களுக்கான கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படவேண்டும்' என்று எச்சரிக்கும் குறிப்பைச் சிவப்புச் சாயத்தில்   தீ வைத்த ஆசாமிகள் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளனர் என்றார் அவர்.

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS