சுங்கைப்பட்டாணி, ஆக.18- 16 வயது தங்கையைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் 18 வயது மற்றும் 20 வயதுடைய இரு அண்ணன்களைப் போலீசார் கைது செய்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுடைய அண்ணன் கடந்த 2015-ஆம் ஆண்டின் இறுதியிலிருந்தே தன் தங்கையிடம் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மற்றொரு அண்ணனும் பாலியல் பலாத்காரத்துடன் தனது தங்கையைத் தனக்காக திருடச் சொல்லியும் கட்டாயப்படுத்தி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்று கோலமூடா துணை தலைமைப் போலீஸ் சூப்ரிண்ட். சைஃபி அப்துல் ஹமிட் கூறினார்.

இந்த வன்கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத தங்கை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதனிடையே, தனது தந்தை இறந்து ஆறு மாதங்களுக்குப் பின்னர் தன் தாய் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்யத் தொடங்கியதாக அந்தப் பெண் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி நிகழ்ந்த கற்பழிப்பு சம்பவம் தான் ஆக அண்மையில் நடந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனைப் பற்றி அந்தப் பாதிக்கப்பட்ட பெண் தனது நோய்வாய்ப்பட்ட தாயிடம் கூறிய போது உடல்நலக் குறைவு காரணமாக அவரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்று சைஃபி அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

மேலும், தனது மூத்த அண்ணன் தன்னை திருடச் சொல்லி கட்டாயப்படுத்தியபோது மறுத்ததால் ஆத்திரத்தில் அடித்தது மட்டுமல்லாமல் சாலை வரை தன்னை தர தரவென்று இழுத்துச் சென்றதால் உடல் முழுவதும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாக அந்தப் பெண் கூறினார் என போலீஸ் அதிகாரி சைஃபி அப்துல் ஹமிட் அவர் தெரிவித்தார்.

பார்சிலோனா, ஆக.18- பார்சிலோனாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.  

பார்சிலோனாவில் நடந்த இந்தத் தாக்குதல் வெறுக்கத்தக்க செயல் என்று பிரதமர் நஜிப் இன்று தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

நேற்று வேன் ஒன்று திடீரென்று கூட்டத்திற்கு உள்ளே பாய்ந்து மக்களை மோதித் தள்ளிய பயங்காரவாதத் தாக்குதலில் 13 பேர் பலியானதோடு,  100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  

இந்தச் சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் ஒரு ஸ்பானியர் மற்றும் ஒரு மொரோக்கோ நாட்டுப் பிரஜைரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் வேன் ஓட்டுனர் தப்பிவிட்டதாக தெரிகிறது.

 

அலோர் ஸ்டார், ஆக.18- கெடாவிலுள்ள முஸ்லிம் ஆண்கள், வெளிநாடுகளில் இன்னொரு திருமணம் செய்ய கொண்டால், அதனைச் சட்டப்பூர்வமாக்க முதல் மனைவியின் சம்மதமோ அல்லது அங்கீகாரமோ தேவையில்லை என்று மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாறாக, அவரது கணவர் இன்னொரு திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை முதல் மனைவியிடம் மாநில அரசே தெரிவித்து விடும் என அது கூறியது.

இது, தாய்லாந்து அல்லது பிற நாடுகளில் திருமணம் புரிந்து கொள்ளும் கெடா மாநில முஸ்லிம் ஆண்களின் திருமண அங்கீகாரத்தை சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். 

மேலும், திருமணத்தைப் பதியாதவர்களுக்கான தற்போதைய அபராதத் தொகையான 3,000 ரிங்கிட்டை இனிமேல் 300-இல் இருந்து 400 ரிங்கிட்டாக குறைக்கவும் மாநில அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக சமய விவகாரக்  குழுவின் தலைவர் டத்தோ முகமட் ராவி அப்துல் ஹமிட் தெரிவித்தார். 

சட்டத்திற்கு எதிரான திருமணங்களைக் குறைப்பதற்கான முயற்சியே இது என்றார் அவர். இது போன்று திருமணப் புரிபவர்களின் குழந்தைகளுக்கு கல்வி, சுகாதார மற்றும் குடியுரிமைக்கான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

கணவன் அல்லது மனைவி இறந்துவிட்டாலோ விவாகரத்து ஏற்பட்டுவிட்டாலோ அவர்கள் சிரமத்தை எதிர்நோக்குவர் என்று டத்தோ முகமட் ராவி கூறினார். 

இது போன்ற பிரச்சனைகளில் தவிக்கும் குழந்தைகள் மற்றும் மனைவிமார்களைப் பாதுகாப்பதே கெடா மாநில அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

காஜாங்,ஆக.18- விவாகரத்துப் பெற்ற மாதுவின் காதலன் ஒருவன் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மாதுவுடைய 12 வயது மகளைக் கற்பழித்த சம்பவம் தெரிய வந்துள்ளது. சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட ஆடவனைப் போலீசார் கைது செய்தனர்.

40 வயது மதிக்கத்தக்க அந்த காதலன் தன்னுடைய மகளைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளதாக சம்பந்தப்பட்ட தாய் கடந்த வாரம் வியாழக்கிழமை போலீசில் புகார் செய்துள்ளதாக காஜாங் ஒசிபிடி அமாட் சாவிர் முகமட் யுசோப் கூறினார். 

தன்னுடைய மகள் எழுதிய டைரியைப் படித்தப் பிறகுதான் அவளுக்கு இக்கொடுமை நடந்துள்ளது தெரியவந்தது என அத்தாய் வாக்குமூலம் கொடுத்தார் என ஒசிபிடி அமாட் தெரிவித்தார்.

வேலைக் காரணமாக சீனாவிற்குச் சென்றிருந்த போதுதான் அந்தக் காமுகன் தன் மகளை மானபங்கம் செய்துள்ளான் என மிகவும் வருத்தத்துடன் அந்த தாய் தெரிவித்தார்.

அந்த காமுகனை திங்கட்கிழமை இரவு 11 மணியவில் போலீசார் கைது செய்தனர். ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் அந்த நபர் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்கப்படுவார். குற்றவியல் சட்டம் 376 பிரிவின் கீழ் கற்பழிப்பு குற்றத்திற்காக அவ்வாடவர் விசாரிக்கப்படுவார் என அமாட் கூறினார். 

கோலாலம்பூர்,ஆக.18- தேசிய தின மாதத்தையொட்டி மின்னல் எப்.எம் வானொலி, பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்பி வருகின்றன. அந்த வகையில் தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணனின் தயாரிப்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.15க்கு, மலேசிய மக்களின் நற்பண்புகளை பிரதிபலிக்கும் காணொளியை நேயர்கள் மின்னல் எப்.எம் முகநூல் பக்கத்தில் காணலாம்.

மலேசியர்கள் பொறுப்பானவர்களா என்ற கேள்விக்கானப் பதிலை இன்று காணொளி வழி பார்க்கலாம். பொதுமக்களுக்குத் தெரியாத சில இடங்களில் கேமராவை மறைத்து வைத்து, அதற்கு பிறகு அறிவிப்பாளர் சசி தன்னுடைய கைப்பை தவற விடுகிறார். கைப்பை கீழே விழுவதைப் பார்க்கும் பொதுமக்கள் அடுத்து என்ன செய்கிறார்கள் என்பது தான் நிகழ்ச்சியின் சிறப்பு.

கேமராவை மறைத்து விட்டு அறிவிப்பாளர் சசி எப்படி பொதுமக்களோடு பேசினார், அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை மின்னல் எப்.எம் முகநூலில் பதிவேற்றம் செய்திருக்கும் காணொளி மூலமாக நேயர்கள் பார்க்கலாம். அதே நேரத்தில் அங்கு நடந்த சுவாரசியமான சில விஷயங்களை மின்னல் எப்.எம் சசி பிற்பகல் மணி 1.15க்கு பகிர்ந்து கொள்ள போகிறார். 

மலேசியர்களின் நற்பண்புகள், நேயர்களின் தேசிய தின வாழ்த்து, மலேசியராக இருப்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டிய பல அம்சங்கள் இந்த தேசிய தின சிறப்பு காணொளியில் நேயர்கள் பார்க்கலாம்.

மின்னல் எப்.எம் முகநூல் முகவரி www.facebook.com/RTMMINNALfm

பெந்தோங்,ஆக.17- இன்று கெந்திங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தின் 4ஆவது மாடியிலிருந்து கார் ஒன்று கீழே பாய்ந்ததால் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதிகாலை 4.15 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் 50 வயதுடைய வி.பழனிசாமி என்பவரும் சீன நாட்டுp பிரஜையான 43 வயது மதிக்கத்தக்க மிங் சன் மாவ் என்பவரும் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிப்பங்கைச் சேர்ந்த வணிகரான பழனிசாமி ஓட்டி வந்த அக்ஸியா ரக கார் நான்காவது மாடியிலிருந்து தரைத் தளத்திற்கு இறங்கும் பொழுது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவற்றை மோதி, உடைத்துக் கொண்டு பூமியில் வந்து விழுந்து நொறுங்கியது.

சுமார் 13 மீட்டர் உயரத்திலிருந்து அந்தக் கார் அருகிலிருந்த பூங்காவில் தலைகீழாக கவிழ்ந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காரினுள் இருந்த இருவருக்குமே தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் கெந்திங் மலையில் உள்ள கிளிக்குக்குச் செல்லும் முன்னரே இறந்து விட்டதாக மாவட்ட சூப்பரிண்டண்டன் முகமட் மன்சோர் முகமட் நோர் கூறினார்.

 

பினாங்கு, ஆக.17- இன்று காலை ஜாலான் கம்போங் பெனாகா டுவாவில் புரோட்டோன் வாஜா கார் ஒன்று மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். 

17 வயதுடைய நோர் அலிஹாடி மற்றும் 15 வயது மிமி மாரியாம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் படுகாயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக கப்பளா பத்தாஸ் மருத்துவமனைக்குக் அனுப்பப்பட்டனர். 

விடியற்காலை 3.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் காரில் சிக்கிக் கொண்ட நான்கு ஆண்களையும் சில மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். 

வாகன ஓட்டுனர் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என வடக்குக்செப்பராங் பிரை  மாவட்ட போலீஸ் துணை ஆணையர் அஸ்மி அடாம் தெரிவித்தார். 

More Articles ...