கர்நாடக முதல்வர் சித்ராமையா மகன் மரணம் 

பிற மாநிலங்கள்
Typography

பெங்களூர், 31 ஜூலை- கர்நாடக  முதல்வர் சித்ராமையாவின் புதல்வரான ராகேஷ் (வயது 39)  பெல்ஜியம் மருத்துவமனையில் உயிரிழந்தார். கணையம், ஈரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழப்பால் அவர் உயிர் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. 

ராகேஷ்ச-க்கு அரசியலில் ஈடுபாடு உண்டு என்றாலும், நேரடியாக அவரை சித்ராமையா களமிறக்காமல் காத்திருந்தார்.   ராகேஷ் கன்னட திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளார். 

தமது பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகேஷ்க்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனையடுத்து அவர் உடனடியாக  பெல்ஜியம்  தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மகனை நேரில் சென்று  காண்பதற்காக பெல்ஜியம் சென்றார் சித்ராமையா. ராகேஷின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவரை ரஜினிகாந்த் உள்ளிட்ட  பிரபலங்கள் சிகிச்சை பெற்ற சிங்கப்பூர் மவுண்ட் எலிசபத் மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிட்டிருந்தனர். 

 இந்நிலையில் ராகேஷின் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கின.   அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ராகேஷ்  இன்று உயிரிழந்தார். 

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கணையம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், அவர்  உணவுக்கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், சுற்றுலாவின் போது, உணவுக்கட்டுப்பாட்டை மீறியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  சித்ராமையா-பார்வதி தம்பதிக்கு  ராகேஷ், யதீந்தரா ஆகிய இரு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS