ஷா ஆலாமில் சம்பவம்! புகைப் பிடிப்பதைத் தட்டிக்கேட்ட போலீசுக்கு கத்திக் குத்து!

சமூகம்
Typography

ஷா ஆலாம், ஏப்ரல் 21- பெட்ரோல் நிலையத்தில் புகைப் பிடித்துக் கொண்டிருந்த ஆடவனைத் தடுக்க முயன்ற போலீஸ்காரரை அந்த ஆடவன் கத்தியால் தாக்கிவிட்டு ஓடிய துணிகரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காலை 9 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் 32 வயதான லான்ஸ் கோர்பொரல் முகமட் அஸ்லி காயமடைந்தார்.

செக்‌ஷன் 7இல் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஓர் ஆடவன் புகைப் பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்ட போலீஸ்காரர் முகமட் அஸ்லி அந்த ஆடவனைக் கண்டித்தார். ஆனால், இவர் சொல்வதைக் கேட்காமல் அந்த ஆடவன் தொடர்ந்து புகைப் பிடித்துக்கொண்டிருந்தான். 

அவன் உடம்பில் குண்டர் கும்பல் சம்பந்தப்பட்ட பச்சைக் குத்தியிருந்ததைக் கண்ட முகமட் அஸ்லி சந்தேகம் அடைந்து அவனைப் பின்தொடர்ந்துள்ளார். 

கோபமுற்ற அந்த நபர் இவரைச் சராமாரியாகத் தாக்கினான். இதனால் முகமட் அஸ்லி நிலைகுலைந்துப் போனார். அந்த நேரம் பார்த்து கத்தியை எடுத்து இவரின் தொடையில் பலமாக குத்திவிட்டு சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டான்.

பெட்ரோல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா ஆதாரத்தையும் அருகில் இருந்த சாட்சிகளின் ஆதாரத்தையும் கொண்டு சம்பந்தப்பட்ட ஆடவனைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS