கோலாலம்பூர், ஏப்ரல் 25- இவ்வாண்டு கோலாலம்பூரில் நடக்கவிருக்கும் சீ கேம்ஸ் விளையாட்டுப் போட்டியைப் பிரபலப்படுத்தும் வகையில் நாம் உண்ணும் உணவு பொட்டலங்களிலும் கூட விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. 

உணவகங்களில் உணவைப் பொட்டலம் செய்ய புதிய வகை பிளாஸ்டிக் 'டப்பாக்கள்' பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொட்டலங்களின் மேல் சீ கேம்ஸ் பற்றிய விளம்பரம் அச்சிடப்படப்பட்டுள்ளது. பொட்டலத்தின் மேற்பகுதியில் 'கோலாலம்பூர் 2017' என்று பெரியதாகவும் அதன் அருகில் 'வாவ்' பட்டமும் அதன் கீழ் பகுதியில் '29வது சுக்கான் சீ' என்று அச்சிடப்பட்டுள்ளது. அதோடு, 9வது முறையாக நடக்கும் பார ஆசியான் விளையாட்டு போட்டி பற்றியும் அதில் அச்சடிக்கப்பட்டுள்ளது. 

இதனைப் பலர் படம் எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சிலர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரியை படத்தின் கீழ் 'டேக்' செய்துள்ளனர். இம்மாதிரியான விளம்பரங்கள் மக்களை எளிதில் சென்றடைவதாக நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 29வது சீ விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சிரம்பான், ஏப்ரல் 25- சிரம்பான் நெடுஞ்சாலையின் நடந்த பயங்கரமான விபத்தில் ஐந்து வயது சிறுவன் பலியானான். பேருந்து மற்றும் மூன்று கார்களைச் சம்பந்தப்படுத்திய இந்த விபத்து பிளஸ் நெடுஞ்சாலையில் சிரம்பான் R&R பகுதியில் நடந்தது.

நேற்று மாலை 6.10 மணியளவில் இந்த விபத்து நடந்ததால் ஏறக்குறைய 10 கி.மீட்டருக்கு கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. நீலாயிலிருந்து சிரம்பான் நோக்கி சென்றுக் கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்றுக் கொண்டிருந்த காரை மோதியதில் அதில் இருந்த ஐந்து வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். காரில் இருந்த மற்ற மூவர் கடுமையான காயத்திற்கு ஆளாகினர்.

ஹொண்டா ரக காரின் பின்பகுதியில் பேருந்து மோதியதால் காரில் இருந்த அச்சிறுவன் வெளியே தூக்கி வீசப்பட்டு மாண்டான் என சிரம்பான் போக்குவரத்து அதிகாரி கூறினார். 

 

கோலாலம்பூர், ஏப்ரல் 24- குழந்தைகளிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிகொணரும் வகையில் ‘Talent Competition 2017-Talent Cup’ என்ற ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் 2-8 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொள்ளலாம். 

குழந்தைகளிடையே கற்றல் திறன் மீதான ஆர்வத்தை வளர்க்க இப்போட்டி உதவும். பெற்றோர்களும் சிறு வயதில் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி கற்பிப்பது என்பதை இந்த போட்டியின் மூலன் தெரிந்துக் கொள்வர். முக்கியமாக கற்றல் குறைபாடுகள் (Learning Disabilitiy) உள்ள குழந்தைகளுக்கு இப்போட்டு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஏற்பாடு குழுவான GT Event தெரிவித்தது.

இப்போட்டியில் முதல் 3 இடங்களை வெற்றிப் பெறுபவர்களுக்கு பரிசு பணமும், மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் உண்டு.

ஜூலை மாதம் 29ஆம் தேதி நடைபெறும் இப்போட்டிக்கு ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். பிறகு மே மாதம் தேர்வு சுற்று, அறையிறுதி சுற்றுகள் நடைபெறும். ஷா ஆலாம் கோத்தா கெமுனிங்கில் உள்ள லிபாரிஸ் மண்டபத்தில் நடைபெறும் இப்போட்டிக்கு பதிந்துக் கொள்ள பொது மக்களை ஏற்பாட்டுக் குழு அழைக்கிறது.

மேலும் தகவல் பெற விரும்புவோர், 0351248295, 01062620141, 0162850141 என்ற எண்களுக்குத் தொடர்புக் கொண்டுப் பெற்றுக் கொள்ளலாம்.

அலோர்ஸ்டார், ஏப்ரல் 24- வீட்டில் இருந்தபோது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டுகள் பட்டு 12 வயது மாணவி ஒருவர் பலத்த காயங்களுக்கு ஆளானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியின் உடல் நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

கெடா, பொக்கோ சேனா பகுதியில் உள்ள கம்போங் லுபுக் கெரியாங் எனும் இடத்தில் நூர்ஷாயிடா எனும் மாணவி தனது வீட்டின் சமையலறையில் நின்று கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக துப்பாக்கி தோட்டா ஒன்று அவர் மீது பாய்ந்தது.

பெரும் சத்தம் கேட்டு, வீட்டின் வரவேற்பறையில் இருந்த மாணவியின் தந்தை அலறியடித்து வந்து பார்த்தபோது தன் மகள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

மாணவிக்கு தலையிலும் நெஞ்சுப்பகுதியிலும் இரு கால்களிலும் இடது தோள்பட்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையின்போது வீட்டுக்கு அருகில் இருந்த இருவர் சிறுமியின் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் அதில் ஒருவரே துப்பாக்கியை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

கோலாலம்பூர், ஏப்ரல் 24- நாட்டின் 15வது மாமன்னராக சுல்தான் முகமட் V இன்று அரியணை ஏறினார். தலைநகரில் உள்ள இஸ்தானா நெகாராவில் இன்று நடந்த மாமன்னரின் அரியணை ஏறும் விழா மிக கோலாகலமாக நடந்தது.

கிளந்தான் மாநிலத்தின் சுல்தான் முகமட் V இன்று நாட்டின் 15வது மாமன்னராக முடி சூட்டப்பட்டார். நாட்டின் புதிய மாமன்னராக பதவியேற்றப்போது நாட்டின் அரசர் என்ற அடையாளமாக அவரிடம் அல் குரானின் நகல் ஒன்று வழங்கப்பட்டது. மாமன்னர் கூட்டரசு இஸ்லாமிய தலைவராகவும் சுல்தான் இல்லாத மாநிலங்களின் தலைவராகவும் பதவியேற்றதிற்கான அடையாளமாகவும் இந்த குரான் நகல் வழங்கப்பட்டது.

மேலும், நாட்டின் தலைவராக பொறுப்பேற்றப்பதற்கான அடையாளமாக மாமன்னரிடம் அரச நீண்டவாள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாளைப் பெற்றுக் கொண்ட மாமன்னர் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்,  சுல்தான் முகமட் V-ஐ ஆட்சியாளர்கள் மன்றம் யாங் டி பெர்த்துவான் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார் என பிரகடனம் செய்தார். 

கோலாலம்பூர், ஏப்ரல் 24- பாலர் பள்ளிக்கு சென்ற ஆறு வயது சிறுவன் வேனிலேயே உறங்கி விட்டதை அறியாத வேன் ஓட்டுனர் வண்டியைப் பூட்டிச் சென்று விட்டதால் 3 மணிநேரமாக சிக்கி கொண்டிருந்த சிறுவன் கடும் வெப்பம் தாக்கியதால் உயிரிழந்தான்.

முகமட் இக்ராம் டானிஸ் எனும் அச்சிறுவன், ரவாங்கில் உள்ள பண்டார் கண்ட்றி ஹோம்ஸில் இருந்து அவனது பாலர் பள்ளிக்கு செல்ல நேற்று முன்தினம் மாலை 2 மணிக்கு வழக்கம் போல வேனில் ஏறி சென்றுள்ளான். ஆனால் செல்லும் வழியிலேயே அச்சிறுவன் அயர்ந்து தூங்கிவிட, சிறுவர்கள் அனைவரும் இறங்கியதைப் பார்த்த ஓட்டுனர் வேனைக் கொண்டு சென்று வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். 

மாலையில் 5 மணிக்கு சிறுவர்களைப் பாலர் பள்ளியிலிருந்து ஏற்றி வர கிளம்பிய 21 வயது வேன் ஓட்டுனர், சிறுவர் இக்ராம் வேனில் மயங்கி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சிறுவனை அருகில் இருந்த கிளினிக்கிற்கு கொண்டு சென்றபோது கடும் வெப்பம் தாக்கி அவன் இறந்து விட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். 

ஓட்டுனரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த போலீசார், சிறுவர் சட்டத்திற்கு கீழ் வழக்கை விசாரித்து வருகின்றனர்.  

 

கோலாலம்பூர், ஏப்ரல் 24- கிளந்தான் மாநிலத்தின் மாட்சிமை தங்கிய சுல்தான் முகமட் V இன்று அரியணை ஏறுகிறார். இந்த முடிசூட்டு விழாவிற்கு முக்கிய பிரமுகர்கள் காலை 7.30 மணி முதல் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் அரண்மனையே கோலாகலமாக மின்னுகிறது.

நாட்டின் 15வது மாமன்னராக சுல்தான் முகமட் V பதவியேற்கவிருக்கும் இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்ச்சியை ஒட்டி இஸ்தானா நெகாரா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாசலில் முக்கிய பிரமுகர்களை வரவேற்கும் வகையில் DAULAT TUANKU' எனும் வாசகம் மஞ்சள் நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு முடிசூட்டு விழா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுல்தான் முகமட் V அரியணை ஏறும் முன் அரச மலாய் படையின் அணிவகுப்பை ஏற்பார்.

More Articles ...