10க்கு 9 மலேசியர்கள் இரவுத் தூக்கமின்றி  தவிப்பு!  -ஆய்வில் திடுக்கிடும் தகவல்

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல்.17-  மலேசியாவில் 10க்கு  9 பேர் இரவு நேரத்தில் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்., கைத்தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதால் அவர்கள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர் என்று நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.   

ஏம் லைஃப் இண்டர்நேஷனல் (AM Life Insurance Sdn.Bhd) நிறுவனத்தால் நடத்தப்பட்ட ‘தூக்க ஆய்வில்’ பதிலளித்த 31 விழுக்காட்டினர், தாங்கள் ஒவ்வொரு நாளும் தூக்கக் கலக்கத்திலேயே இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் 46 விழுக்காட்டினர், இரவு நேரங்களில் திடீரென்று தாங்கள் விழித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

32 விழுக்காட்டினர் தூக்கமின்மையால் தங்களுக்கு காலை நேரங்களில் அதிக சோர்வு ஏற்படுவதாகவும், அதனால் அமைதியற்ற நிலையில் தாங்கள் அன்றாடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆய்வின் வாயிலாக, மலேசியர்களில் 66 விழுக்காட்டினர், ஒரு வாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது தூக்கமின்மையால் தவிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.  

ஒவ்வொரு நாள் இரவும், மக்கள் 7-லிருந்து 9 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்றும், மலேசியர்களில் பெரும்பாலானோர் 6.3 மணி நேரம் தூங்குகின்றனர் என்று அந்த ஆய்வறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. 

பத்திலிருந்து 20 நிமிடத்திற்குள் தூங்கச் செல்லும் மக்கள் தூங்கி விட வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது. ஆனால், மலேசியர்கள் தூங்குவதற்கு சுமார் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால், தங்களின் தூக்கம் பாதிப்படைகிறது என்று பத்தில் ஆறு மலேசியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் அதிக நேரம் கைத்தொலைபேசியில் நேரத்தை செலவிடுவதால், தங்களால் தூங்க முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்” என்று எ.எம் லைஃப் கூறியது.

மன அழுத்தம் மற்றும் கவலையினால் 52 விழுக்காட்டினரால் தூங்க முடியவில்லை. சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் 26 விழுக்காட்டினர் தூங்க இயலாமல் தவிக்கின்றனர் என்றும் அந்த ஆய்வறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS