ஒரே ராக்கெட்டில் 104 துணைக் கோளங்கள்; விண்வெளியில் நாளை இந்தியா அதிரடி!

தொழில்நுட்பம்
Typography

புதுடில்லி, பிப்.14- விண்வெளி ஆதிக்கத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவிய போட்டாப் போட்டிகள் என்பது ஒரு கடந்த காலமாகிவிட்டது. ஆனால், இந்தியா இப்போது புதிய அதிரடியில் இறங்கியுள்ளது. ஒரே ராக்கெட் மூலம் 104 துணைக்கோளங்களை விண்வெளிக்கு நாளை அனுப்பி அசத்தப் போகிறது இந்தியா.

இதுவொரு சாதனை முயற்சி. இது வெற்றி பெறுமானால் இந்தியா விண்வெளித் துறையில் வெற்றி முத்திரையை மிக அழுத்தமாக பதித்துவிட்டது என்று அர்த்தமாகும்.

செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் அபார வெற்றி கண்ட இந்தியாவுக்கு, ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைத் துணைக் கோளங்களை அனுப்பும் முயற்சி இன்னொரு மைல்கல்லாக அமையும்.

                     ## ராஜேஸ்வரி ராஜாகோபாலன்

கடந்த 2014ஆம் ஆண்டில் ரஷ்யா ஒரே ராக்கெட் மூலம் 37 துணைக்கோளங்களை அனுப்பி சாதனையைப் பதிவு செய்தது. அதைக் காட்டிலும் மூன்று மடங்கு கூடுதலான துணைக்கோளங்களை நாளை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா தயாராகி விட்டது.

இது மிகப்பெரிய விஷயம். இந்திய விண்வெளித்திட்டம் எவ்வளவு நவீனமானது என்பதை இது புலப்படுத்துவதாக அமையவிருக்கிறது என அணுசக்தி மற்றும் விண்வெளி ஆய்வு மைய தலைவரான ராஜேஸ்வரி ராஜாகோபாலன் தெரிவித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டுக்கான விண்வெளித் திட்டங்களில் தற்போது ஆசிய நாடுகளான இந்தியா, ஜப்பான், சீனா ஆகியவை போட்டாப் போட்டியில் உள்ளன.

கடந்த 20ஆம் நூற்றாண்டில், கெடுபிடி போர்க்காலத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவிய விண்வெளிப் போட்டியைப் பிரதிபலிப்பதாக இந்த ஆசிய நாடுகளுக்கு இடையிலான விண்வெளிப் போட்டிகள் அமைந்துள்ளன என்று நிபுணர்கள் கருத்துரைத்திருக்கின்றனர். ஆசியாவில், தென்கொரியாவும் இத்தகைய போட்டிக்குள் மூக்கை நுழைக்க ஆர்வம் கொண்டுள்ளது.

1962ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தினால் உருவாக்கப்பட்டு செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம் தான், உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க்கும்படி செய்தது. மிகக் குறைந்த செலவில் இந்தச் சாதனையை இந்தியா நிகழ்த்திக் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS