கூச்சிங், ஜூன்.21- பல நாட்களாக போலீசுக்கு சிக்காமல் தப்பித்து வந்த வழிப்பறி திருடன் ஒருவன், ஆகக் கடைசியில் பிடிபட்டான். 

கம்போங் புண்டோங் கோத்தா சமராஹானைச் சேர்ந்த இந்த வேலையில்லா ஆசாமி, வழக்கத்திற்கு மாறான புதுப் புது தந்திரங்களைச் செய்து மக்களிடம்  வழிப்பறிச் செய்து வந்தான். 

சாமர்த்தியமான இந்தத் திருடன் தன்னை யாரும் அடையாளம் காண முடியாத அளவில் ஒவ்வொரு முறையும் தனது மோட்டார் சைக்கிளின் சில பகுதிகளை நிறங்களை அடிக்கடி மாற்றியும் மோட்டார் சைக்கிளுக்குப் போலி எண் பட்டைகளைப் பொருத்தியும் வழிப்பறி செய்து வந்தான்.

இந்தத் தந்திரத்தின் மூலன் இவன் இருபதுக்கும் மேற்பட்ட வழிப்பறிகளைச் கூச்சின் பகுதியில் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.

எனினும், 'ஆனைக்கும் அடி சறுக்கும்' என்பதுபோல, கடந்த 30ஆம் தேதி ஜாலான் சான் பீ கீவ் அருகே ஒரு பெண்ணின் கைப்பையை வழிப்பறிச் செய்ய முயன்ற போது வழக்கம் போல தனது மோட்டார் சைக்கிளின் வண்ணத்தையும் போலி எண் பட்டையையும் மாற்ற மறந்துவிட்டான்.

இதனிடையே, இந்த வழிப்பறி காட்சி சாலைக் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி விட்டது. அடுத்தச் சில நாள்களிலேயே அந்தத் திருடனின் முகவரியைக் கண்டுபிடித்து நேற்று மாலையில் அவனைப் போலீசார் கைது செய்து விட்டதாக சரவா குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் டத்தோ தேவ் குமார் தெரிவித்தார். 

அதே வேளையில் அவனிடமிருந்து வழிப்பறிச் செய்த பொருள்களும் கைப்பற்றப்பட்டன என அவர் சொன்னார்.

அந்த ஆசாமியின் மீது நடத்தப்பட்டப் பரிசோதனையில் அவன்  போதை மருந்தை உட்கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

பாதசாரிகள் சாலையில் செல்லும்போது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது, கைப்பையை எவ்வாறு அணிந்துச் செல்வது, வழிப்பறி கொள்ளையர்களிடமிருந்து எப்படி தன்னை தற்காத்துக் கொள்வது என்பது போன்ற விழிப்புணர்வைப் பெற்றிருப்பது அவசியம் என்று டத்தோ தேவ் குமார் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், ஜூன் 21- நான்காவது வாரத்திற்கான புதிய பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்துள்ளன. டீசலின் விலையில் மாற்றம் இல்லை.

இன்று அறிவிக்கப்பட்ட நாளை முதல் அடுத்த ஒரு வாரம் ஜூன் 28ம் தேதி வரை, புதிய பெட்ரோல் விலையில், ரோன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரிம.1.98-லிருந்து ரிம.1.91 காசாகவும் ரோன் 97 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரிம.2.24 காசிலிருந்து ரிம.2.17 காசாகவும் இறக்கம் கண்டுள்ளன. 

டீசலின் விலையில் மாற்றம் இல்லை. அது லிட்டருக்கு ரிம.1.88 காசாக விற்கப்படும்.

கிள்ளான், ஜூன் 21- இன்று அதிகாலையில் தொழுகை நேரத்தின் போது பள்ளி வாசலின் வராண்டாவில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று துண்டினால் சுற்றப்பட்டு கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜாலான் சுங்கை ஊடாங்கில் உள்ள பள்ளி வாசலில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆடவர் ஒருவர் தொழுகைக்காக பள்ளி வாசல் வந்தபோது அங்கு பிளாஸ்டிக் பை ஒன்று கிடந்ததை அடுத்து அதை திறந்து பார்த்துள்ளார். பை உள்ளே துணி ஒன்று சுற்றுப்பட்டு கிடந்ததை அடுத்து அதைத் திறந்து பார்த்தபோது உள்ளே புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்ததைக் கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவம் தொடர்பில் பேசிய தென் கிள்ளான் ஓசிபிடி துணை ஆணையர் அல்ஷாஃப்னி அமாட், பச்சிளம் குழந்தை சுத்தமாகவும் தொப்புள் கொடி அறுக்கப்படாமலும் இருந்ததாக கூறினார். மேலும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது குழந்தை இறந்து விட்டதாக கூறியதாக அவர் கூறினார். 

சம்பந்தப்பட்ட குழந்தை பள்ளி வாசலில் விடுவதற்கு 10 மணிநேரங்களுக்கு முன்னர் தான் பிறந்திருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் அருகில் அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக அல்ஷாஃப்னி கூறினார்.

புத்ராஜெயா, ஜூன்.21- அடுத்து வரும் 2018ஆம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டின் கீழ், அரசாங்க ஊழியர்களுக்கு 3 விழுக்காடு சம்பள உயர்வு வழங்கவேண்டும் என அரசு சேவை ஊழியர்களின் தொழிற்சங்கமான கியூபாக்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது. 

நாட்டில் உள்ள சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் அடிப்படை சம்பளத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக, வறுமைக் கோட்டுக்குக் கீழ் (பி40) உள்ள அரசாங்க ஊழியர்களைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்று கியூபாக்ஸ் வலியுறுத்தியது.

ஏனெனில், இப்போது உள்ள வாழ்க்கைச் செலவினம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது என கியூபாக்ஸின் தலைவர் டத்தோ ஆஸி மூடா சுட்டிக்காட்டினார். 

“நம் நாட்டில் சுமார் 62,000 அரசாங்க ஊழியர்கள் கடனாளிகளாக இருக்கிறார்கள். அதனால் தான் நாங்கள் சம்பள உயர்வைக் கேட்கிறோம். அரசாங்கம் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் அரசாங்க ஊழியர்களிடையே நிலவும் நேர்மை மற்றும் உற்பத்தித் திறன் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாகக் களைய முடியும்” என கியூபாக்ஸ் கூட்டத்தின் சந்திப்பின் போது அவர் கூறினார்.

அதேவேளையில், கியூபாக்ஸ் சமூக வேலைப் பாதுகாப்பு காப்புறுதியான சொக்சோ (Socso) அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்றும் அது முன்மொழிந்தது.

இதனிடயே, ஜூன் 15ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான புதிய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள கியூபாக்சிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று டத்தோ ஆஸி மூடா தனது அதிருப்தியை தெரிவித்தார்.

 

 

ஷா ஆலம், ஜூன் 21-  ஒரு வீட்டினுள் திருடுவதற்காக புகுந்த திருடன் ஒருவன், வீட்டில் இருந்த குடும்ப மாதுவை மிரட்டிக் கற்பழித்த சம்பவத்தில் கைதாகி போலீஸ் காவலில் இருந்த போது நேற்று தப்பியோடியதற்கு போலீசின் அலட்சியமே காரணம் என சிலாங்கூர் போலீஸ் தலைவர் கூறினார்.

"மேற்கொண்ட விசாரணையின் வழி போலீசார் அலட்சியமாக இருந்ததால் தான் அவன் தப்பி ஓடியுள்ளான்" என சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஆணையர் டத்தோ ஶ்ரீ அப்துல் சாமா மாட் செய்தியாளர்களிடம் கூறினார்.

திருட்டு மற்றும் கற்பழிப்பு சம்பவத்திற்காக கைது செய்யப்பட்ட ஆடவன், கடந்த திங்கட்கிழமை போலீஸ் நிலையத்தில் இருந்தபோது கழிவறை செல்லவேண்டும் என்று கூறியுள்ளான். பின்னர், கழிவறையில் இருந்த ஜன்னல் கம்பிகளை நெம்பி அது வழியாக வெளியேறி தப்பித்துள்ளான். இருப்பினும், கம்போங் பாரு ஹைக்கோம் பகுதியில் அவ்வாடவனைப் போலீசார் மீண்டும் கைது செய்தனர். 

இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த அப்துல் சாமா, "வட கிள்ளான் போலீஸ் தலைமையகம் கடை வீதியில் அமைந்துள்ளது. இதனால், முழு போலீஸ் தலைமையக பாதுகாப்பு அம்சங்கள் இங்கு இல்லை. அதனால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது" என அவர் மேலும் கூறினார். சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோலாலம்பூர், ஜூன் 21- இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள சிறையிலிருந்து தப்பிய மலேசிய ஆடவரைப் பிடிக்க மலேசிய போலீஸ் முழு ஒத்துழைப்பு தரும் என்று துணை போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ நோர் ரஷிட் இப்ராஹிம் கூறினார்.

பாலியில் உள்ள கெரோபோகான் சிறையிலிருந்து நான்கு அந்நிய நாட்டவர்கள் குழி தோண்டி தப்பித்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அதில் தீ கொக் கிங் (வயது 50) என்ற மலேசிய ஆடவரும் அடங்குவார். சிறையிலிருந்து தப்பித்த மலேசிய ஆடவர் மலேசியாவிற்குள் நுழைய முயன்றால் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு துணை போலீஸ் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

"நாட்டிற்குள் நுழைய கூடிய இடங்களைப் போலீஸ் தொடர்ந்து கண்காணிக்கும். மேலும், நாட்டிற்கு திரும்பி வர நினைத்து மறைவிடங்களில் தங்கிருப்பது கண்டிப்பிடிக்கப்பட்டால் இந்தோனேசிய அதிகாரிகளுடன் மலேசியா போலீஸ் படை முழு ஒத்துழைப்பு வழங்கும்" என அவர் மேலும் கூறினார்.

 புத்ராஜெயா, ஜூன்.20- தற்போது அமலாக்கத்தில் இருக்கும் வாரந்தோறும்  பெட்ரோல், டீசல் விலை நிர்ணயமுறை தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் அறிவித்தார்.

எனினும், தேசிய எரிபொருள் தொழில்துறையைப் பாதுகாக்கும் வகையில் எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும் ஒரு புதிய வழிமுறையைப் பற்றிய ஆய்வு இன்னும் நடந்துக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

சில தரப்பினர் வாரந்தோறும் நிர்ணயிக்கப்படும் எரிபொருள் விலையை மாதந்தோரும் நிர்ணயிக்க கோரிக்கை வைத்ததை முன்னிட்டு அவர்,

“இப்போது அமலில் இருக்கும் இந்தத் திட்டம் தொடர்ந்து நீடிக்கும்” என அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.

இதனைத் தவிர்த்து, எரிபொருள் விலையை நிர்ணயிப்பதில் ஒரு புதிய வழிமுறை, கூடிய விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார். இதனால், பெட்ரோல் நிலையங்களை வைத்திருப்பவர்கள் இழப்பு அடைவதைத் தவிர்க்க முடியும். 

இத்திட்டத்தில் வழி எல்லாத் தரப்புக்கும் எந்தப் பாதகமும் ஏற்படாத சுமூக நிலை ஏற்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் சொன்னார்.Petrol  price

More Articles ...