வாஷிங்டன், மார்ச் 25- அடுத்த ஏழாண்டு காலத்திற்குள் மனிதர்களை நிலாவில் குடியமர்த்தும் முயற்சிகள் வெற்றிபெறும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனிதர்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக நடந்துவருகின்றன. 

இந்த முயற்சி சாத்தியமானால், மனித சமுதாயத்தின்  உச்சக்கட்ட சாதனையாக விளங்கும். இதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், அடுத்த ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் நிலாவில் மனிதர்கள் வசிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய மான நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 10 பேர் வரை தங்கக்கூடிய வகையில் நிலாவில் தளம் அமைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கு 10 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்த தொகையானது, மேற்படி திட்டத்துக்காக முன்னர் மதிப்பிடப் பட்டிருந்த செலவு தொகையைவிட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் செவ்வாய்க் கிரகத்தில் தளம் அமைப்பது தொடர்பான தங்களது விருப்பத்தை தெரி வித்துள்ளன. அதற்கு முன்னதாகவே,  நிலாவில் மனிதர்கள் வசிப்பதற்காக தளத்தை அமைக்கும் சவாலை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது.

பைக்கோனூர், மார்ச் 12-செவ்வாய்க் கிரகத்தின் புறச்சூழல் குறித்த ஆய்வுகளை நடத்துவதற்காக ரஷ்யாவுடன் சேர்ந்து ஐரோப்பிய விண்வெளிக் கழகம் டிஜிஓ எனப்படும் விண்கலம் ஒன்றை திங்கட்கிழமை விண்ணில் பாய்ச்சவிருக்கிறது.

கஷக்கஸ்தானிலுள்ள பைக்கோனூர் தலத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படத் தயார் நிலையில் இருக்கிறது.

செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள மித்தேய்ன் எனப்படும் வாயு குறித்த சில முக்கிய இரசாயனத் தகவல்களைக் கண்டுபிடிக்க டிஜிஓ விண்கலம் உதவும்.

சுமார் 7 மாத காலப் பயணத்திற்குப் பிறகு இந்த விண்கலம் செவ்வாயை சென்றடையும். பின்னர் அது செவ்வாயின் மேற்பரப்பில் தரையிறங்கும். எதிர்வரும் அக்டோபர் 19ஆம் தேதியன்று இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் செயல்படத் தொடங்கும்.

 

நியூயார்க், மார்ச்.8- தங்கள் குழந்தைகளுக்குப் போதைப் பொருள் பழக்கம் இருப்பதாகச் சந்தேகிக்கும் அமெரிக்கப் பெற்றோர்கள், அதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு வழியை நாடியுள்ளனர். இவர்களுக்குத் தனியார் கே-9 சேவையில் உள்ள மோப்ப நாய்கள் உதவுகின்றன.

மோப்ப நாய் வீட்டுக்குள் நுழைந்து படுக்கை அறை, குளியலறை, படிக்கும் அறை, கார் என்று சகல இடங்களையும் மோப்பம் பிடிக்கிறது. ஹெராயின், கோகெய்ன் முதல் அனைத்துப் போதைப் பொருட்களையும் நுகர்ந்து பார்த்தே கண்டுபிடித்துவிடுகிறது. மைகேல் டேவிஸ் என்பவர் இந்தப் போதைப் பொருள் கண்டுபிடிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இளைஞர்களின் போதைப் பொருள் பழக்கத்தைக் கண்டுபிடிப்பதுதான்.

‘‘ஒரு சிறுவன் காலுறைக்குள் 4 கிராம் ஹெராயினை ஒளித்து வைத்திருந்தான். இன்னொருவன் தன் 5 வயது தம்பியின் உணவு டப்பாவுக்குள் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்தான். ஆண்களைவிட பெண்கள் மிகத் திறமையாக போதைப் பொருட்களை ஒளித்து வைக்கிறார்கள்.

போதைப் பொருட்களால் இளைஞர்கள் எதிர்காலம் சீரழிவதையும் பெற்றோர் துன்பப்படுவதையும் பார்த்து, நான் இந்த வேலையைக் கையில் எடுத்துக்கொண்டேன். போதைப் பொருட்களைக் கண்டுபிடித்து, அவர்களை அதிலிருந்து மீட்பதுதான் எங்கள் நோக்கம். எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றும் இந்த வேலை எனக்கு மன நிறைவாக இருக்கிறது’’ என்கிறார் மைக்கேல் டேவிஸ்.