கோலாலம்பூர்,ஏப்ரல்.22- புண்படுத்தும் வகையிலான கவிதையை எழுதி முகநூலில் பதிவு செய்துள்ள பெர்லிஸ் முப்தி அஸ்ரி ஜைனலை பதவி நீக்கம் செய்யும்படி ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் வேதமூர்த்தி கோரிக்கை விடுத்தார்.

இந்து சமயத்தை இழிவுபடுத்தும் இந்தக் கவிதை குறித்து இந்திய சமுதாயம் அடைந்துள்ள வேதனையைத் தெரிவிக்க பெர்லிஸ் ராஜாவின் பேட்டியை ஹிண்ட்ராப் நாடியிருப்பதாக வேதமூர்த்தி சொன்னார்.

இந்துக்களை புண்படுத்துவதாக அமைந்திருக்கும் இந்தக் கவிதையில் இருக்கும் செய்தி முஸ்லிம் அல்லாதோரின் உணர்வுகளைப் பாதித்துள்ளது. எனவே எங்களின் கவலையை, வேதனையை பெர்லிஸ் ராஜாவிடம் தெரிவிப்பதற்கு அவரிடம் ஒரு வாய்ப்பு கோருவதாக அவர் சொன்னார். 

இந்நிலையில் பெர்லிஸ் முப்தி பொறுப்பிலிருந்து அஸ்ரியை விலக்க வேண்டும் என்று தாங்கள் பெர்லிஸ் ராஜாவுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அவர் சொன்னார். 

அஸ்ரி இரண்டு முறை இவ்வாறு எழுத்துப்பூர்வமான வடிவில் தனது எல்லையை மீறி, இந்துக்களின் சமய நம்பிக்கைகளில் தலையீடு செய்துள்ளார். இஸ்லாமைப் பற்றி அஸ்ரி பேசுவது குறித்து ஆட்சேபம் இல்லை. இதர சமயங்களை இழிவுபடுத்துவதில் அவர் ஈடுபடக்கூடாது. 

கிட்டத்தக்க 60 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதாரும் அமைதியான வழியில், நல்லெண்ண உணர்வோடு தங்களின் சமய நம்பிக்கைகளை கடைபிடித்து வருகிறார்கள் என்று வேதமூர்த்தி கூறினார். 

கோலாலம்பூர், ஏப்ரல்.22- பெர்லிஸ் முப்தியான அஸ்ரி ஜைனல் அபிடின் மறைமுகமாக இந்துக்களை குறிவைத்து எழுதியுள்ள கவிதை ஒன்று சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

மாடுகளை பூஜிப்பவர்கள் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் அவர் குறிப்பிட்டு இந்து மதத்தினர் என்று சுட்டிக்காட்டவில்லை. 

சமய போதகர் ஒருவரை (பெயர் குறிப்பிடவில்லை) தீமை கொண்ட அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடக்கும் முயற்சியைத் தற்காத்து நிற்பதாக கவிதையில் அவர் கூறியிருக்கிறார். 

மாடுகளை கடவுளோடு இணைத்து வழிபடுகிறவர்கள் நமது சமய போதகரை பிணைத்துச் சென்று தீய அரசிடம் ஒப்படைக்க  கோருகிறார்களே...,. நெருப்பை வணங்குகிறது அந்த அரசு. விதவைகளை எரிக்கும் பழக்கத்தை கொண்டவர்கள். மனிதர்களை சாதிகளால் கூறு போடுகிறவர்கள் என்று தன்னுடைய முகநூலில் வெளியிட்டுள்ள கவிதை ஒன்றில் பெர்லிஸ் முப்தி அஸ்ரி கூறியிருக்கிறார்.

எனினும், அஸ்ரி யாருடைய பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால், கடந்த காலங்களில் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக குரல் கொடுத்த ஹிண்ட்ராப்பை,  இவர்க டுமையாக எதிர்த்து வந்தார். இந்தக் கவிதையை சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது. ஏராளமான முஸ்லின் அல்லாதார் இதனைக் கண்டித்து வருகின்றனர்.

கோலாலம்பூர், ஏப்ரல்,21- சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து (பிஆர்) வழங்கியது குறித்து சுகாதார அமைச்சராக இருக்கும் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கேள்வி எழுப்பும் பொறுப்பில் இல்லை என்று பாஸ் கட்சி கூறியது.

இஸ்லாமிய உலகில் ஜாகிர் மிகவும் மதிக்கத்தக்கவர் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவரான நசுருடின் ஹசான் சொன்னார்.

ஒருவருக்கு பிஆர் அந்தஸ்து தரப்படுகிறது என்றால் அதற்கான வழிமுறை என்ன என்பதை அமைச்சர் என்ற முறை டாக்டர் சுப்ரமணியத்திற்கு தெரிந்திருக்க வேண்டும்.

பிஆர் அந்தஸ்து வழங்குவது என்பது ஒரு தனிநபரின் உரிமையல்ல. திறமைவாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு மலேசிய அரசாங்கம் வழங்கும் வெகுமதி அது என்று நசுருடின் சொன்னார்.

இந்தத் தகுதியை வழங்குவதில் அரசாங்க துறைகள், உள்துறை அமைச்சு, போலீஸ் படை, தேசிய பதிவு இலாகா மற்றும் குடிநுழைவுத்துறை ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளன. ஜாகிர் நாயக்கை பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்துவதும் நாட்டின் சமய நல்லிணக்கத்திற்கு அவரால் ஆபத்து வரும் என்றும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுப்ரமணியம் கூறியிருக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.

 

கோலாலம்பூர், ஏப்ரல்.21- இரண்டு இந்திய மாணவிகளுக்கு எதிராக இனத் தூவேசக் கருத்துக்களைக் கூறியதாக, பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த மலாயா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தம்முடைய செயலுக்காக அந்த மாணவிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அந்த மாணவிகளுக்கும் விரிவுரையாளருக்கும் இடையே நடந்த சந்திப்பு ஒன்றின் போது தமது செயலுக்காக வாய்மொழி மூலமாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அந்த விரிவுரையாளர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் டான்ஶ்ரீ பேராசிரியர் டாக்டர் முகமட் அமின் ஜலாலுடின் தெரிவித்தார்.

இந்த மன்னிப்பை மாணவிகளும் ஏற்றுக்கொண்டனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாது என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார். இந்தச் சந்திப்பின் போது துணைவேந்தர் டாக்டர் முகமட் அமினும் உடனிருந்தார்.

நடந்து முடிந்த சம்பவத்திற்காக தாம் வருந்துவதாகவும் இனத் தூவேசப் பிரச்சனைகளை கிளப்பவேண்டும் என்பது தமது நோக்கமல்ல என்றும் என்றும் எதிர்காலத்தில் மிக கவனமாகச் செயல்படப் போவதாகவும் அந்த விரிவுரையாளர் சொன்னார். 

வகுப்பறையில் இந்த விரிவுரையாளர் அவ்வாறு இனத் தூவேசமாக பேசியது குறித்த சம்பவம் பற்றி அண்மையில் முகநூலில் தகவல் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியர்களில் பல்வேறு தரப்பினரும் விரிவுரையாளரின் செயலை மிகக் கடுமையாக விமர்சித்ததோடு அவரை வேலையிலிருந்து நீக்கவேண்டும் என்றும் கோரிவந்தனர்.

இதனிடையே எந்த வகையான இனத் தூவேசங்களையும் இதர இனங்களை அவமதிக்கும் செயல்களையும் மலாயா பல்கலைக்கழகம் சகித்துக் கொள்ளாது என்று துணைவேந்தர் டாக்டர் முகமட் அமின் வலியுறுத்தினார்.

 

 

ஷா ஆலாம், ஏப்ரல் 21- பெட்ரோல் நிலையத்தில் புகைப் பிடித்துக் கொண்டிருந்த ஆடவனைத் தடுக்க முயன்ற போலீஸ்காரரை அந்த ஆடவன் கத்தியால் தாக்கிவிட்டு ஓடிய துணிகரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காலை 9 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் 32 வயதான லான்ஸ் கோர்பொரல் முகமட் அஸ்லி காயமடைந்தார்.

செக்‌ஷன் 7இல் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஓர் ஆடவன் புகைப் பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்ட போலீஸ்காரர் முகமட் அஸ்லி அந்த ஆடவனைக் கண்டித்தார். ஆனால், இவர் சொல்வதைக் கேட்காமல் அந்த ஆடவன் தொடர்ந்து புகைப் பிடித்துக்கொண்டிருந்தான். 

அவன் உடம்பில் குண்டர் கும்பல் சம்பந்தப்பட்ட பச்சைக் குத்தியிருந்ததைக் கண்ட முகமட் அஸ்லி சந்தேகம் அடைந்து அவனைப் பின்தொடர்ந்துள்ளார். 

கோபமுற்ற அந்த நபர் இவரைச் சராமாரியாகத் தாக்கினான். இதனால் முகமட் அஸ்லி நிலைகுலைந்துப் போனார். அந்த நேரம் பார்த்து கத்தியை எடுத்து இவரின் தொடையில் பலமாக குத்திவிட்டு சம்பவம் நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டான்.

பெட்ரோல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா ஆதாரத்தையும் அருகில் இருந்த சாட்சிகளின் ஆதாரத்தையும் கொண்டு சம்பந்தப்பட்ட ஆடவனைப் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோலாலம்பூர், ஏப்ரல்.21- கஞ்சாவைக் கலந்து பிஸ்கெட்டுகள் தயாரித்து விற்பனை செய்து வந்த ஒரு பத்திரிகையாளர், ஒரு பல்கலைக்கழக மாணவர் உள்பட ஐவரை போலீசார் கைது செய்தனர்.

புக்கிட் அந்தாரா பங்சாரிலுள்ள இரண்டு வீடுகளில் போலீசார் அதிரடிச் சோதனை மேற்கொண்ட போது 24 வயது முதல் 27 வயது வரையிலான இந்த ஐவரும் பிடிபட்டனர். மேலும் கஞ்சா மற்றும் தயாரித்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பிஸ்கட்டுகளையும் கைப்பற்றினர். 

முதல் வீட்டில் நான்கு அடுக்கு கஞ்சா மற்றும் கஞ்சா பிஸ்கட்டுகளுடன் கஞ்சா பவுடரும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று அம்பாங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் ஏஎஸ்பி ஹம்சா அலியாஸ் தெரிவித்தார்.

அடுத்து உடனடியாக மற்றொரு வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்ட போது அந்த வீடு பிஸ்கட்டுகள் தயாரிக்கும் கூடமாக இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த கஞ்சா பிஸ்கட்டுகள், இணையம் வழியாக விற்கப்பட்டு வந்துள்ளது. இவர்கள் தொழிலை இப்போதுதான் புதிதாக தொடங்கியுள்ளனர் என்பதும் தெரிய வந்திருக்கிறதுஎன்று ஏசிபி ஹம்சா அலியாஸ் கூறினார்.

 

 

கோலாலம்பூர், ஏப்ரல் 21- இடைநிலைப்பள்ளியின் முன் மோட்டார் சைக்கிள்களைக் கொண்டு அராஜகம் புரிந்தவர்களில் 18 பேர் போலீஸ் சிறப்புக் குழு STAFFOC-இன் அதிரடி நடவடிக்கையினால் கைது செய்யப்பட்டனர். அதில் 13 பேர் மாணவர்கள் என்றும் 5 பேர் பள்ளியிலிருந்து நிருத்தப்பட்டவர்கள் என்று போலீஸ் தரப்பு கூறியது.

பள்ளியின் முன் ’24’ குண்டர் கும்பல் பதாகைகளைப் பிடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிள்களைக் கொண்டு அராஜகம் செய்த இந்த கும்பலின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

கிள்ளான் ஶ்ரீ அண்டாலாஸ் பள்ளிக்கு முன் இந்த தகாத செயலைப் புரிந்த அவர்களை, கிள்ளான் சுற்றுவட்டாரத்தில் போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ’24’ குண்டர் கும்பலைச் சேர்ந்த இன்னும் பலரைப் போலீசார் கைது செய்வர் என்று போலீஸ் ஐஜிபி காலிட் தனது டிவிட்டரில் பதிவேற்றம் செய்தார். 

பள்ளி மாணவர்களைக் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் தங்கள் கும்பலில் சேர்த்துக் கொள்வதைத் தடுக்க போலீஸ் இன்னும் பல முயற்சிகளையும் எடுக்கும் என்று அவர் சொன்னார்.

More Articles ...