வாஷிங்டன், பிப்.21- நாம் வாழும் சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள பூமியைப் போன்ற அமைப்பைக் கொண்ட கோள்கள் பற்றிய மிக முக்கியத் தகவல் ஒன்றை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கழகமான 'நாசா' நாளை அறிவிக்கக்கூடும் என்ற பெரும் பரபரப்பு உருவாகி இருக்கிறது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றை அது நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தக் கூட்டம் நாளைக் காலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரியக் குடும்பத்துக்கு அப்பாலுள்ள கோள்களைப் பற்றிய புதிய கண்டுபிடிப்புத் தகவல்களை நாசா விண்வெளி ஆய்வு மையம்  இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடக்கூடும் என்ற யூகம் நிலவுகிறது.

மேலும், வேற்றுக் கிரக உயிரினம் தொடர்பான தகவலாகவும் அது இருக்கக்கூடும் என வேற்றுக்கிரகவாசிகள் மீதான ஆர்வலர்கள் தெரிவித்திருப்பதால் புதிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. 

இந்தச் சந்திப்பின் போது நாசா அறிவிக்கவிருக்கும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி 'தி ஜர்னல் நேட்சர்' தளத்திலும் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், நாசா தரப்போகும் தகவல் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் அனைத்துலக அளவிலான விண்வெளி ஆய்வாளர்களிடையே அதிகரித்திருக்கிறது.

முன்கூட்டியே அனுமதிபெற்ற ஊடகங்களுக்கு மட்டுமே செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்., இந்தச் சந்திப்பு நாசா தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது. இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பை http://www.nasa.gov/nasatv என்ற இணைய முகவரியில் காணலாம். 

 

 

 வெலிங்டன், பிப்.14- நியூசிலாந்தின் தென் தீவின் கடலோரப் பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு கூட்டம் கூட்டமாகக் கரை ஒதுங்கி உயிர்நீத்த திமிங்கலங்கள் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளன.

கிட்டத்தட்ட 400க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரைகளில் ஒதுங்கி மீண்டும் கடல் சேர முடியாமல் உயிர் நீத்துள்ளன. இந்த அளவுக்கு திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிர்நீப்பது இதுவரை நடந்திராத ஒன்று எனச் சுற்றுச் சூழல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

இறந்து கிடக்கும் திமிங்கலங்கள் தொடர்ந்து வீக்கமடைந்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட சில நாள்களுக்குப் பின்னர் அவை வெடித்துவிடும். அவை மிகப்பெரிய சப்தத்துடன் வெடிக்கக் கூடியவை என்பதால் சுற்றுச் சூழல் மிகுந்த மாசுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சங்கடத்திலிருந்து தப்புவதற்காக நிபுணர்கள், இறந்து கிடக்கும் திமிங்கலங்களின் உடல்களில் பல இடங்களில் துவராங்களை உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் அவை வெடிப்பதைப் தவிர்க்க முடியும் என அவர்கள் கூறுகிறார்கள்.

மடிந்து விட்ட திமிங்கலங்களின் உடலுக்குள் ஒருவகை வாயு உருவாகி, அவை பெருக்கமடையும் போது அவை வெடித்துச் சிதறி விடும். இத்தகைய துவாரங்களின் வழி அந்த வாயு வெளிறே வழிவகுத்து விட்டால் அவை வெடிக்காது என்று நியூசிலாந்து நிபுணர் திரிஷ் கிரேண்ட் கூறினார்.

எனினும், இப்பிரச்சனை மேலும் பூதகரமாக உருவெடுக்கும்  அபாயம் இருப்பதாக அவர் சொன்னார். இப்பகுதியின் கடலோரத்தில் இருந்து சற்று தொலைவான இடங்களில் இன்னும் நிறைய திமிலங்கலங்கள் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றன. 

இவை திசைதப்பி கடலோரப் பகுதிகளில் ஒதுங்குமேயானால் மேலும் பல மடிய நேரும். கரைக்கு வந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் கொண்டு போய்விடும் தங்களின் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த மாதிரி பலன்கள் கிடைப்பதில்லை. அவை கடலுக்கு திரும்ப மறுத்து கரையிலேயே மடிகிற பரிதாபநிலை தொடர வாய்ப்புள்ளது என்று திரிஷ் கிரேண்ட் கூறினார்.

 

 
 

கோலாலம்பூர், பிப்ரவரி 10-  சர்வதேச நேரப்படி, இன்று 10 மணிக்கு  தொடங்கும் சந்திர கிரகணம் மறுநாள் 2.53  மணி வரை நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா  மற்றும் ஆசியாவிலுள்ள பல பகுதிகளில் இந்த அதிசய காட்சியைக் காணலாம். சந்திர கிரகணம் ஏற்படும் போது பூமி  இடையில் அமைந்திருக்க சூரியன், சந்திரன் ஆகியவை அணிவகுத்து நிற்கும். 

இந்த அணிவகுப்பின் போது பூமியின் நிழல், சந்திரன் மீது விழுந்து சந்திர கிரகணத்தை ஏற்படுத்தும்.மேலும், சந்திர கிரகணத்தின் போது நிலவு வெள்ளி படர்ந்ததை போல பேரழகாக காட்சியளிக்கும்.

பிப்ரவரியில் தோன்றும் இந்த முழு நிலவு, பனி நிலவு என அழைக்கப்படுகிறது. மேலும் கமெட் 45p என்னும் வால்நட்சத்திரமும் நடு இரவில் தோன்றும் என தெரிகிறது இந்த கமெட் 45p வால் நட்சத்திரம் 1948-ஆம் ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டதாகும்.

 லண்டன், ஜன.31- 'இந்த மனுஷன் என்ன ஆட்டம் போடுறான் பாருங்க' என்று யாராவது அலுத்துக் கொள்வதை நாம் அடிக்கடி கேட்டு இருப்போம். ஆனால் அத்தகைய மனிதன், ஒரு மில்லி மீட்டர் அளவைக் கொண்ட ஒரு நுண்ணிய கடல் உயிரினத்தில் இருந்துதான் வந்தான் என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்பது ஓர் ஆச்சர்யமான விஷயம்...!

மனிதனின் மிக மூத்த மூதாதையர் யார் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மூத்த மூதாதையரில் இருந்து தான் மனிதன் உள்பட பல்வேறு உயிரினங்கள் தோன்றியுள்ளன. மிக நேர்த்தியாக, பதப்பட்டநிலையில் கண்டுபிடிக்கப்பட்ட படிமத் தடயங்கள் கிட்டத்தட்ட 54 கோடி ஆண்டுகளைக் கடந்தது என்று அவர்கள் கண்டறிந்துள்ளார்.

மிக நுண்ணிய கடல்வாழ் விலங்காக இது கருதப்படுகிறது. 'சாக்கோரைத்தஸ்' என்றழைக்கப்படும் இந்த பூர்வ உயிரினம் தான் பல விலங்குகளுக்கு மூதாதை. குறிப்பாக, முதுகெலும்புள்ள விலங்குகளுக்கு இதுதான் மூதாதை.  கடல் படுகையில் மணல்களுக்கிடையே இது வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.

பிந்த நுண்ணிய உயிரினம் தனது பரிணாம வளர்ச்சிப் பாதையில், மீன்களாகி பின்னர் பல்வேறு வடிவங்கள் கண்டு படிப்படியாக மனித இனத்திற்கு வளர்ச்சி கண்டது. மத்திய சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் படிமத் தடயங்கள்

குறித்து 'நேட்சர்' எனப்படும் அறிவியல் சஞ்சிகை விரிவான ஆய்வு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து, சீனா, மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

 

 

More Articles ...