கோலாலம்பூர், மார்ச் 15-  மலேசிய வரலாற்றிலேயே முதன் முறையாக   போலீசார்  ஒரே அதிரடி சோதனையில் 4.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள  1 டன் மதிப்புள்ள கஞ்சா போதைப் பொருளை சாதனைப் படைத்துள்ளனர். 

இந்த போதைப் பொருள்  கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட இரு வெவ்வேறு அதிரடி சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அதிரடி சோதனையின் போது போலீசார், கார் ஒன்றிலிருந்து 160  பிளாக்குகள் கொண்ட கஞ்சா வகைப் வகைப் போதைப் பொருளைக் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து 38 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து இரண்டாவது அதிரடி சோதனை  பண்டார் லகுனா மெர்போக், சுங்கை பட்டாணியில் அதிகாலை 1.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது. இங்குள்ள வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில்  843 கிலோகிராம் எடை கொண்ட  போதைப் பொருள்  பறிமுதல் செய்யப்பட்டது.  

ஒரே நாளில் இரு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில் 1200 கிலோகிராம் எடைகொண்ட போதைப் பொருள் மீட்கப்பட்டது. 

 

 

 

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 15- போக்குவரத்து மிக்க பெட்டாலிங் ஜெயா சாலையோரத்தில் அடிபட்டுத் துடித்துக்கொண்டிருந்த  நாயைக் காப்பாற்றும் நோக்கில் டுடோங் அணிந்திருந்த ஒரு பெண்மணி, அந்த நாயைத் தூக்கிச் சென்ற காட்சியைக் கொண்ட காணொளி, முகநூலில் பரபரப்பாக பரவி வருகிறது.

 

என்ன செய்வது என்று தெரியாமல் சாலை விளிம்பில் நின்று கொண்டு, தூக்குவதா.. இல்லை இப்படியே விட்டுச் செல்வதாஎன்று சிறிது நேரம் தவித்த பின்னர் அவர் அந்த நாயை தூக்கிக் கொண்டுச் சென்ற காட்சி அந்தக் காணொளியில் இடம்பெற்றிருக்கிறது. மனிதாபிமானத்தோடு இவர் செய்திருக்கும் இந்தச் செயல், முகநூலில் பெரிதும் பாராட்டுப்பட்டு வருகிறது. 

 

33 வினாடிகளுக்கு நீடிக்கும் இந்தக் காணொளி,  மலேசிய தன்னார்வ விலங்குகள் மீட்பு ‘Malaysia Independent Animal Rescue’ எனும் இயக்கித்தின் முகநூலில் வெளியிடபட்டுள்ளது. 

 

டுடோங் அணிந்திருந்த அந்தப் பெண்ணின் இந்த மனிதாபிமானச் செயலை, அச்சாலையைக் கடந்து சென்ற ஒருவர் காணொளியை பதிவு செய்ததாகத் தெரிகிறது.

 

இந்தக் காணொளிக்கு முகநூலில், ஏறக்குறைய 4,500 லைக்ஸ் செய்திருப்பதோடு 4,591 பேர் இந்தக் காணொளியை பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

கோத்தா பாரு, மார்ச் 15- ஹாலிவூட் திரையுலகில்,கற்பனையில் சித்தரிக்கப்பட்டஐயன் மேன்எனும் ஒரு கதாபாத்திரத்தின் தோற்றத்தில், ஒருவர் இங்குள்ள ஜாலான் பிந்து ஹேங் பகுதியில், இளநீர் விற்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

குழந்தைகள் உட்பட வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க இது ஒரு சிறந்த யுக்தி என்று அறிந்த அந்தக் கடையின் உரிமையாளரான 34 வயதுடைய முகமட் கைரி, வாடிக்கையாளார்களின் வருகையை அதிகப்படுத்தவே இந்த யுத்தியை கையாண்டுள்ளார். கடந்த மாதம் ஸ்பைடர் மேன் எனும் ஹாலிவுட் நாயகனைப் போல் உடை அணிந்து அவர் விற்றநாசி லெமாக்நல்ல வரவேற்பை பெற்றதால் அவர் இம்முறை இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.

 

கடந்த ஒரு வருட காலமாக அவர் இளநீரை ரிம 2-இல் இருந்து ரிம 3.50 வரையில் விற்று வருகிறார். ஐயன் மேன்  உடைகளை ரிம 1,000 விலையில், தாய்லாந்திலிருந்து வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆடையை 17 வயது நிரம்பிய அவரின் இரு உறவினர்கள் அணிந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி படுத்துவதாகவும் அவர் மேலும் கூறினார்.

 

இந்த பள்ளி விடுமுறையை முன்னிட்டு, மேலும் பல வேடங்களை தாங்கள் முயற்சிக்க போவதாகவும், பள்ளி விடுமுறையை நல்ல வழியில் செலவிடுவதை எண்ணி பெருமைக் கொள்ளுவதாகவும் அந்த இரு உறவினர்களும் கூறினர். எந்த வகையிலும் இது அவர்களின் படிப்பை பாதிக்க போவதில்லை என அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பெட்டாலிங் ஜெயா, 15 மார்ச்- "தனக்கு வலிக்கும் போது தான் தெரியும்" என  பெரும்பாலும் சுயநலமிகளைப் பார்த்து சொல்வது வழக்கம். அப்படித்தான் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.   பொதுவாக சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது, திடீரென  ஆம்புலன்சோ, போலீஸ்,  அல்லது தீயணைப்பு வண்டியோ  சமிக்ஞை ஒலியோடு வந்தால், அவசரப் பாதையை அவ்வாகனங்களுக்கு வழிவிட்டு விலகிச் செல்வது தான் வழக்கம்.  

அப்படி செய்தால்தான்,  உயிருக்காகப் போராடும் ஜீவன்களை   அவசர உதவிக்குழுவினர் யாராக இருந்தாலும் விரைந்து சென்று காப்பாற்ற இயலும். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன் மலேசியத் தீயணைப்புத் துறை தனது முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவு,  நம்மை ஒரு கணம் வேதனையில் ஆழ்த்தவே செய்கிறது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சம்பவம் அது. பெயர்க்குறிப்பிடப்படாத  அந்த நெடுஞ்சாலையில், ஒரு அவசர அழைப்புக்கு உதவ  விரைந்தனர் தீயணைப்புத் துறையினர். ஆனால், தீயணைப்புப் படையினருக்கு இருந்த அவசரம் மலேசிய  வாகனமோட்டிகளுக்கும் இருந்தது தான் இங்கு வேதனை. தீயணைப்பு வண்டி அவசர வழியில் சென்றபோது, வாகனமோட்டிகளும் வழி விடாமல் தாங்களும் அதே பாதையில் செல்ல முண்டியடித்தனர். சில  வாகனங்கள் விலகி செல்ல முனைந்தும் மற்ற வாகனங்கள் வழி விடவில்லை. ஒரு கட்டத்தில் தீயணைப்பு வாகனம் நின்று நின்று செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 

வாகனமோட்டிகளின் இந்த விபரீத குணத்தை தீயணைப்பு வாகனத்தில் இருந்த  சக வீரர்கள் தங்கள் கைத்தொலைப்பேசியில் காணொளியாக எடுத்து, தங்களின் முகநூலில் வேதனையோடு பதிவு செய்திருந்தனர். 

 

சம்பவத்தின் போது,  ஏராளமான கனரக வாகனங்கள் அவசரப் பாதையில் செல்வதைக் காண முடிகிறது. தீயணைப்பு வாகனம் சமிக்ஞை ஒலி எழுப்பியும்,  ஒலி பெருக்கி மூலம் வழிவிடுமாறு கேட்டுக்கொண்டபோதும்,  வாகனமோட்டிகள் கண்டுகொள்ளாதது,  அவமதிக்கும் செயலாகும். 

இத்தகைய செயலால், ஆம்புலன்ஸ் வாகனமாக இருந்தால், அதில் பயணிக்கும் நோயாளி அல்லது விபத்து நிகழ்ந்த இடத்தில் உயிருக்குப் போராடும்  நபர் உயிரிழக்கலாம். அதே நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று சேராததால்,  வாகனமோ அல்லது காரோ முற்றாக எரிந்து சாம்பலாகலாம்.  இது போன்ற சம்பவம் நாளை நமக்கே கூட  ஏற்படலாம் என   சமூக ஆர்வலர்கள் பலர் தீயணைப்புத் துறையினரின் இந்த முகநூல் பதிவுக்குக் கருத்து பதிவிட்டிருந்தனர். 

 

 

கோலாலம்பூர், மார்ச் 14- வழிப்பறி கொள்ளையில் ஈடுபட திட்டமிட்ட ஓர் ஆடவன்ரோந்து சென்ற காவல்துறை அதிகாரியிடம் சிக்கினான்.

 

காலை 11 மணி அளவில், 33 வயதுடைய அவன், சந்தேகத்திற்குரிய வகையில் கருப்பு நிற யமஹா  மோட்டார் சைக்கிளில், ஜாலான் பி.ரம்லியில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்தபோது பிடிபட்டான்.

 

டாங் வாங்கி காவல்துறையைச் சேர்ந்த குற்றத்தடுப்பு அதிகாரிகள், இவனது நடவடிக்கைகளைத் தூரத்திலிருந்து கண்காணித்து வந்தனர். அவர்களை கண்ட பின் ஓட்டம் பிடிக்க முயன்ற அவனை, துரத்தினர். சுமார் 500 மீட்டர் தூரம் விரட்டியப் பின்னர் ஜாலான் துரைசாமி அருகே காவல்துறையினர் கைது செய்தனர்.

 

அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது, அவன் உபயோகித்த மோட்டார் சைக்கிள் புடுவில் காணாமல்போனதாக புகார் செய்யபட்ட ஒன்று எனத் தெரியவந்தது. மேல் விசாரணைக்காக அந்த ஆடவன் தடுத்து வைக்கப்பட்டான்.

சுங்கை பேசார்,14 மார்ச்- தாம் அணிந்திருந்த மோதிரன் காரணமாக, தமது விரல் துண்டிக்கப்படாமல் காப்பாற்றப் பட்டதை எண்னி தாம் மிகவும் மனம் மகிழ்வதாக, சுங்கை பெசாரை சேர்ந்த சோ சின் உய் என்பவர் கூறினார். தனது விரல் வீக்கத்தினால், விரலில் சிக்கிக் கொண்ட மோதிரத்தை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக நீக்கியதன் விளைவாகவே அவர் இவ்வாரு கூறினார்.

 

கடந்த திங்கள் அன்று, தமது வீட்டின் தடுப்புப் பலகையில் அவரது கை தற்செயலாக இடிப்பட்டதால் அவரது விரல் வீங்கத் தொடங்கியது. பெரும் அளவில் இரத்த கசிவை ஏற்பட்டது. இதனால் அவர் தஞ்ஜோங் காராங் மருத்துவமனைக்கு விரைந்தார்.

 

மருத்துவரின் அறிவுரைக்கேற்ப வீங்கிய விரலில் சிக்கிய மோதிரத்தை அகற்ற செக்கிஞ்சான் தீயணைப்பு படையின் சேவையை அவர் நாடினார்.

தீயணைப்பு வீரர்கள் சிறப்பு சாதனங்களை உபயோகித்து அந்த மோதிரத்தை அகற்றினர்.

  

செக்கிஞ்சான் தீயணைப்புப் படையின் தலைமை அதிகாரி, முகமட் கைருல்  கூறுகையில், சோ சின் உய் விரலில் காயத்துடன் தீயணைப்பு நிலையத்திற்கு வந்ததாகவும், சிறப்பு சாதனங்களப் பயன்படுத்தி 15 நிமிடங்களுக்குள் அவரது விரலில் சிக்கியிருந்த மோதிரத்தை அகற்றியதாகவும் கூறினார்.

 

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 14-  மலேசிய இணைய இதழ்களுள் ஒன்றான மலேசியன் இன்சைடர்  இன்று பின்னிரவு தொடக்கம் தனது சேவையை முடிவுக்குக் கொண்டு வருகிறது. 

"அரசாங்கம் விதித்திருந்த தடையையும் மீறி, எங்களுடன் இணைந்திருந்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி" என  மலேசியன் இன்சைடர் பத்திரிகையின் மூத்த ஆசிரியர் ஜஹாபார் சாடிக்  தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

வணிக ரீதியான காரணங்களின் அடிப்படையில், "தி எட்ஜ் குழுமம்   மலேசியன் இன்சைடர் பத்திரிகையை   இன்று பின்னிரவு முதல் மூட திட்டமிட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி 25, 2008-ஆம் ஆண்டு தொடங்கி,  நாங்கள் சிறந்த சேவையை ஆற்றி வந்திருக்கிறோம் என நம்புகிறோம்.   இனி எங்களுக்குப் பதில் பிறர் தங்கள் சேவையைத் தொடருவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம்" என ஜஹாபார் தெரிவித்தார். 

 

 

More Articles ...