கோலாலம்பூர், அக்.11- முஸ்லிம்களுக்கு மட்டும்" என்ற அறிவிப்புப் பலகை ஒன்றை ஜொகூரிலுள்ள சலவை மையம் வைத்திருந்ததை ஜொகூர் சுல்தான் கண்டித்திருந்தது குறித்து விமர்சனம் செய்த சமயப் போதகர் ஷாமிஹான் மாட் ஜின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இன்று பிற்பகலில் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சமயப் போதகர் ஷாமிஹான் கைது செய்யப்பட்டார் என்பதை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் வான் அகமட் நஜ்முடின் உறுதிப்படுத்தினார்.

இந்தச் சமயப் போதகருக்கு எதிராக நிந்தனைச் சட்டத்தின் கீழும் தொலைத் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழும் விசாரணை நடத்தப்படும் என்றார் அவர். மேல்விசாரணைக்காக மேற்கொண்டு இவரைத் தடுத்து வைக்க நாளை நீதிமன்ற அனுமதியும் பெறப்படும் என்றார் நஜ்முடின்.  

 

மதுரை, அக்.11- ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதீன மடத்துக்கள் நித்யானந்தா நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கக்கோரி ஜெகதல பிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். 

அவர் தனது மனுவில், நித்யானந்தா, ஆதீன மடத்திற்குள் நுழைய தடை விதித்துள்ள நிலையில், மடத்திற்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நித்யானந்தா மடத்திற்குள் நுழைந்தால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படும், எனவே, மடத்திற்குள் நுழையவும், மடத்தின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். 

அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், நித்யானந்தா ஆதீன மடத்திற்குள் நுழைவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மடத்தின் நிர்வாகத்தில் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் தலையிடவும் தடை விதித்தது. 

மேலும், இது தொடர்பாக நித்யானந்தா மட்டுமின்றி தமிழக அரசின் தலைமை செயலாளர், இந்து அறநிலையத்துறை மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.    

 

ஜோர்ஜ் டவுன்,அக்.11- மலேசியாவில் ஒவ்வொரு நாளும் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் 1.6 விழுக்காடாக பதிவு செய்யப் பட்டுள்ளன.  ஆண்டுக்கு மொத்தம் 700 உயிரிழப்புச் சம்பவங்கள் நடக்கின்றன. 

அதில் 500 பேர் ஒரு வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக ஆய்வில் தெரிய வருகிறது. இந்த ஆண்டில் முதல் 9 மாதங்களில் நீச்சல் குளங்களிலும் கேளிக்கை விளையாட்டு மையங்களிலும் மொத்தம் 31 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதில் 75 விழுக்காட்டினர் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய துயரங்களைக் களைய வேண்டும் என்றால் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பை நல்க வேண்டும். முதலில், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை நீச்சல் குளத்திற்கு அழைத்துச் செல்லும் போது மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

நீர்வீழ்ச்சிகள், நீச்சல் குளங்கள், கடற்கரை ஆகியவற்றின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என மலேசிய நீர்ப் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டான்ஶ்ரீ லீ லாம் தை கூறினார்.

கோலாலம்பூர்,அக்.11- கம்போங் பாருவிலுள்ள மலிவுவிலை தங்கும் விடுதியில் நடந்த கொலை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆடவரைப் போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

மதியம் 1.35 மணியவில் கம்போங்பாரு தங்கும் விடுதி அறை ஒன்றில், இரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக டாங் வாங்கி ஓசிபிடி துணை ஆணையர் முகமட் சுக்ரி கமான் கூறினார்.

முதல் கட்ட விசாரணையில் காலை 9 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண், இரு வெளிநாட்டு ஆடவர்களுடன் தங்கும் விடுதிக்கு வந்ததாக தெரியவந்துள்ளது. ஓர் ஆடவன் அந்த பெண்ணுடன் தங்கும் விடுதிக்குச் சென்றதாகவும் இன்னொருவன் வெளியே சென்று விட்டதாகவும் முகமட் சுக்ரி சொன்னார்.

சிறிது நேரம் கழித்து அந்த ஆடவனும் தங்கும் விடுதியை விட்டு வெளியேறினான். அறையைச் சுத்தம் செய்பவர் அந்த அறைக்குச் சென்றதும் பெண் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கொலைச் செய்து கிடப்பதைப் பார்த்தார் என சுக்ரி தெரிவித்தார்.

சௌவ் கிட்டில் 4 மணியளவில் ஒருவனைப் போலீசார் கைது செய்துள்ளனர். இன்னொருவன் தப்பித்து விட்டான். இருவருக்குமே ஏறக்குறைய 20 வயது இருக்கும் என முகமட் சுக்ரி கூறினார்.

அந்த பெண், கத்தியால் குத்தப்பட்டும், கழுத்தின் இடது பக்கம் வெட்டப்பட்ட நிலையிலும் இறந்து கிடந்ததாக இருந்தது என போலீஸ் தடவியல் குழு கூறியது. பிரேதப் பரிசோதனைக்காக அந்தப் பெண்ணின் உடல் கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

கோலாலம்பூர், அக்.11- இவ்வாரத்திற்கான புதிய பெட்ரோல் விலை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரோன்-95 மற்றும் ரோன்-97 ரகப் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3 காசுகள் குறைந்துள்ளன.

ரோன்-95 லிட்டருக்கு 2 ரிங்கிட் 16 காசுகளாக விற்கப்படும். ரோன்-97 ரகப் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 46 காசுகளாக விற்கப்படும். அதேவேளையில், டீசலின் விலை லிட்டருக்கு ஏழு காசுகள் குறைந்து 2 ரிங்கிட் 10 காசுகளாக விற்கப்படும். 

இந்த புதிய எரிபொருள் விலை நிலவரம், இன்று நள்ளிரவு தொடங்கி அக்டோபர் 18-ஆம் தேதிவரையில் அமலில் இருக்கும். 

 

 

ஷா ஆலாம், அக்.11- இந்துவான தமது தந்தையின் உடலை வலுக்கட்டாயமாக நெகிரி செம்பிலானிலுள்ள இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்த இஸ்லாமிய அதிகாரிகள் மீது தாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவிருப்பதாக இறந்துப் போன மகாட் சுலைமானின் மகன் ரொசாலி மகாட் கூறினார். 

"என் தந்தையின் உடலை இந்து வழக்கப்படி அடக்கம் செய்ய நான் விரும்புவதாக கூறிய போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல்  இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்து விட்டனர்.  

அவரின் உடலை நெகிரி செம்பிலான் மாநில இஸ்லாமிய விவகாரத் துறை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கையை நான் எடுக்கவிருக்கின்றேன்", என அவர் சொன்னார். 

மலாக்காவில் வாழும் பாபா-ஞோஞா வர்க்கத்தைச் சேர்ந்த மகாட், இந்துவாகத் தான் தம்முடைய தந்தை வாழ்ந்ததாகவும், அவர் முஸ்லிம்களைப் போல் ஒருமுறை கூட தொழுததில்லை என்றும் ரொசாலி கூறினார். 

இது குறித்து தேசிய பதிவு இலாகாவிடம் தான் பேசி விட்டதாகவும், இருந்தபோதிலும், தனது தந்தையின் உடலை தன்னிடம் தருவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை அவர்கள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

"என் தந்தை இந்துவா அல்லது முஸ்லிமா என்று நீதிமன்றம் முடிவெடுக்கட்டும்," என்றார் அவர். 

கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதியன்று, துவாங்கு ஜாப்பார் மருத்துவமனையில் மகாட் சுலைமான் காலமானார். அவரின் பெயரின் நடுவில் 'பின்' என்று குறிப்பிடப் பட்டிருந்த காரணத்தால், அம்மருத்துவமனை அதிகாரிகள் இஸ்லாமிய இலாகாவிற்கு தகவல் தெரிவித்தனர்.  

அதனைத் தொடர்ந்து, தனது தந்தை இந்து மதத்தைத் தான் பின்பற்றினார் என்பதை எடுத்துக் கூறுவதற்காக தான் இஸ்லாமிய விவகாரத் துறையை தொடர்புக் கொண்டதாகவும், அவர்கள் 11-ஆம் தேதி வரை பொறுத்திருக்குமாறு தன்னிடம் கூறியதாகவும் ரொசாலி சொன்னார். 

அதற்குள் அங்கு வந்த இஸ்லாமிய விவகாரத் துறை அதிகாரிகள், மகாட்டின் உடலை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்துவிட்டனர். இரண்டு தினங்கள் கழித்து, தேசிய பதிவு இலாகா, மகாட்டின் இனம் என்னவென்று தெரியவில்லை எனவும், அவர் 'சீன' இனத்தின் கீழ் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கோத்தாபாரு,அக்.11- கிளாந்தான் மாநிலத்தின் மிக ஆபத்தான குற்றவாளிகள் எனக் கருதப்படும் 13 பேரின் புகைப்படங்களை கிளந்தான் போலீஸ் இன்று வெளியிட்டுள்ளது.

அதில் 9 பேர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் மூன்று பேர் கொலை வழக்கில் சம்மதப்பட்டவர்கள் எனவும் மாநில குற்றவியல் புலனாய்வுத் துறை தலைமை உதவி ஆணையர் ஃபக்ரி சே சுலைமான் கூறினார்.

மாநில போலீஸ் 800 குற்றவாளிகளைத் தேடி வந்தனர். அதில் 264 பேரை போலீசார் கைது செய்து விட்டதாகவும், மற்றவர்களைத் தேடி வருவதாகவும் ஃபக்ரி சே கூறினார்.

இவர்களில் 13 குற்றவாளிகள் தான் மிகவும் ஆபத்தான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள். அவர்களைத்தான் நாங்கள் தீவிரமாக தேடி வருகிறோம் என்று ஃபக்ரி சொன்னார். 

More Articles ...