இந்திய சமூகத்திற்கு சிறப்பு இலாகா; நான்கு அம்சங்களுடன் 'புளூபிரிண்ட்' திட்டம்- சுப்ரா

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல் 20- இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் துறையில் சிறப்பு இலாகா ஒன்று அமைக்கப்படவிருப்பதாக மஇகாவின் தேசிய தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். 10 ஆண்டுக்கால இந்தியர்களின் வளர்ச்சி வியூக வரைத்திட்டத்தில் விரைவாக செய்யக்கூடிய மாற்றங்கள் முதலில் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள புளூபிரிண்ட் எனும் வளர்ச்சி வியூக வரைத்திட்டத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறார். 'போட்டம் 40' என்றழைக்கப்படும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 40 விழுக்காட்டினர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அடிப்படை நோக்கத்துடன் இந்த திட்டம் வரையப்பட்டுள்ளது என இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சுருமான டாக்டர் சுப்ரா கூறினார். 

அறிமுகப்படுத்தபடவிருக்கும் வியூக வரைத்திட்டத்தில் சமுதாயத்திற்கான திட்டங்களை வழிநடத்த நான்கு அடிப்படை அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக டாக்டர் சுப்ரா சொன்னார். முதலாவதாக, சமுதாயத்தில் நிலவும் அடிப்படை தேவைகளை அடையாளம் கண்டு அவற்றை பூர்த்தி செய்ய வரைத்திட்டம் வரையப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன்வழி, வறுமையில் வாழும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் அடிப்படை பிரச்சனைகள் ஆராயப்படும்.

மேலும், குழந்தைகளின் ஆற்றலை அறியும் வகையில் அவர்களிடமுள்ள திறன்களை அடையாளம் கண்டு அவற்றை வெளிக்கொணரும் வகையில் கல்வி வழி வாய்ப்புகளை ஏற்படுத்தப்படும் என சுப்ரா தெரிவித்தார்.

வியூக வரைத்திட்டத்தில் மூன்றாவது முக்கிய அம்சமாக, இந்திய குடும்பத்தினரின் வருமானத்தையும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாக சுப்ரா தெரிவித்தார். குறிப்பாக, இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள், கூடுதல் வருமானத்திற்கான வாய்ப்புகள் மற்றும் வியாபாரத்தில் இந்தியர்களின் ஈடுப்பாட்டை அதிகரித்தல் ஆகிய அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், இந்திய சமுதாயத்தில் நிலவும் சமூகவியல் பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டு தீர்க்கப்படும். குறிப்பாக, இந்தியர்களிடம் நெடுங்கால பிரச்சனையாக இருக்கும் அடையாள ஆவண பிரச்சனைகள், சமயம் சார்ந்த பிரச்சனைகள் ஆகியவை ஆராயப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வகையில் திட்டம் வரையப்படும் என சுப்ரா கூறினார்.

இந்த திட்டங்களை செயல்படுத்த பிரதமர் துறையின் கீழ் சிறப்பு இலாகா ஒன்று உருவாக்கப்படும். அது சிறப்பு அமலாக்க பிரிவாக செயல்படும். அதிலும், மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை விதிக்க, சமூகத்திற்கு தேவையான விரைந்து செய்யக்கூடிய மாற்றங்கள் முதலில் நடைமுறைப்படுத்தப்படும் என டாக்டர் சுப்ரா மேலும் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS