Home | சமூகம் | மெர்டேக்கா சதுக்கத்தில் இந்தியரின் மணியோசை

மெர்டேக்கா சதுக்கத்தில் இந்தியரின் மணியோசை

By
Font size: Decrease font Enlarge font
மெர்டேக்கா சதுக்கத்தில் இந்தியரின் மணியோசை

 

தலைநகர், மெர்டேக்கா சதுக்கத்தின் முன்புறமுள்ள சுல்தான் அப்துல் சாமாட் கட்டடத்தின் மணி ஒவ்வொரு நாளும் ஒலிப்பதை நம்மில் பலர் கேட்டிருப்போம்.

அந்த ஒளியின் பின்னணியில் ஓர் இந்தியர் வியர்வை சிந்துகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கடந்த 36 ஆண்டுகளாக , சோர்வுக்கும் சலிப்புக்கும் இடம் கொடுக்காமல், எண்பது படிகளைக் கடந்து மணிக்கு சாவிகொடுத்து வருகிறார் 55 வயதான குணசேகரன் வேலையா.

இந்த 40 மீட்டர் உயரம் கொண்ட மணிக்கூண்டு கோபுரம் 114 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

இந்த மணி சரியான நேரத்திற்கு ஒலிக்க வேண்டுமானால் “நிமிடத்துக்கான கருவியை 302 முறையும், “ஒலி எழுப்பப்படுவதற்கான” கருவியை 28 முறையும் சுழற்ற வேண்டும்.

இவ்வளவு கடினமா? என்று நாம் பிரமிக்கும் வேலையை சர்வ சாதாரணமாக செய்து வருகிறார், உழைக்கும் வர்க்கத்தினரின் முன்னோட்டியாய் திகழும் குணசேகரன்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாவிகொடுக்கப்படும், இம்மணி ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு தடவை ஒலிக்கின்றது.

சுதந்திர தினம், புத்தாண்டு, அரசு நிகழ்ச்சிகள் என பல்வேறு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளின் கொண்டாட்டத்தைக் குறிப்பதற்காகவும் இந்த மணி ஒலிக்கச் செய்கிறது.

படி ஏறினோம், சாவி கொடுத்தோம், என்றில்லாமல், இந்த இயந்திரங்களை மிக நுணுக்கமாகவும் துல்லியமாகவும் பாதுகாக்க வேண்டும்.

கொஞ்சம் கவனம் சிதறினாலும் மணி ஒலிக்காது.

“இந்த மணி சத்தம் முன்பு பங்சார் வரை கேட்கும். ஆனால், வாகன ஒலியின் தாக்கத்தினால், தற்போது, மெர்டேக்கா சதுக்கத்தை சுற்றி உள்ளவர்களின் செவிகளுக்கு மட்டுமே இந்த மணியோசை கேட்கிறது” என குணசேகரன் கூறினார்.

கஷ்டம் என்று நினைத்தால் அனைத்தும் கஷ்டம் தான். கையும் காலும் அசந்து போனாலும் கூட இந்த வேலையைச் செய்வதை நிறுத்திக் கொள்வோம் என தாம் ஒருபோதும் மனம் தளர்ந்தது இல்லை என்கிறார் குணசேகரன்.

குளிர்சாதன அறையில் உட்கார்ந்து பணிப்புரிய ஆசைப்படும் ஒரு தரப்பு இளைஞர்களுக்கு மத்தியில் குணசேகரன் வயதானாலும் இளமை துள்ளலோடு உற்சாகமாக தம்முடைய கடமையைச் செய்கிறார்.

மலாயா சுதந்திரம் அடைந்தபோது, சுதந்திர தாகத்திற்குக் கிடைத்த மகிழ்ச்சி அலையாய் இந்த மணி மக்களின் செவிகளில் ஒலித்தது.

இன்றும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் வரலாற்றுச் சின்னமான மணிக்கூண்டு கோபுரத்தில் குணசேகரனின் கரச்சுவடுகள் பதிந்திருப்பது நமக்கு பெருமைதானே…

  • Email to a friend Email to a friend
  • Print version Print version
  • Plain text Plain text

Tagged as:

No tags for this article

Rate this article

3.00
Powered by Vivvo CMS v4.6