கோலாலம்பூர்,  13 ஜூலை- வாசனை தாவரப் பொருட்களிலேயே மிகவும் விலை உயர்ந்த குங்குமப் பூவை மலேசியாவில் வெற்றிகரமாகப் பயிரிட்டு சாதனைப் படைத்துள்ளனர், மலாயாப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

வாசனைப் பொருட்களின் ராஜாவான  குங்குமப்  பூவானது மத்தியத்  தரைக்கடல்,  மேற்காசியா, மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் மட்டுமே விளையும்.  ஆயிரம், ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே  குங்குமப்பூவை மக்கள்  சமையலில் வாசனைப் பொருட்களாகக் கலக்கப்பட்டு வருகிறது. 

 குங்குமப் பூ ஒரு கிலோவுக்கு 28,000 ரிங்கிட் முதல் 32,000 ரிங்கிட் வரை விற்கப்படலாம். 

இந்நிலையில் மலாயாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ரோஸ்னா மாட் தாஹா தலைமையிலான குழுவினர் முதல் முறையாக மலேசியாவில் குங்குமப்  பூவை நட்டு சாதனைப் படைத்துள்ளனர். இவர்கள் நட்ட செடியில் கடந்த நவம்பர் தொடங்கி ஜனவரி மாதம் வரை குங்குமப் பூ பூத்துள்ளது. 

சமையல் வாசனைப் பொருளாக மட்டுமின்றி  குங்குமப் பூவில் தேன் கலந்து சாப்பிடுவது உடல் நலத்திற்கும் மிக்கப் பயன்  அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

நியூயார்க், ஜூலை 8- ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புறப்பட்ட சூர்ய சக்தியில் செயல்படக்கூடிய 'ஜுனோ' என்ற விண்வெளி ஆய்வுக் கலம், 'ஜுபிடர்' எனப்படும் மாபெரும் வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதையை வெற்றிகரமாக அடைந்துவிட்டது.

சுமார் 400 பவுண்ட் (172 கிலோ) எடை கொண்ட ஜுனோ, கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி பூமியிலிருந்து புறப்பட்டது. கிட்டத்தட்ட 180 கோடி மைல்கள் பயணம் செய்து இவ்வாரத் தொடக்கத்தில் வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்து வரலாறு படைத்தது.

மிக விரிந்த வியாழனின் சுற்றுப் பாதைக்குள் நுழைவதற்கு வசதியாக, ஜுனோ விண்கலம் தனது வேகத்தை குறைக்கும் மிகச் சிக்கலான ஒரு முயற்சியில் இறங்கியது.

எனினும், மிக ஆபத்தான இந்த பணியில் ஜுனோ வென்று, கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த போது நாசா கட்டுப்பாட்டு நிலையத்தில் மிகப் பதட்டத்துடன் கவனித்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள் உற்சாகத்தில் மிதந்தனர்.

ஐந்து ஆண்டுகாலப் போராட்டம் வெற்றியை எட்டியதற்காக தமது விஞ்ஞானிகளை, நாசாவின் வியாழன் ஆய்வுத்திட்டக் குழுவின் தலைமை விஞ்ஞானி சார்லி போல்டன் பெரிதும் பாராட்டினார்.

"வியாழனின் சுற்றுப்பாதைக்குள் ஜுனோவை கொண்டு செல்வதுதான் நாசாவின் பணிகளிலேயே மிகவும் கடினமான பணீயாகும். அந்தப் பணியில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்" என்றார் அவர்.

"நாம் இப்போது வியாழனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். அதாவது, நாம் வியாழனை வென்றுவிட்டோம் என்று பொருள்" எனத் தலைமை விஞ்ஞானி போல்டன் பெருமிதத்துடன் கூறினார். மிகப் பெரிய வாயு கிரகமான வியாழனை இன்னும் நெருக்கமாக நெருங்கிச் சென்று ஜுனோ ஆய்வுக் கலம் ஆராய்ச்சி செய்யவிருக்கிறது.

இந்த வாயுக் கிரகம் எப்படி உருவானது? இதனுள் என்ன இருக்கிறது? என்பது உள்பட பல மர்ம முடிச்சுகளை ஜுனோ எதிர்காலத்தில் அவிழ்க்கக் கூடும். இதற்கெல்லாம் மேலாக, இங்கே எவ்வளவு நீர்வளம் இருக்கிறது என்பதைக் கண்டறிவது தான் மிக முக்கியம். வியாழனின் வட மற்றும் தென் துருவங்களில் காணப்படும் அதிக சக்திவாய்ந்த ஒளி அடுக்குகளின் பின்னணி என்ன? என்றும் கண்டறியப்பட வேண்டியுள்ளது.

2018ஆம் ஆண்டு வரையில் ஜுனோ ஆய்வுக் கலம், வியாழனைச் சுற்றியபடி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும். பணி முடிந்ததும் வியானின் புறச்சூழக்குள் விழுந்து சிதறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன் கிரகத்தைச் சுற்றி பல நிலாக்கள் உள்ளன. ஏதாவது ஒரு நிலாவின் மீது விழுந்து விடாமல் தவிர்க்கும் வகையில், வியாழன் கிரகத்திலேயே தனது தற்கொலைப் பயணத்தை ஜுனோ முடித்துக் கொள்வதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

கடுமையான கதிரியக்கக் காந்த வயல்களைக் கொண்ட வியாழனின் புறச்சூழல் எதிர்ப்புக்களைச் சமாளித்து, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு  செயல்படவேண்டிய சவாலை ஜூனோ எதிர்நோக்கியுள்ளது.

 

 

 

வாஷிங்டன், ஜூலை 1- அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசாவின் விஞ்ஞானிகள் வியாழன் கிரகம் தொடர்பான விந்தை குறித்து ஆராயத் தொடங்கி இருக்கின்றனர். சூர்யக் குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமான ஜூபிடர் எனப்படும் வியாழன் கிரகம் அதன் தலையில் ஓர் ஒளிக் கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றுவது குறித்து நாசா ஆராய்கிறது.

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட படங்களில், வியாழன் கிரகத்தின் துருவங்களில் ஒளிக் கோவை அழகாக தென்படுகின்றன. 

அணுவை விட அதிக சக்திவாய்ந்த சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது, அவை வியாழன் கிரகத்தின் காந்த வெளியி னால் ஈர்க்கப்பட்டு கிரகத்தின் துருவப் பகுதிக்கு தள்ளப்படுவதால் இந்த ஒளிக் கோவை உருவாகி இருக்கலாம் எனத் தெரிகிறது.

வியாழன் கிரகம் பூமியைவிட ஆயிரம் மடங்குக்கும் அதிக கொள்ளளவு கொண்டது. சூரியனிடமிருந்து ஐந்தாவது இடத்தில் இருக்கும் வியாழன் திடமான மேற்பரப்பைக் கொண்டது அல்ல. இந்தக் கிரகம் பிரதானமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களையே கொண்டிருப்பதால் இதுவொரு வாயுக் கிரகம் என்றே அழைக்கப்படுகிறது.

இந்தக் கிரகத்தில் இருக்கும் திரவ நிலையில் உலோகத் தன்மை வாய்ந்த ஹைட்ரஜன் நிறைந்து இருப்பதால்தான் வியாழனில் தீவிரமான காந்தவெளிகள் உருவாவதாகக் கருதப்படுகிறது.

பெட்டாலிங் ஜெயா,  24 ஜூன் -   இன்று கிட்டத்தட்ட அனைவருமே விவேகக் கைப்பேசியைத் தான் பயன்படுத்துகிறோம். எங்கெங்கெல்லாமோ கை வைத்து, சட்டென வாட்ஸாப் பார்ப்பதற்கும், முகநூலில் ஆகக் கடைசி பதிவுகளைப் பார்ப்பதற்கும், சட்டென  விவேககக் கைப்பேசியின் திரையைத் தொடுவது  நம் அனைவருக்கும் வழக்கமான நிகழ்வாகி விட்டது. இவ்வழக்கத்தால் அன்றாட  வாழ்க்கையில் அதிகம் சுத்தம் பார்ப்பவர்கள் கூட  தங்கள் விவேகக் கைப்பேசியும் சுத்தமாகத் தான் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.   

இந்நிலையில்  யாருடைய விவேகக் கைப்பேசி அதிக அசுத்தமானது   என்ற கேள்வி எழுந்தால்,  யாரும் எதிர்பாராத  வகையில், மருத்துவரின் விவேகக் கைப்பேசிதான் என்கிறது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. 

மருத்துவர்களின் விவேகக் கைப்பேசியால் நமக்கு பல்வேறு மோசமான  தொற்று நோய் பரவலாம் என எச்சரிக்கிறது அந்த ஆய்வு.     

பிரான்சில் அமைந்துள்ள செயின்ட் -எடியென்  பல்கலைக்கழகத்தின்  தொற்று நோய்   மற்றும் சுகாதார  ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில்  மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்களின்  விவேக கைப்பேசிகள்    ஆர்.என். ஏ   வைரஸ்களின் கிடங்காகத் திகழ்வதாக அவர் தெரிவித்தார். 

இதனிடையே நுண்ணுயிரியல் மற்றும் மற்றும்  தொற்றுநோய்க்கான ஐரோப்பிய சங்கம், மருத்துவமனை   பணியாளர்களின்  விவேக கைப்பேசிகள் மூலம் வைரஸ்கள் எவ்வாறு நோயாளிகள் மத்தியில் பரவுகிறது என்பது பற்றிய ஆய்வை மேற்கொண்டுள்ளது. 

இதற்காக  114   மருத்துவமனைப் பணியாளர்களின்  விவேகக் கைப்பேசிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.  இவற்றுள் 38.5 விழுக்காட்டினரின் கைத்தொலைப்பேசிகளில் இன்புளுவன்சா ஏ,பி, மெத்தாநியுமோவைரஸ், ரோட்டாவைரஸ், நோரோவைரஸ்    போன்ற பல்வேறு  வைரஸ்களைப் பரப்புவது தெரியவந்துள்ளது. 

ஏறக்குறைய 64% மருத்துவப் பணியாளர்கள் தாங்கள்   பணிநேரத்தில் விவேகக் கைப்பேசியைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்களில் 20 விழுக்காட்டினர் கைப்பேசியைப் பயன்படுத்தி விட்டு, கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்வதில்லை எனத் தெரியவந்துள்ளது. 

More Articles ...