பூலாவ் தியோமானில் நீரில் மூழ்கிய ராஜிகேஷுக்கு கடல்படை அவசர உதவி!

சமூகம்
Typography

குவாந்தான், ஜூன்.18- பூலாவ் தியோமானில் கிட்டத்தட்ட நீரில் மூழ்கி, மூச்சுத் திணறலுக்கு உள்ளாகிய எஸ்.ராஜிகேஷ் என்ற ஒரு வயது  ஆண் குழந்தைக்கு உடனடியாக அரச மலேசிய கடற்படை அமலாக்கத் துறையின் அவசரக் கருணை உதவிப் பிரிவினால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கம்போங் ஆயர் பத்தாங்கில் அந்தக் குழந்தை தண்ணீரில் மூழ்கிய குழந்தையை அதன் தாயார் தக்க தருணத்தில் தண்ணீரிலிருந்து குழந்தையை மீட்டுவிட்டார். எனினும், மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி குழந்தை சுயநினைவை இழந்தது.

இந்நிலையில், பூலாவ் தியோமான் கிளினிக்கிலிருந்து இரவு 7.57 மணிக்கு கிழக்குப் பிராந்திய கடற்படை அமலாக்க பிரிவுக்கு அவசர உதவி கேட்டு தகவல் வந்ததாக அதன் இயக்குனர் டத்தோ மாமு சைட் தெரிவித்தார். 

உடனடியாக கடற்படையின் அதிக வேகப்படகு அனுப்பப்பட்டு, தீவுக் கிளினிக்கிலிருந்து அந்தக் குழந்தை தஞ்சோங் கெமுக் துறைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ரொம்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.

தற்போது குழந்தை ராஜிகேஷ், ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டது என்று தெரியவந்துள்ளது. இதுபோன்ற ஆபத்து அவசரக் காலத்தில் 24 மணிநேரமும் கிழக்கு கடற்படை பிராந்தியம், மக்களுக்கு கருணைச் சேவை வழங்கி வருகிறது என்று டத்தோ மாமு சைட் சுட்டிக்காட்டினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS