சிலாங்கூரில் தண்ணீர் அவதி முடிவுக்கு வந்தது!  வழக்கநிலையில் வினியோகம்!

சமூகம்
Typography

பெட்டாலிங் ஜெயா, மார்ச். 11- கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியிலும் மற்றும் சிலாங்கூரின் இதர பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக மக்களை அவதிக்குள்ளாக்கிய தண்ணீர் வினியோகப் பாதிப்பு, ஒருவழியாக இன்றோடு முடிவுக்கு வந்தது. கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில்  கிட்டத்தட்ட 91.7 விழுக்காடு தண்ணீர் வினியோகம் வழக்கநிலைக்கு வந்து விட்டது என ஷரிகாட் பெக்கலான் ஆயர் சிலாங்கூர் (சபாஸ்) நிறுவனம் அறிவித்துள்ளது.

தண்ணீர் குழாய்களில் அழுத்தத்தை கூடுதலாக்கி, வினியோகத்தை சுமூகமாக்கும் பணிகளில் தாங்கள் இப்போது கவனம் செலுத்தி வருவதாகவும் மேலும் ஓரிரு பகுதிகளில் தண்ணீர் வினியோகத்தைச் சீரடையச் செய்யும் முற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் சபாஸ் கூறியது.

இதுவரையில் உலு சிலாங்கூர் மற்றும்  கோல லங்காட் ஆகிய பகுதிகளில் நிலைமை வழக்கநிலைக்கு முற்றாக திரும்பிவிட்டது. கிள்ளான் வட்டாரத்தில் 97.3 விழுக்காடும் கோலாலம்பூரில் 96.8 விழுக்காடும் கோம்பாக்கில் 91.9 விழுக்காடும் பெட்டாலிங்கில் 74.5 விழுக்காடும் தண்ணீர் வினியோகம் சீரடைந்துள்ளது என்று அது தெரிவித்தது.

அதேவேளையில் இதுவரை முழுமையாக வினியோகத்தை பெறாமல் இருக்கும் பகுதிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் லோரிகள் மூலம் வினியோகம் செய்யப்படும் என்றும் அது கூறியது. 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS