ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளியில் நச்சுணவு: பெரும்பாலான மாணவர்கள் பள்ளி திரும்பினர்!

சமூகம்
Typography

செமினி, மார்ச் 13- பள்ளி சிற்றுண்டியில் உணவருந்திய 66 மாணவர்கள் நேற்று நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பி விட்டனர். சம்பந்தப்பட்ட சிற்றுண்டிச்சாலை ஒருவார காலத்திற்கு மூடப்பட்டு உணவு மீதான பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சுமார் 66 மாணவர்கள் நச்சுணவு காரணமாக அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று காலை பள்ளி இடைவேளையின் போது சிற்றுண்டி சாலையில், நாசி லெமாக், நாசி கோராங் முதலான உணவுகளை மாணவர்கள் உட்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பகல் 12 மணியளவில் மாணவர் ஒருவர் வாந்தி எடுத்ததை அடுத்து மற்ற மாணவர்களும் வாந்தி எடுக்க தொடங்கினர். முதலில் 25 மாணவர்கள் பெரானாங் சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர், இதர மாணவர்களும் வாந்தி எடுத்ததை அடுத்து அவர்களும் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிலருக்கு மருத்துவ விடுமுறை வழங்கப்பட்டதாகவும் பெரும்பாலான மாணவர்கள் இன்று பள்ளிக்கு வந்து விட்டதாகவும் பள்ளி தலைமையாசிரியர் உமா தெரிவித்தார்.

சம்பவத்திற்கு காரணமான பள்ளி சிற்றுண்டி சாலை ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் உணவு நச்சுத்தன்மை மீதான விசாரணையின் முடிவு வந்தப்பிறகே மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS