கோலாலம்பூர், ஏப்ரல் 25- மூங்கில் வழி பார்த்து மாயமான எம்எச்370 விமானத்தைக் கண்டுப்பிடிப்பேன் என்று கூறி இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ராஜா போமோ, தன் செயல்கள் அனைத்தும் பொய்யானவை என ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரினார். 

மாயமான விமானம் மற்றும் அண்மையின் நாட்டில் பெரும் சர்ச்சை உண்டாக்கிய கிம் ஜோங் நாம் கொலை உட்பட பல சந்தர்ப்பங்களில் தனது மந்திர சக்தியினால் நம்மை செய்வதாக கூறி காணொளிகளை வெளியிட்டார் இப்ராஹிம் மாட் ஜின் எனும் ராஜா போமோ. இது பலரது கண்டனத்திற்கு ஆளானவேளை, இஸ்லாம் மதத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக அவர் மீது புகார் செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று மாலை கூட்டரசு பிரதேச இஸ்லாம் சமய இலாகாவில் தான் செய்த தவறுகளுக்காக ராஜா போமோ மன்னிப்பு கோரினார். அப்போது, மூங்கில் குழாய் வழி பார்ப்பது, மற்றும் இளநீர் வைத்துக் கொண்டு மந்திரம் செய்வது என தான் செய்த செயல்கள் அனைத்தும் பொய்யானவை என அவர் வாக்குமூலம் தந்தார். 

"நாட்டிற்கும் சமயத்திற்கும் அவமதிப்பை தரும் வகையில் நடந்து கொண்டதற்காக நாட்டில் உள்ள முஸ்லீம்களிடமும் முஸ்லீம் அல்லாதவர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என அவர் கூறினார்.

மேலும், தனிநபர் ஒருவரின் உத்தரவினால்தான் தாம் அவ்வாறான காரியங்களில் ஈடுப்பட்டதாகவும் ஆனால் யார் அந்த நபர் என்பதைக் கூற முடியாது எனவும் அவர் கூறினார். 

 

ஷா ஆலாம், ஏப்ரல் 25- சிலாங்கூரில் உள்ள பள்ளிகளுக்கு ரிம. 1.95 கோடி உதவித் தொகையை மாநில அரசு ஒதுக்கியுள்ளது . இந்த உதவித் தொகையின் வழி சிலாங்கூரில் உள்ள 578 பள்ளிகள் நன்மையடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முதல் கட்டமாக தெற்கு சிலாங்கூரில் உள்ள பள்ளிகளுக்கு ரிம. 2.7 மில்லியன் வழங்கப்படும். இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பித்த பள்ளியின் தற்போதைய நிலை மற்றும் மானவர்களின் எண்ணிக்கையை பொருத்து பள்ளிகளுக்கு உதவித் தொகை நிர்மானிக்கப்படும் என்று சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் நிக் நஸ்மீ கூறினார்.

உதவி பெரும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த உதவித் தொகை 3 கட்டங்களாக வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

காஜாங், சிஜங்காங், தெலுக் டத்தோ, மோரிப், தஞ்சோங் சிப்பாட், குவாங், ரவாங், தாமான் டெம்பிளர், டிங்கில், சுங்கை பீலெக், பத்து கேவ்ஸ், கோம்பாக், புக்கிட் அந்தாரபங்சா, செமினி, பாங்கி மற்றும் பாலாகோங் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பள்ளிகளே முதல் கட்ட உதவித் தொகையைப் பெறுகின்றன.

புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல் 25- செபெராங் பிறை நகராண்மைக் கழக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் உணவகங்கள், சந்தைகள் மற்றும் சாலையோர கடைகளில் வரும் ஜூன் மாதம் முதல் அந்நிய நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தடைச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் நிரந்தர வசிப்பிட உரிமை உள்ளவர்களையும் வேலைக்கு அமர்த்தக்கூடாது என்று இந்த புதிய தடைச் சட்டத்தில் உள்ளது.

அதுமட்டுமின்றி, மலாய், ஆங்கிலம், சீனம் அல்லது தமிழ் மொழிகளைத் தவிர வேறு எந்த மொழிகளிலும் கடைகளின் பெயர் பலகை இருக்கக் கூடாது என்றும், ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் அந்நிய தொழிலாளர்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக் கூடாது என்றும் அந்த தடைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த தடைச் சட்டத்திற்கு எதிராக செயல்படுவோர் மீது கடுமையான தண்டனை எடுக்கப்படும் என்று செபெராங் பிறை நகராண்மைக் கழகத்தின் தலைவர் டத்தோ மாய்முனா முகமட் சாரிப் எச்சரித்தார்.

 

 கோலாலம்பூர், ஏப்ரல்.25- அடுத்த ஆறு மாத காலக் கட்டத்திற்குள் தங்களுக்கென ஒரு சொந்த வீட்டை வாங்கி விடவேண்டும் என்பதுதான் மலேசியர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களின் விருப்பம் என்பது அண்மைய ஆய்வுகளில் இருந்து தெரிய வந்திருப்பதாக மலேசிய சொத்து விற்பனை மற்றும் வீடமைப்பு திட்ட மேம்பாட்டாளர்கள் சங்கம் (ரெடா) கூறியுள்ளது.

ஆனால், அவர்களின் இந்த விருப்பங்களுக்கு மிகப்பெரிய தடையாக விளங்குவது மிகக் கடுமையான கடன் விதிமுறைகள்தான் என்று அச்சங்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ எப்.டி. இஷ்கந்தார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக 1,655 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இவர்களில் 56 விழுக்காட்டினர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் சொந்த வீட்டை வாங்குவதற்கான திட்டத்தில் இருப்பவர்கள் எனத் தெரியவந்தது. இந்தக் கருத்துக் கணிப்பு கேஎல்சிசி வட்டாரத்திலும் கோலாலம்பூர் மையப்பகுதியிலும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிட்டது.

இவர்களில் 38விழுக்காட்டினர் முதன்முறையாக வீடு வாங்குபவர்கள். 30விழுக்காட்டினர் மச்றுபடியும் வீடு வாங்குபவர்கள். 23விழுக்காட்டினர் முதலீட்டுக்காக வீடு வாங்க நினைப்பவர்கள். 6விழுக்காட்டினர் வெளிநாட்டினர். இதர 3விழுக்காட்டினர் வாடகைக்கு வாழ்ந்து வருபவர்கள் என்று 'ரெடா'  சங்கத்தின் ஆய்வு கூறுகிறது.

 

ஈப்போ, ஏப்ரல் 25- நாட்டின் 15ஆவது மாமன்னராக முடிசூட்டப்பட்ட சுல்தான் முகமட்டைப் பாராட்டி தைப்பிங் மசீச அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் காணப்பட்ட எழுத்துப் பிழை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு வாரமாக சங்க அலுவலகத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பதாகையில் உள்ள எழுத்துப் பிழையை நேற்று காலை சமூக வலைதளங்களில் பார்த்தப் பிறகுதான் உணர்ந்ததாக தைப்பிங் மசீச கிளைத் தலைவர் ஆங் சுய் எங் கூறினார்.

உடனடியாக அந்த பதாகையை இறக்கிவிட்டு புதிய பதாகையைத் ஏற்றியதாகவும் அவர் சொன்னார். 

முடிசூட்டு விழாவிற்கான மலாய் மொழி சொல்லான ‘Pertabalan’ என்பதற்கு பதிலாக, ‘Perbatalan’ என்ற சொல் அந்த பதாகையில் இடம் பெற்றிருந்தது. ‘Perbatalan’ என்பதற்கு ‘ரத்துச் செய்யப்பட்டது’ என்று பொருளாகும்.

இதற்காக மாமன்னரிடமும் பொதுமக்களிடமும் மன்னிப்பு கேட்பதாக ஆங் கூறினார். மசீச நாட்டிற்கும், மக்களுக்கும், மாமன்னருக்கும் என்றுமே விசுவாசமாக இருக்கும் என்பது உறுதி என்றும் அவர் சொன்னார்.

கோலாலம்பூர், ஏப்ரல் 25- ஐஎஸ் தீவிரவாதக் கும்பலுக்கு ஆதரவளித்ததற்காக 21 வயது அஸிசி அப்துல்லாவிற்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம்.

வாட்சாப், வீச்சாட், டெலிகிராம் போன்ற தொலைப்பேசி செயலிகள் மூலமாக மக்களை அச்சுறுத்தும் செய்திகளைப் பரப்பியதாகவும் ஐஎஸ் கும்பலுக்கு சம்பந்தமுடைய புகைப்படங்கள் மற்றும் புத்தகங்களை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றங்களை ஒப்புக்கொண்ட அஸிசி, மீண்டும் இக்குற்றங்களைச் செய்யமாட்டேன் என்று கூறியபோதும்,  ஐஎஸ் கும்பலுக்கு ஆதரவளிப்பது மலேசியாவில் பெரும் குற்றம் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்த, அஸிசிக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று துணை பிராசிகியூட்டர் அஸ்லினா நீதிபதியிடம் கோரினார்.

இதன் பின்னர், அஸிசிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்புக் கூறினார்.

கோலாலம்பூர், ஏப்ரல் 25- தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட சமய பள்ளி மாணவன் முகமட் தாகிப் அமின் டைரியில் (நாள்குறிப்பு) பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. தன்னையும் தன் நண்பர்களையும் பள்ளி கண்காணிப்பாளர் அடித்து துன்புறுத்தியதைப் பற்றி அம்மாணவன் அந்த டைரியில் எழுதியுள்ளான். 

பலமுறை ரப்பர் குழாயினால் கால்களில் தாக்கப்பட்ட அந்த சிறுவனின் கால்கள் துண்டிக்கப்பட்டு தற்போது கோமா நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை அந்த பள்ளியின் கண்காணிப்பாளர் தினமும் அடித்து துன்புறுத்துவதை அவன் அந்த டைரியில் குறித்து வைத்திருப்பது நெஞ்சை நெகிழ வைத்துள்ளது என்று சிறுவன் முகமட் தாகிப்பின் உறவினர் சுராய்டா அகமட் கூறுகிறார். சில சமயம் அந்த கண்காணிப்பாளர் முகமட் தாகிப்பையும் அவனது நண்பர்களையும் இரவில் தூங்கவிடாமல் அடிப்பது, குத்துவது என்று பல வன்முறைகளைப் புரிந்துள்ளான். 

மாணவர்களின் கால்களில் ரப்பர் குழாயினால் தினமும் அடிப்பதை அந்த கண்காணிப்பாளர் ஒரு வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் அந்த டைரியில் எழுதப்பட்டுள்ளது. 

“கடவுளே, என் தாயின் மனக் கதவை திறந்து, என்னை வேறு நல்ல பள்ளியில் சேர்க்க வழி செய்வீராக. என்னால் இந்த கொடுமைகளைத் தாங்க முடியவில்லை. இந்தக் கொடுமைகளிலிருந்து என்னைக் காப்பாற்று” என்று முகமட் தாகிப் தன் டைரியில் எழுதியது மனதை உருக்குகிறது.

முகமட் தாகிப்பை தினமும் கால்களில் ரப்பர் குழாயினால் அடித்ததில், இரண்டு கால்களிலும் தொற்றுக் கிருமிகள் பரவி இரத்த நாளங்களும் தசைகளும் சேதமாயின. மேலும் இந்தத் தொற்றுக் கிருமிகள் உடம்பில் பரவாமல் இருக்க முகமட் தாகிப்பின் இரண்டு கால்கலையும் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கால்கள் துண்டிக்கப்பட்டதால் அவன் நினைவிழந்து கோமா நிலைக்கு ஆளாகியுள்ளான். மேலும் உடம்பில் பல இடங்களில் அடித்து துன்புறுத்தப்பட்டதால் கிருமிகள் பரவி, வீக்கங்கள் ஏற்பட்டு, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் முகமட் தாகிப் இருக்கிறான்.

அந்த சமயப் பள்ளியின் கண்காணிப்பாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சிறுவன் முகமட் தாகிப் உட்பட இதர 15 மாணவர்களையும் ரப்பர் குழாயினால் அடித்தது, உடம்பில் பல இடங்களில் குத்தியது என்று அந்த கண்காணிப்பாளர் துன்புறுத்தியது பள்ளியின் கண்காணிப்பு கேமிரா வழி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போலீசார் குறிப்பிட்டனர். 

More Articles ...