லண்டன், ஏப்ரல் 22- மாபெரும் விண்கற்கள் பூமி மீது மோதியதால், ஏற்பட்ட பேரழிவில் டைனோசோரஸ் இனங்கள் அழிந்துவிட்ட போதிலும், சிறிய பறவை இன டைனோசோர்ஸ்கள் அழியாமல், அதன் பரம்பரைகள் இன்று வரை நீடிப்பது எப்படி? என்று உயிரியல் சஞ்சிகை ஒன்றில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்கற்கள் தாக்கத்தினால் ஏற்பட்ட அழிவு காலத்தில் நீண்ட நாள்களுக்கு பட்டினிக் கிடக்கக் கூடிய திறனை, டைனோசோர்சுகள் போன்ற சிறிய வகை பறவைகள் கொண்டிருந்ததால் தப்பிப் பிழைத்தன.

விண்கற்களால், தாக்குண்ட இந்த பூமியின் பருவநிலை முற்றிலும் மாறிப் போனது. பூமியின் புறச்சூழல் வழியாக சூரிய ஒளி உள்ளே நுழைய முடியாத நிலையில் மண்ணில் இருந்த தாவரங்கள் அழிந்தன. இதனால், தாவரங்களை உண்டு வாழும் டைனோசார்ஸ்களும் பட்டினிச் சாவுக்கு உள்ளாயின.

இதன் விளைவாக, மாமிசம் உண்ணும் விலங்களும் அடித்துத் தின்ன எதுவும் இல்லாமல் மரணித்தன. தாவரங்கள் அழிந்ததாலும், மண்ணில் சிந்திக் கிடந்த விதைகள் அழியாமல் இருந்ததால், கொத்தித் தின்னும் அலகு (மூக்கு) கொண்ட டைனோசோரஸ் பறவை இனங்கள் இந்த விதைகளைக் கொத்தித் தின்று உயிர் வாழ்ந்தன. 

மீண்டும் பூமி உயிரினங்கள் செழிக்க போதுமான அடிப்படைகளைப் இந்தப் பூமி பெறும் வரையில், இந்த வகை டைனோசோர்ஸ் பறவைகளின் பரம்பரை மெல்லத் தொடர்ந்து கொண்டே இருந்ததால்தான், இன்றைய நவீனப் பறவைகள் அவற்றின் வாரிசுகளாக நீடித்த வண்ணம் உள்ளன.

 

 

 

 

நியூயார்க், ஏப்ரல் 18- விண்வெளி வீரர்களின் உணவுத் தேவைகளுக்காக செவ்வாய்க் கிரகத்தில் பயிர்ச் சாகுபடி செய்யும் திட்டம் குறித்து ஆராய்ந்து வருகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா.

செவ்வாயில் நிலவும் ஒலி அலைகளைப் பயன்படுத்தி உருளைக் கிழங்கு விளைவிப்பதற்கான முயற்சிகளில் அது  இறங்கவிருக்கிறது.

இதற்காக, செவ்வாய்க் கிரகத்தைப் போன்ற புறச்சூழலையும் மண்ணையும் கொண்ட பெரு நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தில் ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளனர். 

மைனஸ் 64 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 284 டிகிரி செல்சியஸ் வரையிலான தட்பவெப்ப நிலையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லண்டன், ஏப்ரல் 12- நட்சத்திரங்களை மையமாகக் கொண்டு சுற்றிவரும் சில கிரகங்கள், அவற்றின் புறச்சூழலை முற்றாக இழந்திருக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இத்தகைய கிரகங்களின் புறச்சூழலை, அந்த நட்சத்திரங்கள் கபளீகரம் செய்து விடுகின்றன. நட்சத்திரங்களை மிக நெருக்கமாக சுற்றிவரும் கிரகங் களின் புறச்சூழல்கள், அதிக சக்திவாய்ந்த கதிரியக்கத் தாக்குதல்களுக்கு இலக்காகின்றன.

இதனால், கிரகங்களின் புறச்சுழல்களை, அந்தக் கதிரியியல் தாக்கம் பறித்துவிடுகிறது என்று அனைத்துலக விஞ்ஞானிகள் குழு அறிவித்துள்ளது. 

சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுவரும் நாசாவின் 'கெப்ளர்' விண்வெளி தொலை நோக்காடி (டெலிஸ்கோப்) தந்துள்ள விவரங்களின் அடிப்படையில் விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சிகளில் இருந்து சில கிரகங்களின் புறச் சூழல்கள் பறிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

பூமியை விட கிட்டத்தட்ட 10 மடங்குவரை பெரிதாக உள்ள 'சூப்பர் பூமிகள்' என அழைக்கப்படும் கிரகங்களை இலக்காகக் கொண்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த சூப்பர் கிரகங்கள், தான் சூற்றிவரும் நட்சத்திரத்திற்கு மிக அருகில் வலம் வருகின்றன. அதாவது தலைமுடியை உலர்த்துவதற்கு நாம் பயன் படுத்தும் 'ஹேர் ட்ரையர்' கருவியை மிக மிக அருகில் வைத்து அதிகபட்சச் சூட்டில் முடியை உலர்த்தும் போது எப்படி அனல் காற்று தகிக்கிறதோ, அதே போன்று நட்சத்திரத்தை மிக அருகில் சுற்றிவரும் கிரகங்களின் நிலையும் இருக்கும்.

இத்தகைய நிலையில் சம்பந்தப்பட்ட கிரகங்களின் புறச்சூழல் அழிக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தப் புறச்சூழல் தான் ஒரு கிரகத்தில் உயிரினங்களின் தோற்றத்திற்கு ஆதார சக்தி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

கேப் கனெவெரல், ஏப்ரல் 9- விண்ணில் அனுப்படும் ராக்கெட்டுகளை மீண்டும் தரையிறங்கச் செய்து, அதனை மறுமுறை பயன்படுத்தும் திட்டத்தில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நிலைநாட்டியிருக்கிறது. 

விண்வெளிச் சேவைக்கான ராக்கெட்டுகள் குறிப்பிட்ட தொலைவுப் பயணத்திற்குப் பிறகு எரிந்து, வெறும் இரும்புக் கூடாக மீண்டும் கடலில் விழுந்து காணாமல் போவது தான் வழக்கம்.

கோடிக்கணக்கான டாலர்கள் செலவில் உருவாக்கப்படும் இந்த ராக்கெட்டுகள், மறுமுறை பயன்படுத்தப்படும் நிலை இதுவரை இல்லை.

ஆனால், இனிமேல் பிரச்சனை இல்லை. இத்தகைய ராக்கெட்டுகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வழி பிறந்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று தனக்குச் சொந்தமான பெயர் குறிப்பிடாத விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் வெற்றிகரமாக விண்வெளியில் அனுப்பியது. அதனை விண்வெளிக்கு கொண்டு சென்ற பால்கன் -9 உந்து விசை ராக்கெட், இரண்டரை நிமிட நேரம் வரை பறந்து, குறிப்பிட்ட தொலைவு வரை சென்ற பிறகு அந்தக் கலத்தை விண்ணில் செலுத்திய விட்டு அதிலிருந்து பிரிந்து மீண்டும் பூமியை நோக்கி திரும்பி செங்குத்தாக இறங்கியது.

பூமிக்குத் திரும்பிய பால்கன் ராக்கெட், அட்லாண்டிக் கடலில் இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருந்த மிதவைத் தளத்தை குறிவைத்து தரையிறங்கியது. கிட்டத்தட்ட நான்கரை நிமிடத்தில் அது தளத்தை நெருங்கிய போது ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டிருந்த நான்கு முனைக் கால்கள் விரிந்தன. அந்த ராக்கெட் நேர்த்தியாக தரை இறங்க அந்த கால்கள் உதவின. மீண்டும் அந்த ராக்கெட்டை விண்ணில் பாய்ச்சுவதற்கு ஏதுவான வகையில், தரையிறக்கப்பட்டுள்ளது.

இது வெற்றிகரமாகத் தரையிறங்கிய போது ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா ஆகிய தளங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பெரும் ஆரவாரத்துடன் அந்த வெற்றியைக் கொண்டாடினர்.

இதுவொரு வரலாற்றுச் சாதனையாகும். எதிர்காலத்தில் ராக்கெட்டுகளை மறு பயனீடு செய்ய முடியும். இதனால் மிகப் பெரிய அளவில் செலவுகளை மிச்சப்படுத்துவதோடு, அதிகமான எண்ணிக்கையில் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புவதற்கும் வழி பிறந்துள்ளது. 

ராக்கெட்டை மீண்டும் கடலிலுள்ள தளத்தில் இறக்கும் முயற்சிகளில் ஏற்கெனவே ஐந்துமுறை ஏற்பட்ட தோல்விக்குப் பிறது இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.

ராக்கெட்டை தரையிலேயே மீண்டும் இறங்கச் செய்யும் முயற்சியில் கடந்த ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றி கண்டது. இருப்பினும் இது ஆபத்தானது. ஏனெனில், அவ்வாறு தரையிறங்கும் போது விபத்துகள் ஏற்பட்டாலோ, அல்லது ராக்கெட் திசை தப்பி மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் விழ நேர்ந்தாலும் பெரும் உயிருடற்சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

More Articles ...