கூட்டரசு தமிழ்ப்பள்ளிகள் வலைப்பந்து போட்டி:  சிகாம்புட் பள்ளி  வாகைசூடியது! -(VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், மார்ச் 12 – கூட்டரசு வளாகத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில், கூட்டரசு வளாகத் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான வலைப்பந்து போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது, கல்வி சாரா துறைகளிலும் சாதனை புரிந்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக விளையாட்டுத் துறையில். அதற்கு, அன்றைய காலக்கட்டம் தொடங்கி இன்றைய காலக்கட்டம் வரை நம் மாணவர்கள்  புரிந்து வரும் சாதனையே சான்று. 

அந்த வகையில், கடந்த மார்ச் 10ஆம் தேதி சனிக்கிழமை  நடைபெற்ற இந்த வலைப்பந்து போட்டி, புக்கிட் ஜாலில் தமிழ்ப்பள்ளித் திடலில் நடந்தேறியது. 

கூட்டரசு வளாகத்தில் மொத்தம் 15 தமிழ்ப்பள்ளிகள் இருக்கிறன. அவை அனைத்துமே இப்போட்டியில் பங்கெடுத்திருந்தன. 200 மாணவர்கள் இப்போட்டியில் பங்கு பெற்றிருந்த வேளை, மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். 

இந்நிகழ்ச்சியின் சிறப்பு பிரமுகராக, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை  துணையமைச்சர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். அவரோடு கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசனை வாரிய உறுப்பினர் டத்தோ எஸ்.ராஜா, கூட்டரசு பிரதேச தமிழ்மொழி பிரிவு உதவி இயக்குனர் திரு.சிவலிங்கம், கூட்டரசு பிரதேச தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு.இராமச்சந்திரன் மற்றும் இதர பிரமுகர்களும் இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருந்தனர்.

16 குழுக்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், சிகாம்புட் தமிழ்ப்பள்ளி மாபெரும் வெற்றியாளராக வாகை சூடிய வேளை, அதனைத் தொடர்ந்து விவேகானந்தா தமிழ்ப்பள்ளி இரண்டாம் நிலையையும், செயிண்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி மற்றும் ஜாலான் செராஸ் தமிழ்ப்பள்ளி முறையே மூன்றாம் மற்றும் நான்காம் நிலையை தட்டிச் சென்றன. 

இப்போட்டியில், பங்குப்பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், பரிசுக் கோப்பை மற்றும் நற்சான்றித௳கள் வழங்கப்பட்டன.  முறையே மாபெரும் வெற்றியாளர், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையை வெற்றிக் கொண்ட பள்ளிகளுக்கு ரிம. 500, ரிம. 300 மற்றும் ரிம. 200  ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. 

தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக நடத்தப்படும்  இப்போட்டி, மாணவர்கள் எல்லா துறையிலும் சிறப்பாக திகழ்ந்து ஒவ்வொரு மாணவனையும் நிறைநிலை மாந்தர்களாக உருவாக்கும் கூட்டரசு வளாகத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் முயற்சிகளில் ஒன்றாகும் என  மன்றத்தின் தலைவரும் செயின்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான திருமதி வளர்மதி தெரிவித்தார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS