செந்தூலில் போலீஸ் அதிரடி; ஆயுதமேந்திய 2 கொள்ளையர்கள் பலி!

சமூகம்
Typography

 கோலாலம்பூர், ஜூன்.18- ஒரு கட்டுமானப் பகுதியில் இருந்து போலீசாரின் பிடிக்குச் சிக்காமல் தப்பித்து ஓடமுயன்ற இரு கொள்ளையர்கள், பின்னர் போலீசாருக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தியதால், போலீசார் நடத்திய எதிர்த்தாக்குதலில் மாண்டனர்.

பாண்டார் பாரு செந்தூல் மற்றும் ஜாலான் சிகாம்புட் ஆகிய இரு இடங்களில் இவர்கள் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானார்கள். அதிகாலை 3.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் இறந்த இரு கொள்ளையர்களில் ஒருவன் 26 வயதும் மற்றொருவன் 46 வயதும் கொண்டவன் எனப் போலீசார் கூறினர்.

போலீசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இங்குள்ள கட்டுமானப் பகுதியிருந்து இந்த நபர்களும் இரு புரோட்டன் வீரா கார்களில், அவசரமாக வெளியேறுவதைக் கண்டனர். இதனால் போலீசார் இவர்களைப் பின்தொடர்ந்தனர்.

செந்தூல் பண்டார் பாரு பள்ளிவாசலுக்கு அருகில் இந்த இரு நபர்களும் வெவேறு திசைகளில் காரில் தப்பியோடினர். போலீசார் இரு பிரிவாக இவர்களை விரட்டிய போது 46 வயதுடைய ஆசாமி, தன்னைத் தடுக்க போலீசாரின் வாகனம் மீது சில முறை மோதினான். பின்னர் போலீஸ் வாகனத்தை நோக்கி சிலமுறைகள் சுட்டான். 

இதனால், போலீசார் பதில் நடவடிக்கையில் இறங்கினர். அந்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அங்கேயே மாண்டான்.

மற்றொரு கொள்ளையன் ஜாலான் சிகாம்புட்டில் போலீசாரால் மடக்கப்பட்டான். தப்பியோட வழியில்லாத போது அவனும் போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்திய போலீசாருக்கு பலியானான்.

இவர்கள் இருவரின் கார்களிலும் துப்பாக்கிகள், கத்திகள், இரும்பு வெட்டும் கருவிகள், கையுறைகள், முகமூடிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 

மேலும் கார்களுக்குள் நிறைய இரும்புப் செப்புக் கம்பி வயர்கள் இருந்தன. இவை அந்த கட்டுமானப்பகுதியில் திருடப்பட்டவை எனத் தெரிகிறது என கோலாலம்பூர் போலீஸ் படைத்  துணைத் தலைவர் டத்தோ மஸ்லான் லாஷிம் தெரிவித்தார். ஏற்கெனவெ இவர்கள் இருவர் மீதும் கொள்ளை, போதைப் பொருள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன என்று அவர் சொன்னார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS