கோலாலம்பூர், அக்.16- பாலி நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் ஆசியா விமானம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் 22,000 அடிகள் கீழ் இறங்கியபோது அதில் பயணித்த அனைவருமே இன்று தான் தங்களின் இறுதிநாள் என்று முடிவெடுத்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்தது.

ஏர் ஆசியாவிற்கு சொந்தமான QZ535 ரக விமானம் ஒன்று நேற்று ஆஸ்திரேலியா பெர்த் நகரிலிருந்து பாலி நோக்கி பறந்து கொண்டிருந்தது. ஆஸ்திரேலியா மீது 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் திடீரென 10,000 அடி வரை கீழ் இறங்கியது. 

எந்த முன் அறிவிப்பும் இன்றி சட்டென்று 22,000 அடிகள் விமானம் கீழ் இறங்கியதால் அதில் பயணித்த 145 பயணிகள் உட்பட விமான பணியாளர்களும் மரண பயத்தில் அலறினர். விமானம் சட்டென்று கீழே இறங்கியதும் அவசர நேரத்தின் போது செயல்படும் சுவாச கருவிகள் தலைக்கு மேல் வந்து விழுந்தன.

இதனால் பயத்தில் அலறிய பயணிகள் தங்களின் கைப்பேசிகளை எடுத்து குடும்பத்தினருக்கு குறுந்தகவல்கள் அனுப்பியதாக ஆஸ்திரேலியா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட அந்த விமானத்தை பொறியியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக இந்தோனேசிய ஏர் ஆசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 கோலாலம்பூர், அக்.15- ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக செயல்நிலை அதிகாரி டான்ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ் நேற்று தம்முடைய காதலியான தென்கொரியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக 'சோல்' என்று மட்டுமே பெயர் அறியப்பட்ட கொரியப் பெண்ணை டான்ஶ்ரீ டோனி காதலித்து வந்தார்.

மிகவும் மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர். மணமகள் சோல் பற்றி அதிகப் படியான தகவல்கள் எதுவும் இல்லை.

நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு மணமகள் பெயர் 'சோல்' என்ற ரீதியில் மட்டுமே அவர் அறியப்பட்டவர் ஆவார்.

இந்தத் திருமணத்தில், முக்கிய விருந்தினர்களாக ஏர் ஆசியா நிறுவனத் தலைவரும் 'டியூன்' குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியுமான டத்தோ கமாருடின் மெரானுன், சி.ஐ.எம்.பி. வங்கித் தலைவர் டத்தோஶ்ரீ நாசிர் துன் ரசாக், முன்னாள் அனைத்துலக வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் டான்ஶ்ரீ ரபிடா அஜீஸ் ஆகியொர் கலந்து சிறப்பித்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பத்துபகாட், அக்.15- மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகாவான ஜாக்கிமுடன் தொடர்பு வைத்துக் கொள்வதை நிறுத்திவிடும்படி ஜொகூர் சமயத் துறையான ஜாய்ஜ் அமைப்புக்கு ஜொகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.

ஜொகூர் மாநிலத்திலுள்ள முஸ்லிம் சமயப் பிரசாரகர்கள் தொடர்பாக சோதனைகளை நடத்தும்படி மாநில அமைப்பான ஜாய்ஜுக்கு அவர் உத்தரவிட்டிருப்பதோடு அவர்கள் ஜொகூர் மாநிலத்திற்கு பொருத்தமற்றவர்கள் எனத் தெரியவந்தால் அவர்களுக்கான அங்கீகாரத்தை மீட்டுக்கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கூட்டரசு அரசாங்க இலாகாவான ஜாக்கிமுடன் எது குறித்தும் கலந்து பேசவேண்டாம் என்றும் அதில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றும் மாநில சமயத் அமைப்பான ஜாய்ஜுக்கு ஜொகூர் சுல்தான் கோரிக்கை விடுத்தார். 

மேலும், 'முஸ்லிம்களுக்கு மட்டும்...,' என்ற அறிவிப்புப் பலகையுடன் சலைவை மையம் நடத்தப்பட்டதற்கு ஜொகூர் சுல்தான் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவரது கருத்துக்கு முரணாக பிரசாரம் செய்த ஜாக்கிம் அமைப்பின் முன்னாள் அதிகாரியான ஷாமிஹான் மாட் ஜின்னின் போக்கையும் ஜொகூர் சுல்தான் கண்டித்தார். 

'ஷாமிஹானின் பேச்சு திமிர்த் தனத்துடன் உள்ளது. அவர் மற்ற இனத்தவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார். இதனால், பலதரப்பினரும் கோபமடைந்துள்ளனர். ஆனால், 'நான் அப்படியெல்லாம் பேசவில்லை' என்று இப்போது அவர் மறுத்து இருக்கிறார். 

பார்க்கப்போனால், இந்த உஸ்தாஷ் பொய் சொல்லுவதிலும் கெட்டிக்காரர் போல இருக்கிறது. இவரிடமிருந்து நாம் எப்படி நல்லதைக் கற்றுக் கொள்ளமுடியும்?' என்று ஜொகூர் சுல்தான் கேள்வி எழுப்பினார்.

