கோப்பெங், ஏப்ரல் 20- ஈப்போ நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் டிரைலர் லாரி ஒன்று தடம் புரண்டது. இதனால் ஏறக்குறைய 4 கிமீ தூரத்திற்கு கடும் வாகன நெரிசல் உண்டானது.

கோப்பெங்கிலிருந்து சிம்பாங் புலாய் செல்லும் நெடுஞ்சாலையில் இன்று காலை 8 மணியளவில் டிரைலர் லாரி ஒன்று தடம்புரண்டது. நடுசாலையில் கவிழ்ந்த லாரியினால் இரு வழித்தடங்களும் மூடின.

இதனால் வடக்கு நோக்கி செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் நிலைக்குத்தின. மாற்று வழி பாதையாக கோப்பெங் டோல் வழி வெளியேறி பழைய பாதை வழியாக ஈப்போ மற்றும் பினாங்கு நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கோலாலம்பூர், ஏப்ரல் 20- ஜனநாயக செயல் கட்சியின் இரு தலைவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளவேளை, மேலும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. 

புக்கிட் பெண்டேரா தொகுதியின் ஜசெக நாடளுமன்ற உறுப்பினர் ஜைரில் கிர் ஜொகாரியும், ஜசெகவின் இளைஞர் பிரிவின் உறுப்பினர் டயானா சோபியாயும் போல தோற்றம் கொண்ட இருவர் உணவகம் ஒன்றில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சமூக வலைத்தளங்களில் பரவியது. நான்கு புகைப்படங்கள் வெளியானவேளை, அதில் ஒரு புகைப்படத்தில் அவ்விருவரும் முத்தமிட்டுக் கொள்வது போன்ற காட்சியும் இருந்தது. 

இந்நிலையில், அப்புகைப்படத்தில் இருப்பது நான் அல்ல என்றும் அது செயற்கையாக தயாரிக்கப்பட்ட படம் என்றும் ஜைரில் நேற்று கூறியிருந்தார். "அப்படத்தில் இருப்பது நான் அல்ல. அது என் மீதான தனிப்பட்ட தாக்குதலைக் காட்டுகிறது" என அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இருவரும் நெருக்கமாக அமர்ந்திருக்கும் மற்றொரு புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இருவரும் கைபேசியைப் பார்ப்பது போலவும் கைப்பேசியின் திரை வெளிச்சம் அவர்களின் முகத்தில் பட்டு முகம் தெரிவதும் தெளிவாக தெரிகிறது. 

நாட்டின் அடுத்த பொதுத்தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்ற நிலையில், கட்சி மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ள இச்சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கோலாலம்பூர், ஏப்ரல் 20- கஜானா நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் தனது இயக்குனர் வாரியத்தின் உறுப்பினராக டத்தோ டாக்டர் நிர்மலா மேனனை நியமித்ததுள்ளது. இவர், நாட்டின் காப்புறுதி நிறுவன வரலாற்றில், முதல்நிலை செயல் அதிகாரியாக (CEO) பணியாற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கஜானாவின் இயக்குனர் வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்க பண முதலீட்டு வியூக வாரியம் அறிக்கை வழி தெரிவித்துள்ளது. காப்புறுதி மற்றும் சுகாதார துறைகளில் 30 ஆண்டு கால அனுபவம் டாக்டர் நிர்மலாவிற்கு உண்டு என்பதால் இயக்குனர் வாரிய உறுப்பினராக அவரை நியமித்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக, மெட்லைஃப் ஆசியா பசிபிக் காப்புறுதி நிறுவனத்தில் ஹாங்காங், மலேசியா, வியட்நாம், வங்காளதேசம், நேபாளம், மியன்பார் ஆகிய நாடுகளுக்கான சந்தை மற்றும் ஆரோக்கியம் பகுதியின் தலைவராக செயல்பட்டு வந்தார். 

மேலும், மலேசிய ஐஎன்ஜி காப்புறுதி நிறுவனத்தின் முதல்நிலை செயல் அதிகாரியாக பணியாற்றிய இவர், நாட்டின் காப்புறுதி நிறுவன CEO-வாக பணியாற்றிய முதல் பெண் என்ற பெருமையைக் கொண்டவர். இந்தியாவில் மைசூர் பல்கலைக்கழகத்தில் தனது பட்டபடிப்பை முடித்த இவர், முதல் நிலை வகுப்பில் தேர்வு பெற்றவர் என்பது சிறப்புக்குரிய விசயமாகும்.

 கோலாலம்பூர், ஏப்ரல்.19- வாரம்தோறும் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் திட்டத்தின் கீழ் இவ்வாரத்திற்கான ரோன்-95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 காசுகள் அதிகரித்துள்ளது. இது நாளை முதல் நடப்புக்கு வருகிறது.

தற்போது லிட்டர் ஒன்றுக்கு ரிம.2.24 ஆக இருக்கும் ரோன்-95 பெட்ரோல், நாளை முதல் ரிம.2.27 ஆக விற்கப்படும். அதேவேளையில் ரோன்-97 பெட்ரோல் விலை, இரண்டு காசுகள் அதிகரிக்கப்பட்டு ரிம.2.52-இல் இருந்து ரிம.2.54 ஆக விற்கப்படும்.

நாளை முதல் டீசல் விலையும் 5 காசுகள் அதிகரிக்கிறது. தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரிம.2.16 ஆகும். ஆனால், நாளை முதல் லிட்டருக்கு ரிம.2.21 ஆக விற்கப்படும். இவ்வாரத்திற்கான பெட்ரோல் விலை, நாளை அமலுக்கு வந்த பின்னர் ஏப்ரல் 26ஆம் தேதிவரை நடப்பில் இருக்கும்.

 

அம்மா.. இந்த ஒற்றைச் சொல்லில் தான் உலகமே இயங்குகிறது. அன்பையும் பாசத்தையும் ஊட்டி தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் தன் கண்ணீருக்குள் மறைத்து, பிள்ளையின் சிரிப்பில் தன் சந்தோச உலகை கண்ட உங்கள் அம்மாவை மகிழ்ச்சிப்படுத்திட அரிய தருணம்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு வணக்கம் மலேசியாவும்  ஏசான் ஜெயா நிறுவனமும் இணை ஆதரவாளர் துபாய் ஜுவலர்ஸும் இணைந்து கவிதைப் போட்டியை நடத்துகின்றன.

பாசத்தால் தாலாட்டி வளர்த்த உங்கள் அம்மாவைக் கவிதையால் தாலாட்ட ஒரு வாய்ப்பு. 

உங்கள் அம்மாவைப் பற்றி சுயமாக கவிதை ஒன்றினை எழுதுங்கள். அதனை நீங்களே தெளிவான உச்சரிப்போடு வாசித்து LANDSCAPE வடிவில் காணொளியாக பதிவு செய்யுங்கள். (செல்ஃபி காணொளியைத் தவிர்ப்பது நல்லது)

காணொளி 30 வினாடிகளுக்கு மேற்போகாமல் இருத்தல் வேண்டும். பதிவு செய்த காணொளியை வணக்கம் மலேசியாவின் கைப்பேசி எண்ணான 0111-6141609 -க்கு வாட்ஸ்அப் வழி அனுப்பவும்.

 

போட்டிக்கு அனுப்பப்படும் காணொளிகள், வணக்கம் மலேசியாவின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வணக்கம் மலேசியா முகநூல் பக்கத்தில் அதிகமான ஆதரவு பெரும் காணொளிகள் நடுவர் குழுவினால் ஆராயப்பட்டு அதிலிருந்து மூன்று கவிதைகள் சிறந்த கவிதைகளாக தேர்ந்தெடுக்கப்படும்.  மூன்று வெற்றியாளர்களுக்கு முதல் பரிசுகளும் மேலும் எழுவருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.

 

பரிசுகள்

சிறந்த மூன்று கவிதைகளுக்கும் முதன்மை பரிசான ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் இரவு உணவு விருந்து வழங்கப்படும். இதில்  பங்கேற்பாளர்கள் தங்கள் அம்மாவுடன் இரவு உணவில் கலந்து கொள்ளலாம். (பங்கேற்பாளர் மற்றும் அவரின் அம்மாவுக்கு மட்டுமே அனுமதி)

 

அடுத்த நிலையில் தேர்ந்தெடுக்கப்படும் ஏழு கவிதைகளுக்கு தலா ஓர் ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

 

போட்டிக்கான விதிமுறை

*  16 வயது முதல் 35 வயது வரையிலான பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

* கவிதை கரு: உங்கள் அம்மா பற்றிய கவிதை. சுயப்படைப்பாக இருந்தல் கட்டாயம்.

* பங்கேற்பாளர்கள் தங்களுடைய காணொளியைப் பதிவுச் செய்யும்போது அவர்களின் அம்மா உடன் இருப்பது சிறப்பு. வாய்ப்பு இல்லையென்றால் அவரின் புகைப்படத்தை உடன் வைத்துக் கொள்ளலாம். 

* காணொளிகள் அனுப்பவேண்டிய இறுதிநாள் : 4/5/2017

* முகநூலில் காணொளி பதிவேற்றம் செய்ய தொடங்கும் நாள் : 2/5/2017

* முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் : 8/5/2017

 

பங்கேற்பாளர்களின் தகவல்கள்:

பங்கேற்பாளர்கள் தங்களின் காணொளியை வாட்ஸ்அப்பில் அனுப்பும் போது கட்டாயம் அனுப்பவேண்டிய விவரங்கள்:

1) பங்கேற்பாளரின் முழு பெயர்

2) பங்கேற்பாளரின் அம்மாவின் முழு பெயர்

3) பங்கேற்பாளரின் அடையாள அட்டை எண்

4) பங்கேற்பாளரின் தொழில் மற்றும் முகவரி

 

மேல்விவரங்களுக்கு 03-2284 3000 என்ற எண்ணில் வணக்கம் மலேசியாவைத் தொடர்பு கொள்ளவும்.

புத்ராஜெயா, ஏப்ரல் 19- முகநூலின் தாக்கம் அதிகம் இருப்பதால் 95 விழுக்காடு மக்கள் முகநூலில் பரப்பப்படும் தீவிரவாத கொள்கைளினால் ஈர்க்கப்படும் சாத்தியம் இருக்கிறது என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி எச்சரிக்கை விடுத்தார். 

தொழில்நுட்ப நிபுணர்களும் மனநல நிபுணர்களும் நடத்திய ஆய்வில் இந்த தகவல் கிடைத்துள்ளது என்று அவர் சொன்னார்.

முகநூலில் திரிக்கப்பட்ட செய்திகளையும் இனவாத, மதவாத கருத்துகளையும் பரப்புவது சுலபம். தீவிரவாத கும்பல்கள் பல ‘புனித போர்’ கொள்கைகளைப் பரப்பி வருகின்றன. எச்சரிக்கையாக இல்லாத மக்கள் இதுபோன்ற தீய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பொதுமக்களைத் தாக்கவும் தங்கள் அரசாங்கத்தை எதிர்க்கவும் துணிகின்றனர் என்று அவர் விளக்கினார்.

சமூக வலைதளங்களின் சக்தியை இது உணர்த்துகிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி நல்லதும் செய்யலாம் தீயதும் செய்யலாம். மக்களிடையே சுலபமாக தொடர்புக் கொள்ள சமூக வலைதளங்கள் உதவுவதால் பலர் அதில் வெளியாகும் தகவல்களை நம்புகின்றனர்.

சமூக வலைதளங்களில் உள்ள தீய விசயங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நன்னெறி இல்லாத, ஒற்றுமையைச் சீர்குழைக்கும் தகவல்களை நம்பாமல் இருப்பது அவசியம். மக்கள் எச்சரிக்கையாக இருந்து நாட்டின் ஒருமைப்பாட்டை வளர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வாஷிங்டன், ஏப்ரல்.19- வடகொரியாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டிருக்கும் அமெரிக்கா, தனது கடற்படைப் போர்க் கப்பல்களின் நடமாட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களால் தர்மசங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

தனது 'கார்ல் வின்சன்' விமானம்தாங்கி போர்க்கப்பல் அணி, கொரிய தீபகற்பத்திற்குச் செல்லும்படி அமெரிக்க கடற்படையால் பணிக்கப்பட்டது. வடகொரியாவை எச்சரிப்பதற்காகவும் அச்சுறுத்துவதற்காகவும் இந்தப் போர்க்கப்பல் அணி, கொரிய கடற்பகுதிக்கு அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அண்மையில் முக்கிய செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், தங்களின் 'அர்மடா' போர்க்கப்பல் அணி கொரிய கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“அர்மடா சக்திவாய்ந்த போர்க்கப்பல் அணி. விமானம் தாங்கிக் கப்பல்களை விட அதிக ஆற்றல் கொண்ட போர்க்கப்பல் இது' என்று அதிபர் டிரம்ப் பெருமையாக அந்தப் பேட்டியின் போது கூறினார். அண்மையில் அவர் குறிப்பிட்ட அர்மடா போர்க்கப்பல் அணி, கொரிய கடற்பகுதிக்கு நேர் எதிர்த்திசையில் 3,500 மைல்களுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், எப்படி அது கொரிய கடற்பகுதிக்குச் சென்றிருப்பதாக அதிபரால் கூற முடிந்தது? என்று விசாரணை நடத்திய போது, அமெரிக்க இராணுவத் தளபதிகளுக்கு இடையே நிலவிய தவறான புரிந்துணர்வே காரணம் என்று தெரியவந்தது.தற்போது இப்படியொரு தவறான தகவலைத் தந்ததால் அதிபர் டிரம்பும், அதிபர் மாளிகை நிர்வாகமும் கடும் கோபம் அடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. 

More Articles ...