ஜொகூர் இளவரசர் ‘ஸ்பான்சர்’புரளி: போலிச் செய்தி சட்டத்தில் விசாரணை!

சமூகம்
Typography

ஜொகூர் பாரு, ஏப்ரல். 13 –ஜொகூர் பொந்தியானிலுள்ள பேரங்காடி ஒன்றில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ள ஜொகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான்  இப்ராஹிம் ‘ஸ்பான்சர்’ செய்கிறார் என்று வெளியாகிய போலிச் செய்தி குறித்து புதிய போலிச் செய்தித்  தடுப்புச் சட்டத்தின்  கீழ் விசாரணைக்கு நடத்தப்படும் என்று போலீஸ் துறை கூறியுள்ளது. 

சமூக ஊடகங்களில் பரவிய இந்தப் போலி செய்தியால், சம்பந்தப்பட்ட பேரங்காடியில் மக்கள் கூட்டம் திரண்டது. இதேப் போன்ற செய்தி, குளுவாங்கிலும் வாட்-சாப் வாயிலாக பகிரப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

குளுவாங்கிலுள்ள பேரங்காடியில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது என்று போலீசாருக்கு முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் காலீல் காடீர் கூறினார்.

“அதன் காரணத்தை நாங்கள் கண்டறிந்த போது, ஜொகூர் இளவரசர் மக்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ள தலா ஒருவருக்கு ரிம.200-யை வழங்குகிறார் என்ற போலிச் செய்தி பரவலாக்கப் பட்டுள்ளதை நாங்கள் அறிந்தோம்” என்று அவர் சொன்னார். 

2018-ஆம் ஆண்டின் போலிச் செய்தி தடுப்புச் சட்டத்தின் 4-ஆவது பிரிவின் கீழ், இந்தப் போலி செய்தி விசாரணைக்கு உட்படுத்தப்படும். இச்சட்ட்த்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படும் முதல் வழக்கு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்களின் குற்றங்கள் நிரூபணமானால், அவர்களுக்கு ரிம.500,000 அபராதம், அல்லது 6 ஆண்டுச் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS