கோலாலம்பூர், ஆக.19- இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோலாலம்பூர், பேங்க் நெகார இரயில் நிலையத்தின் இடையே கேடிஎம்.மின் ஒரு சரக்கு இரயில் தடம் புரண்டதால் வழக்கத்துக்கு மாறாக இரயில் சேவைகள் 20 நிமிடத்திலிருந்து 30 நிமிடம் வரை தாமதமடையும். 

இடிஎஸ் இரயில் சேவை 15 நிமிடத்திலிருந்து 20 நிமிடம் வரை தாமதமாகும். இன்று மாலை 4 மணிக்குள் இந்தத் தடங்கலைச் சரி செய்து விடுவோம் என்று கேடிஎம்நிறுவனம் கூறியது.

இன்று சீ கேம்ஸ் தொடக்கவிழா நடைபெறவிருக்கும் வேளையில் இரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டதற்கு கேடிஎம் நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. 

இரயில் சேவைப் பற்றிய தகவலை உடனுக்குடன் கேடிஎம் அகப்பக்கம் (www.ktmb.com.my), முகநூல் (Facebook KTM Berhad), டிவிட்டர் (Twitter @ktm_berhad) அல்லது 03-2267 1200 என்ற எண்களுக்குத் தொடர்பு கொண்டு விபரத்தைப் பெற்று கொள்ளலாம். 

 

கோத்தா கினபாலு, ஆக.19- தனது பெற்றோருக்குப் பல முறை அழைப்பு விடுத்தும் கண்டுக்கொள்ளாமல் அலட்சியம் செய்ததால் வேலையில்லா இளைஞர் ஒருவர், தன்னுடைய நாக்கை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்த துயரச் சம்பவம் இங்கு நடந்துள்ளது.

கத்தியால் தனது நாக்கை அறுத்த பின்னர், அலாஸ்மேரா கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்த தனது வாடகை அறையிலிருந்து குதிக்க முற்பட்ட 22 வயதுடைய இளைஞரை அவரது உறவினர் தடுத்து நிறுத்திக் காப்பாற்றினார்.

அவரது உறவினர் உடனே மருத்துவமனையைத் தொடர்பு கொண்டார். பின்னர் அந்த இளைஞனுக்கு நாக்கில் பல தையல்கள் போடப்பட்டன. 

இதனிடையே, தற்கொலை செய்ய முயற்சித்த அந்த இளைஞர் ஒரு வாரமாகவே மன உளைச்சலுக்கு ஆளாகி அமைதியாகவே காணப்பட்டான் என்று அவரது உறவினர் கூறியதாக கோத்தா கினபாலு போலீஸ் துணை தலைமை ஆணையர் எம்.சந்திரா தெரிவித்தார்.

இருப்பினும், அந்த இளைஞர் தனது மனக் கவலைகளையும் பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார் என்றார் அவர். அந்த இளைஞர் தற்கொலை செய்ய பயன்படுத்திய 10 அங்குல நீளமுள்ள கத்தியைப் போலீசார் கைப்பற்றினர்.

தற்கொலை செய்ய முயற்சித்ததற்காக, குற்றவியல் சட்டம் பிரிவு 309-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் அந்த இளைஞனுக்கு கூடுதல் பட்சமாக ஓராண்டுக்கும் மேல் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

 

அலோர் ஸ்டார். ஆக. 19- புக்கிட் அமானைச் சேர்ந்த டி9 பிரிவின் போலீஸ் துப்பறிவாளர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். 50 வயது மதிக்கத்தக்க அவர் சங்லூனில் உள்ள அவரின் வீட்டிலேயே கொலைச் செய்யப்பட்டார்.

சப் இன்ஸ்பெக்டரான அபு ஹாசிம் என்பவர் நேற்று நபோவில் உள்ள அவரின் இல்ல வளாகத்தில் கழுத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார். 

சம்பவம் குறித்து நேற்று இரவு 10.25 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீஸ் கூறியது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் பின்புற கழுத்தில் நான்கு தோட்டாக்கள் பாய்ந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது. 

 

 

கோலாலம்பூர், ஆக.17- இன்று மாலையில் பெய்த கனத்த மழையால் கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு சாலைகளில் போக்குவரத்துகள் நிலைகுத்தின.

இந்தத் திடீர் வெள்ளத்தால் ஜாலான் மாரோஃப் பங்சாரில் மே பேங்கிலிருந்து தெலாவி செல்லும் பாதையும் சன்வேயில் தாமான் மலூரியிலும் பாதிப்புகள் ஏற்பட்டன.

சுபாங் விமான நிலையத்திலிருந்து கூட்டரசு நெடுஞ்சாலை வரையிலும் சித்தா பேரங்காடியிலிருந்து கிளேன் மேரி எம்.ஆர்.டி ரயில் நிலையம் வரையிலும் வாகனங்கள் நத்தைகள் போல் நகர்வதாக 'ஸ்டார்' தனது அகப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

எம்ஆர்ஆர் 2–இல் தேசிய வனவிலங்கு பூங்காவில் இருந்து தாமான் ஹீல்வியூ வரைக்கும் ஏற்பட்ட சாலை நெரிசல் தற்போது சுமூகமானாலும் கெசாஸ் நெடுங்சாலையில் வாகனங்கள் மெதுவாகத்தான் நகர்கின்றன.

இதனிடையே, ஜாலான் அப்துல் ஹாலிமில் ஏற்பட்ட வெள்ளத்தால் கேடிஎன் கட்டடத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குச் செல்லும் பாதையிலும் நெரிசல் ஏற்பட்டுள்ளது 

மேலும், கிள்ளானில் உள்ள புக்கிட் லஞ்சானிலிருந்து சுபாங்கிற்குச் செல்லும் சாலையும் ஷா அலாமிலிருந்து டாமான்சாரா செல்லும் சாலையும் மிதமான சாலை நெரிசல் சிக்கியுள்ளதாக பிளஸ்லைன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், கோலாலம்பூரிலிருந்து சிரம்பான் செல்லும் நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் மந்தமாகவே நகர்ந்தன.

 

கிள்ளான், ஆக.18- மருத்துவமனையின் உணவகத்தில், உணவு  அடுக்குத் தட்டில் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் முட்டைக்கோஸை எலி ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகி பரபராப்பை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக  கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் உணவகத்தை தற்காலிகமாக மூடும்படி கிள்ளான் மாவட்ட சுகாதாரப் பிரிவு உத்தரவிட்டது. 

இந்த உத்தரவு அறிக்கை, கிள்ளான் மாவட்ட சுகாதார அலுவலகம் இன்று மதியம் 2 மணியளவில் உணவகத்தில் ஒட்டியது. இந்தக் காணொளி தங்கள் பார்வைக்கு வந்ததும் சுகாதார அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டதாக தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் டிங் லாய் மீங் கூறினார். 

உடனடி நடவடிக்கையாக, உணவகம் முழுவதையும் சுத்தம் செய்யுமாறு உணவகம் நடத்துபவருக்கு தாம் உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.  

எனினும், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண, சுகாதார அலுவலகத்தின் உதவி எங்களுக்கு தேவை என்று டாக்டர் டிங் கூறினார். அந்தக் காணொளி எப்போது எங்கு யாரால் எடுக்கப்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சுத்தம் செய்யும் நடவடிக்கை முழுமையாக முடிந்த பின்னர் இன்று மாலையில் உணவகம் மறுபடியும் திறக்கப்படும் என டாக்டர் டிங் கூறினார்..

எலிக் காணொளி பரபரப்பாக சமூக ஊடகங்களில் பரவிய போது அந்தச் சம்பவம் எந்த மருத்துவமனையில் நடந்திருக்கும்? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. சிலர் கிள்ளான் மருத்துவமனை என்றும் இன்னும் சிலர் சிரம்பான் அல்லது பினாங்கு மருத்துவமனை என்றும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இறுதியில், அது கிள்ளான் மருத்துவமனைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

 

 

கோலாலம்பூர், ஆக.18- மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் 19-ஆவது முனைவர் இரா.தண்டாயுதம் சொற்போர் போட்டி இவ்வாண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கிறது. 

காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடத்தப்படவிருக்கும்  இப்போட்டியில் அரசாங்க அல்லது தனியார் உயர்க்கல்விக்கூடம், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மற்றும் தொழில்திறன் பயிற்சிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் குழுவாக வந்து பங்கேற்கலாம். 

ஈராண்டுகளுக்குப் பின்னர் மலரவிருக்கும் இந்த19-ஆவது முனைவர் இரா.தண்டாயுதம் சொற்போர் போட்டியானது மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் வெற்றிப் பாதையின் ஓர் அங்கமாய் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இப்போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு:-

1) இப்போட்டியில் அரசாங்க அல்லது தனியார் உயர்கல்விக்கூடம், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மற்றும் தொழில்திறன் பயிற்சிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டுமே பங்குப் பெற முடியும். 

2). ஓர் உயர்க்கல்விக் கூடத்திலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்கலாம்.

3) ஒரு குழுவில் 4 போட்டியாளர்கள் மட்டுமே பங்கெடுக்கமுடியும்.

4). போட்டியில் பங்கெடுக்க விரும்பும் மாணவர்கள் பதிவு பாரத்தைப் பூர்த்திச் செய்வதோடு RM40–ஐ பதிவுக் கட்டணமாகப் பதிவுப் பாரத்தில் கொடுக்கப்படும் வங்கியில் கட்டவேண்டும்.

5) தேவைப்படும் குழுக்களுக்கு மட்டும் தங்கும் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்

6). பதிவுக்கான இறுதி நாள் 28 செப்டம்பர் 2017.

இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் “Tamil Language Society of University Malaya official” என்ற அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திற்கு சென்று செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதிக்குள் தங்களைப் பதிவுச் செய்து கொள்ளலாம். 

இந்த நிகழ்ச்சியைப் பற்றிய மேல் விபரங்களுக்குத் திருமாறன் (011 12310900), சரத்குமார் (016 2437305), சுபாராகினி (016-2652705) ஆகியோருடன் தொடர்பு கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பெசுட், ஆக.18-  திரெங்கானுவில், கம்போங் லே அவுட் தோக் ஹஸ் என்ற இடத்தில் 2 வயதுடைய சிறுமி, குளவி கொட்டியதால் உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்தது.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று நண்பகல் 12.45 மணியளவில் நடந்துள்ளது. தனது வீட்டிற்கு அருகே இருக்கும் ஓர் உணகத்தின் முன்பு அந்தச் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடிரென்று குளவிகளால் தாக்கப்பட்டதாக அவளின் தாயார் ரூபியா இஸ்மாயில்  கூறினார்.

இதனிடையே, மகளின் திடிர் அலறலைக் கேட்டு அவள் விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்று பார்த்த பொழுது அவள் சுயநினைவின்றி விழுந்து கிடந்ததாக 69 வயதுடைய அந்தச் சிறுமியின் தாத்தா கண்ணீர் மல்க கூறினார்.

விளையாடிக் கொண்டிருந்த பொழுது அந்தச் சிறுமியை ஒரு குளவிக் கூட்டமே வந்து உடல் முழுவதும் கொட்டியது. இதனால் வலியால் துடித்த அந்தச் சிறுமி மயங்கி விழுந்தாள். தனது மகளின் நிலையைக் கண்டு பதற்றம் அடைந்த அவளின் தாத்தா, உடனடியாக கோலா திரங்கானுவில் உள்ள சுல்தானா நூர் ஸஹிரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

எனினும், மருத்துவர்களின் போராட்டம் பயனளிக்கவில்லை. சிறுநீரகம் செயலிழந்து போனதால் அந்தச் சிறுமி மாலை 4.30 மணிக்கு உயிர் இழந்தாள்.

இதே போன்று, 12 நட்களுக்கு முன்னர் 8 வயது சிறுவன் ஒருவன் குளவிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.

More Articles ...