விமான நிலையத்தில் சைக்கிள்கள் பட்ட பாடு! மன்னிப்புக் கேட்டது ஏர் ஆசியா! -(VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், மார்ச். 22- தங்களின் சைக்கிள்கள், விமான நிலைய  ஊழியர்களால் மிக மோசமான முறையில் கையாளப்பட்டது தொடர்பான காணொளி ஒன்று சமுக ஊடகங்களில் பரவிய நிலையில்,  சம்பந்தப்பட்ட சைக்கிள்  உரிமையாளர்களிடம் ஏர் ஆசியா விமான நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

இதற்கு ஈடாக,  ஏப்ரல் மாதம் முழுவதும் தங்களின் விமானத்தில் சைக்கிள்களுக்கு அனைத்துக் கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும் என்று தலைமைச் செயல்நிலை அதிகாரியான ரியாட் அஸ்மாட் தெரிவித்தார்.

'சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சைக்கிள்களைக் கையாண்ட விதத்தைப் பார்த்த போது ஒரு சைக்கிளோட்டியான எனக்கே மனதுக்கு கஷ்டமாக இருந்தது' என்று ரியாட் அஸ்மாட் சொன்னார்.

தைவானில் இருந்து கே.எல்.ஐ.ஏ. 2-வுக்கு திரும்பி வந்த போது தம்முடைய சைக்கிள்களை ஊழியர்கள் தவறான முறையில் கையாண்டது கண்டு அது தொடர்பான காணொளியை  ஒரு பயணி  வெளியிட்டிருந்தார். 

இது குறித்துக் கருத்துரைத்த ஏர் ஆசியா குழுமத் தலைமைச் செயல்நிலை டான்ஶ்ரீ  டோனி பெர்னாண்டஸ்,  இந்த பொருள்களை கையாளும்  பொறுப்பு மற்றொரு தனியார் நிறுவனமான ஜிடிஆர் நிறுவனத்துடன் கூட்டுத் திட்ட அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்றாலும் இந்த தவறுகளுக்கு முழுப் பொறுப்பையும் ஏர் ஆசியா ஏற்றுக் கொள்கிறது என்று தெரிவித்தார்.

நாங்கள் தவறு செய்தால் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் துணிவுடன் ஏற்றுக் கொள்வோம்.  அந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்று தம்முடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்ததோடு அந்த ஊழியர்கள் சைக்கிள்களைத் தவறாக கையாண்ட காணொளியையும் டான்ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ் அதில் பதிவு செய்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS