லண்டன், பிப், 17-பூகம்பத்தை முன்கூட்டியே தெரிவிக்கும், கைத்தொலைபேசிச் செயலி'application'கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

'மை ஷேக்' என்ற, கைத்தொலைபேசிச் செயலியை, பதிவிறக்கம் செய்து கொண்டால், பூகம்பம் ஏற்படுவதை முன்கூட்டியே, எச்சரிக்கை செய்தியாக அளிக்கும் என்று இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'ரிக்டர் ஸ்கேல்' எனப்படும், பூகம்ப அளவீடு கருவி அளவுக்கு இல்லை என்றாலும், சிறப்பான முறையில் இந்த செயலி செயல்படும் என்று தெரிவிக்கும் இதன் தயாரிப்பாளர்கள், 'தரையில், 10 கிலோ மீட்டருக்கு மேல் ஏற்படும் பூகம்ப அதிர்வுகளை, இந்த செயலி உணரும்,' என்கின்றனர்.

அதற்காக இதில், 'ஆக்சிலோ மீட்டர்ஸ்' எனப்படும், உணர்வு தொழில்நுட்பம் இருப்பதாக கூறுகின்றனர். எனினும், இதன் உண்மைத்தன்மை, பூகம்ப ஆய்வு வல்லுனர்களால் உறுதிபடுத்தப்படவில்லை. பல நாடுகளைச் சேர்ந்த, பூகம்ப அறிவியல் வல்லுனர்கள் இந்தப் செயலியைத் தயாரித்துள்ளனர். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., விவேகக் கைத்தொலைபேசிகளில் இந்தப் செயலியைப் பயன்படுத்தலாம். 

 

பூமியை நோக்கி வரும் அரக்கத்தமான விண்கற்களை எப்படிச் சமாளிப்பது என்ற கவலை நமது விஞ்ஞானிகளுக்கு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

கடந்த பத்து ஆண்டுகாலத்திற்கு மெலாக இது பற்றிய ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டு, அண்மையில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அவர்கள் அடைந்திருக்கின்றனர்  எனத் தெரிய வந்துள்ளது.

சக்திவாய்ந்த லேசர் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தி  ஒரு குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி சிதைக்க முடியும் என்பது விஞ்ஞானிகள் அறிந்த விஷயம் தான்.

பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் விண்கற்கள் மீது அத்தகைய லேசர் ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சி அவற்றை அழித்தல் அல்லது அதன் பயணப் பாதையை திசை மாற்றுதல் ஆகியவை தான் இப்போதைக்கு  பூமியைக் காப்பாற்றுவதற்கான வழி என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த நோக்கத்தின் அடிப்படையில் இரண்டு வகையான திட்டத்தை அவர்கள் அமல்படுத்த முனைந்துள்ளனர்.  அதில் முதலாவது திட்டம் டி-ஸ்டார்  சிஸ்டம்  ஆகும்.

விண்கற்களைக் குறிவைக்கும் நேரடி எரிசக்தி முறை இது. இதிலிருந்து மாறுபட்ட மற்றொரு  தொழில்நுட்பம் டி-ஸ்டார்லைட் சிஸ்டம்.

டி-ஸ்டார்  லேசர் விண்கலம் ஒன்று பூமிக்கு அப்பால் வலம் வந்த வண்ணம் இருக்கும். பூமியின் சுற்றுப்பாதையில் வலம்  வந்தவாறு காவல் பணியில் ஈடுபடும்.சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சும் ஆற்றல் இதற்கு உண்டு.

இந்த ஒளிக்கற்றைகளின் குறுக்களவு  330 அடி இருக்குமானால்,  அந்த லேசர் ஒளிக்கற்ரைகள் சுமார் 20 லட்சம் மைல்களுக்கு அப்பால் வரும் ஒரு விண்கல்லைக் கூடத் தாக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும்.

பூமிக்கு ஆபத்தான விண்கல்லாக  இருந்தாலும் சரி, வால் நட்சத்திரமாக இருந்தாலும் சரி, அதன் மேற்பரப்பின் மீது லேசர் ஒளிக்கற்றைகளை டி-ஸ்டார்  கலம் பாய்ச்சும்.

அவ்வாறு தொடர்ச்சியாக ஒரு விண்கல்லின் மீது  பாயும் லேசர்,  அப்பகுதியில் வெப்பத்தை ஏற்படுத்தி, அப்பகுதியை சிதைக்கும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் கடுமையான சேதத்திற்குள்ளாகும் விண்கல்லின் சுழற்சியும் அதன் பயணப் பாதையும் மாற்றம் காணும். லேசரினால் சிதைவுற்ற பகுதிகளைக் கூட பஸ்பமாக்கும் ஆற்றல் இந்த லேசர் ஒளிக்கற்றைகளுக்கு உண்டு.

லேசரினால் சேதப்படுத்தப்பட்ட விண்கல்லின் பயணப் பாதையில் மிகச்   சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட  அந்த விண்கல் பூமியை நோக்கி வருவதிலிருந்து கோடிக்கணக்கான மைல்கள் விலகிச் சென்றுவிடும். இதன் வழி பூமி காப்பாற்றப்படும்.

டி-ஸ்டார்  கலம் நிரந்தரமாகவே பூமியை வலம் வரும் வகையில் நிலைநிறுத்தப்படும்.அடுத்து, டி-ஸ்டார்லைட் சிஸ்டம் இன்னும் சற்று வித்தியாசமானது. ஆபத்து விளைவிக்கக்கூடிய விண்கல்லைப் பின்தொடர்ந்து பயணம் செய்யக்கூடிய டி-ஸ்டார் லைட், அந்தக் கல்லின் மீது லேசர் ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சி அவற்றைச் சிதைத்து பின்னர் திசை மாறச்செய்துவிடும்.

டி-ஸ்டார்லைட்டை ஒரு ராக்கெட் மூலம்  தேவைப்படும் போது விண்ணில் பாய்ச்சலாம். ஆனால், இதன் செயல்பாட்டுக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும்.

லண்டன், மார்ச்.7- மனித உடலில் `நோய் எதிர்ப்புக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்தி' புற்றுநோயை அழிக்கும் வழிமுறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் உள்ள செல்களுக்கு உள்ளே, இயல்பாகவே இருக்கும் பலவீனம் ஒன்றை தாம் கண்டறிந்துள்ளதாக லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உடலில் உள்ள சிறப்பான நோய்த்தடுப்பு செல்களாகக் கருதப்படும் டி- செல்கள், புற்றுநோய் கட்டிகளை கண்டுபிடித்து அழிக்க வழி ஏற்படுத்தக் கூடியது.

இதன் மூலம் நோய் முற்றிய நிலையில் கூட, அதற்கு தனிப்பட்ட வகையில் சிகிச்சை வழங்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பணச் செலவுமிக்க இந்தச் சிகிச்சை முறை, இன்னமும் மனிதர்களிடத்தில் பரிசோதிக்கப்படவில்லை எனவும் இரண்டு ஆண்டுகளில் அத்தகைய பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் நோயைக் குணப்படுத்துவது சாத்தியமே எனத் தெரிவிக்கும் இந்த விஞ்ஞானிகள், ஆயினும், இது ஒரு சிக்கலான முறை எனத் தெரிவித்தனர்.

புற்றுநோய்க்கான இந்தப் புதிய கண்டுபிடிப்பினை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் இந்த நோய்க்கான பல சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்படலாம் என்ற நம்பிக்கையினை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்விற்கு ஆதரவு வழங்கிய ‘கான்சர் ரிசர்ச் யு.கே’ நிறுவனம், இந்தக் கண்டுபிடிப்பை வரவேற்றுள்ளது.