பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 7-  எதிர்வரும், டிசம்பர் 11-ஆம் தேதி,    அம்பாங் எல்.ஆர்.டி வழித்தடத்தில் அமைந்துள்ள  எல்.ஆர்.டி நிலையங்களில் 3 மணி நேரம் தாமதமாக எல்.ஆர்.டி  சேவைகள் தொடங்கும்.   

எல்.ஆர்.டி சிக்னல்  பணிகளை மாற்றவும்  மேம்படுத்தவும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த அம்பாங் முதல் மிஹார்ஜா  வரை  காலை 9 மணிக்குப் பின்னரே எல்.ஆர்.டி சேவைகள் தொடரும். 

இந்த மேம்படுத்தும் பணிகளால்,   அம்பாங், சாஹாயா, செம்பாக்கா, பண்டான் இண்டா, மலூரி, மிஹார்ஜா ஆகிய எல்.ஆர்.டி நிலையங்கள் பாதிக்கப்படும் என  ரேபிட் கே.எல் நிறுவனம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

 

யங்கூன், டிசம்.7- ரொஹின்யா முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து மலேசியாவில் பிரதமர் தலைமையில் மிகப்பெரிய கண்ட னப் பேரணி நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மலேசியாவுக்கு தனது தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதை மியன்மார் அரசு தடை செய்துள்ளது.

மலேசியாவுக்கு மியன்மார் பிரஜைகள் வேலைக்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் புதிதாக வேலைபெர்மிட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அந்நாட்டு குடிநுழைவுத்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது.

புத்த சமயத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மார், சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் இறங்கி இருப்பதாக மலேசியாவில் நடந்த பேரணியில் கண்டனக் குரல் எழுப்பப்பட்டது.

மலேசியாவில் தற்போதைய நிலவரத்தைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக வேலைக்கு ஆள் அனுப்புவதை நிறுத்திவைக்க முடிவு செய்திருப்ப தாக அந்நாட்டு அமைச்சு கூறியது.

மியன்மாரின் ராக்கின் மாநிலத்தில் வாழும் ரோஹின்யா முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளால், அங்கிருந்து நில மார்க்கமாகவும் நீர் மார்க்கமாகவும் அவர்கள் உயிரைக் காத்துக் கொள்ள தப்பி ஓடுகின்றனர். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் மலேசியாவுக்கு தப்பி வந்தவர்களின் எண்ணிக்கை 56,000ஐ தாண்டி விட்டது. 

இதனிடையே ரோஹின்யா முஸ்லிம்களின் பிரச்சனைகள் குறித்த விசாரணைகளுக்கு பொறுப்பேற்றிக்கும் முன்னாள் ஐநா தலைமைச் செய லாளர் கோஃபி அன்னான், இது குறித்துக் கருத்துரைத்த போது இந்தப் பிரச்சனையால் இப்பிராந்திய நாடுகளுக்கிடையே பிளவுகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாக சுட்டிக்காட்டினார்.

 

 

 கோத்தாபாரு, டிசம்.7- இங்கு லெம்பா சிரேவில் ஜாலான் சுல்தானா ஸைனாப்பில் தங்களுக்குப் பிறந்த சிசுவைக் கைவிட்டுச் சென்ற ஐந்தாம் படிவம் படிக்கும் மாணவ ஜோடிகள் மீது இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி நஸ்ரி இஸ்மாயில் முன்னிலையில் இவர்களுக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

திருமணமாகாத இவர்கள் இருவரும், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி ஜாலான் சுல்தானா ஸைனாப் எண் 5148ஏ என்ற இடத்தில் இரவு 9.45 மணியளவில் தங்களுக்குப் பிறந்த குழந்தையைக் கைவிட்டுச் சென்றுள்ளனர் எனக் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 317ஆவது பிரிவின் கீழ் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. இந்த இருவரும் குற்றவாளிகள் என நிருபணமானால் அதிக பட்சமாக 7 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபாரதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். இவர்கள் இருவருக்கும் தலா ஒருநபர் உத்தரவாதத்தில் 12ஆயிரம் ரிங்கிட் ஜாமின் அனுமதி வழங்கப்பட்டது.

 

 

ஈப்போ, டிசம்பர்  7-   ஈப்போ செஷன்ஸ்  நீதிமன்றத்தில் கும்பல் கொள்ளையில்   ஈடுபட்டதால் குற்றஞ்சாட்டப்பட்ட   மகனுக்கு  வழங்கப்பட்ட ஜாமீனை தந்தை மறுத்ததால்,   பரபரப்பு ஏற்பட்டது. 

நீதிபதி எஸ்.இந்திரா நேரு,  என்.ஹென்ரிக்கு ஜாமீன்  உத்தரவைப் பிறப்பித்த போது,  நீதிமன்றத்தின்  முன்பு ஓடி வந்த அவரது தந்தை மரியதாஸ் அந்த  ஜாமீன் உத்தரவை நிராகரித்தார். 

இதைக்கேட்ட 26 வயதான ஹென்ரி கதறியழுதவாறு தந்தையிடம் மன்னிப்புக் கோரினார். ஏன் மகனுக்கு ஜாமீன் செலுத்த மறுக்கிறீர்கள் என நீதிபதி கேட்டபோது,  தம் மகன் வீட்டில் இருப்பதே மிகவும் அரிது என்றும் தமது அறிவுரையைக் கேட்டதே இல்லை என்றும் கூறினார்.    

கும்பல் கொள்ளை சம்பவம் தொடர்பில் ஹென்ரி மீது கடந்த ஜூன் 20-ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, தந்தையும் மகனும்  பேசிக்கொள்ள  நீதிமன்றம் 10 நிமிடம் அவகாசம் வழங்கியது. 

எனினும், மரிய தாஸ்  தமது மகனை ஜாமீன் செலுத்தி விடுவிப்பதில்லை என்ற முடிவில் விடாப்பிடியாக இருந்தார்.  இதைக்கேட்டு ஹென்ரி தந்தையின் காலில் விழுந்து கதறி மன்றாடினார்.  எனினும், மரியதாஸ் மகனை மன்னித்து, தமது முடிவை கடைசி வரை மாற்றிக்கொள்ளவே இல்லை.

 தமது மகன் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவது இது முதல் முறை அல்ல என்றும், இதுவரை 20,000  ரிங்கிட்டுக்கும் மேல் மகனுக்கு அபராதம் கட்டுவதற்கே தாம் செலவிட்டுள்ளதாகவும், இதுவரை 4 முறை இது போன்று நண்பரிடம் கடன் வாங்கி அபராதம் செலுத்தியுள்ளதாகவும் மரியதாஸ் நீதிபதியிடம் தெரிவித்தார்.

 

 ஜோகூர்பாரு, டிசம்.7- ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் போல் நாடகமாடிய 15 வயதுடைய சிங்கப்பூர் மாணவன் ஒருவன். ஜொகூர்பாரு மாஜிஸ்திரேட் சிறார் குற்ற நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்.

தனது சமூக வலைதளத்தில், தன்னை ஜொகூர் சுல்தானின் பேரன் என்று பிரகடனப் படுத்திக்கொண்டதாக நீதிமன்றத்தில் அந்த மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் இங்கு பிளாசா அங்காசாவிலுள்ள கடை ஒன்றில் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக குற்றவியல் சட்டத்தின் 41-ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிருபணமானால், கூடுதல் பட்சமாக 7 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மாஜிஸ்திரேட் சாலினா ஒமார் முன்னிலையில் நீதிமன்ற சேம்பர்சில் நடந்த வழக்கின் போது, தம் மீதான குற்றச்சாட்டை அந்த மாணவன் மறுத்தான். சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருக்கும் அந்த மாணவனுக்கு இரு நபர்கள் உத்தரவாதத்துடன் 4,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதி அளிக்க ப்பட்டது.

 

 

ஈப்போ,   டிசம்பர் 7-  11 மாத குழந்தையைச் சித்ரவதை செய்ததாக நம்பப் படும்  பராமரிப்பாளர் ஒருவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார். 

நீதிபதி  எஸ்.இந்திரா நேரு,  குற்றச்சாட்டை வாசித்தபோது  48 வயதான நோர் ஐனி மான் தம் மீதான குற்றஞ்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். 

கடந்த நவம்பர் 26-ஆம் தேதி,  ஹானி மைசாரா முகமது  எனும்  குழந்தையின் தலையின் பின்பக்கத்தில் காயம் ஏற்படும் அளவுக்கு மெத்தனமாக இருந்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்டார். 

 இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20,000 ரிங்கிட் அபராதம்,  10 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்பட சட்டம் வகை செய்கிறது. 

 

கோலாலம்பூர், டிசம்.7- செடாங் மருத்துவமனையில் சிறிய அளவிலான மின்கோளாறு காரணமாக தீவிபத்து நடந்தது. இதனால் சேதம் எதுவும் கடுமையாக இல்லை. 

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் வந்து சேர்வதற்கு முன்பே,  மருத்துவமனை ஊழியர்கள் அங்கிருந்த அவசர உதவி தீயணைப்பு சாதன ங்களைக் கொண்டு தீயை அணைத்து விட்டனர்.

இந்தச் சம்பவம் காலை 9.16க்கு நடந்தது. தீயணைப்புத் துறை 9.26க்கு அங்கு வந்து சேர்ந்தனர். மருத்துவமனையின் முதலாவது மாடியின் மேற்பகுதியில் இருந்த விளக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்தத் தீவிபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, அல்லது சேதமோ ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

 

 

More Articles ...