 

 சிரம்பான், அக்.15- தீப ஒளித் திருநாளில் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக போர்ட்டிக்சனிலுள்ள லெக்ஸிஸ் தங்கும் விடுதிக் குழுமத்தின் ஊழியர்கள், சிரம்பானிலுள்ள நந்தீசர் பராமரிப்பு இல்லத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு விதவிதமான உணவு விருந்து அளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த இல்லத்தில் 43க்கும் அதிகமான ஆதரவற்ற பிள்ளைகள், தனித்து வாழும் தாய்மார்கள், மற்றும் முதியவர்கள் என 2 வயது குழந்தை முதல் 88 வயது முதியவர் வரை பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த விருந்தில் வழங்கப்பட்ட வகை வகையான உணவுகளில் பிள்ளைகள் திளைத்தனர். மேலும், அவர்களுக்கு இந்தத் தங்கும் விடுதிக் குழுமத்தின் ஊழியர்கள் பல்வேறு திரையுலகக் கார்ட்டூன்  நாயகர்களின் உடைகளில் வலம் வந்து ஆடல், பாடல் நிகழ்ச்சிகளையும் வழங்கினர்.

கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்தை இந்த ஊழியர்கள் ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுடன் குதூகலமாகக் களித்தனர். மேலும் இந்தப் பராமரிப்பு இல்லத்திற்கு பால் பவுடர், மைலோ, சமையல் எண்ணெய், உள்பட பல்வேறு உணவுப்பொருள்களையும் வழங்கினர்.

தீபாவளி போன்ற பெருநாள் கால சந்தோஷங்களை, இத்தகைய தேவையுள்ள, வசதிக் குறைந்த மக்களுடன் களிப்பதுதான் உண்மையான சந்தோஷம் என்பதை உணர்த்தும் நோக்கிலேயே தங்களுடைய ஊழியர்கள் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ததாக லெக்ஸிஸ் தங்கும் விடுதி குழுமத்தின் தலைவர் மண்டி சியூ தெரிவித்தார்.

 

பட்டர்வொர்த், அக்.15- தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறை எதுவும் பினாங்கு மாநிலத்தில் இலலை என்று உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பினாங்கில் 40க்கும் மேற்பட்ட மார்க்கெட்டுகள், மற்றும் பேரங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புச் சோதனைகளின் போது, அத்தியாவசியப் பொருள்கள் போதுமான அளவில் இருப்பது கண்டறியப்பட்டதாக அமைச்சின் துணை இயக்குனர் முகமட் நோர் மூசா தெரிவித்தார்.

அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கி அக்.22ஆம் தெதி வரையில் வர்த்தக மையங்களில் பொருள்களின் விலைக் கட்டுப்பாட்டுச் சோதனைகளும் நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

மேலும், வியாபாரிகள் தங்களது பொருள்களின் விலைப்பட்டியலை தெளிவாக வைக்கவேண்டும். அங்கீரிக்கப்பட்ட எடைக் கருவிகளையே பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கோழிகள், முட்டைகள், நாட்டு ஆட்டு இறைச்சி, பழுத்த மிளகாய், தக்காளி, தேங்காய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை விலைக் கட்டுப்பட்டுத்தப்பட்ட பொருள்களின் பட்டியலில் உள்ளன என்று முகமட் நோர் மூசா சுட்டிக்காட்டினார்.

 கங்கார், அக்.15- ஆறாம் வகுப்பு மாணவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள், கார் ஒன்றுடன் விபத்துக்கு இலக்காகி சம்பந்தப்பட்ட மாணவன் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தான். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற மற்றொரு மாணவன் படுகாயமடைந்தான்.

கங்கார், ஜாலான் சுங்கைப் பாடாங் சாலைச் சந்திப்பில் இருந்து மோட்டார் சைக்கிளில் முகம்மட் இக்மால் என்ற அந்த 12 வயது மாணவன் வெளியான போது மற்றொரு கார் சென்ற பாதைக்குள் குறுக்கே புகுந்து விட்டதாக தெரிகிறது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முகம்மட் இக்மால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சக மாணவனான 12 வயதுடைய முகம்மட் ஷாரிப் அய்மான் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்கு உள்ளான பெரோடுவா விவா காரின் ஓட்டுனர் காயமின்றி தப்பினார். 

 ஜொகூர்பாரு, ஆக்.14- தீபாவளியை முன்னிட்டு ஜொகூர் போலீஸ் படையினருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார் ஜொகூர் சுல்தான்.

'நானும் என் குடும்பத்தினரும் தீபாவளி பெருநாளை முன்னிட்டு அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

'தீபாவளி நல்வாழ்த்துகள்' என்று அவர் தமிழிலேயே உச்சரித்து வாழ்த்துக் கூறி, அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். 

மேலும், 'உங்களின் நற்பணிகளை தொடருங்கள். நேர்மையைப் போற்றுங்கள்' என்று அவர் தம்முடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

More Articles ...