இந்திய இளைஞர்களுக்கான "TN50' கருத்தரங்கு அமைச்சர்கள் கைரி -சுப்ரா வழிநடத்தினர் (VIDEO)

சமூகம்
Typography

கோலாலம்பூர், ஏப்ரல் 20- வரும் 2050ஆம் ஆண்டில் மலேசியாவின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் ‘தேசிய உருமாற்றம் 50’ (TN50) என்ற பிரதமரின் புதிய திட்டத்தில் இந்திய இளைஞர்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்ற இலக்கை மையமாகக் கொண்டு நேற்று புத்ரா உலக வாணிப மையத்தில் மஇகா 'TN50' கருத்தரங்கை நடத்தியது.

பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப், அண்மையில் அறிவித்த இந்தத் தேசியத் திட்டத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் நாடு தழுவிய நிலையில் இளைஞர்களோடு TN50 கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.  

2050ஆம் ஆண்டில் மலேசியா எப்படிப்பட்ட வளர்ச்சியை அடைந்திருக்க வேண்டும்?. அரசியல், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் என்று பலவித துறைகளில் எத்தகைய மாற்றங்கள் தேவை? என்பதன் மீது இளைஞர்களின் கருத்து பரிமாற்றங்கள் இந்தக் கருத்தரங்குகளில் இடம்பெற்றன.

பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் திறன் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் நேற்று நடந்த இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தனர். 

அவர்கள் பகிர்ந்த கருத்துக்களை ஆதரித்து, அவர்களின் ஆசைகள், இலட்சியங்கள் நிறைவேறுவதற்கான வழிகளையும் அந்த முயற்சிகளுக்கு எதிராக விளங்கும் தடைகளையும் விளக்கும் வகையில் மஇகா தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியமும் இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் கைரி ஜமாலுடினும் கருத்தரங்கை வழிநடத்தினர்.

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி, இந்தியர்களின் பொருளாதாரம், அரசாங்க பணிகளில் இந்தியர்களின் பங்களிப்பு, பசுமை தொழில்நுட்ப வளர்ச்சி, இந்தியர்களின் அரசியல் மற்றும் சமுதாய ஒற்றுமை எனக் கருத்தரங்கில் பல்வேறு இலட்சியங்களை 

இளைஞர்கள் பகிர்ந்துக் கொண்டனர். அவர்களின் இந்த குறிக்கோள்களை டத்தோஶ்ரீ சுப்ரமணியமும் அமைச்சர் கைரியும் பாராட்டினர்.

‘வாவாசான் 2020’ அரசாங்கத் திட்டம் இன்னும் மூன்றாண்டுகளில் முடிவடையும் தருவாயில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் புதிய உருமாற்றத் திட்டம் அமலில் இருக்கும். 

2050ஆம் ஆண்டில் நகர், புறநகர், கிராமம் என்று பாகுபாடு இல்லாமல் மக்களின் முன்னேற்றம் பரவலாக இருக்கும். அனைவருக்கும் மருத்துவம், கல்வி, தொழில்நுட்ப வசதிகள் சரிசமமாக கிடைக்கும். இனம், மதம் மற்றும் பாலினம் அடிப்படையில் இல்லாமல், உழைப்பவர் முன்னேறுவர். மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் அவர்களுக்கு ஏற்றவாறு பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும். இதற்கு ஏற்றவாறு   பல தூரநோக்கு சிந்தனைகளுடன் இந்த TN50 (Transformasi Nasional 2050) திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS