வேற்றுக் கிரகவாசிகளுடன் தொடர்பு:  தீவிர முயற்சியில் விஞ்ஞானிகள்!

Science
Typography

 நியூயார்க், மார்ச்.10- இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளுக்குள் இந்த பூமிக்கு அப்பாலுள்ள கிரகங்களில் இருப்பதாக நம்பப்படும் உயிரினங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி விடமுடியும் என்று அமெரிக்க விண்வெளிக் கழகமான நாசா தெரிவித்திருக்கிறது.

வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுவரும் 'சேட்டி' தொடங்கியுள்ள பல்வேறு முயற்சிகளில், சக்திவாய்ந்த வானொலி அலைவரிசைகளை உருவக்குவதும் ஒன்றாகும்.

உயிரினங்கள் வாழத்தக்க சூழ்நிலை உள்ள கிரகங்களை நோக்கி இந்த வானொலி அலைவரிசைகளைத் திசைதிருப்புவதும் சில நுண்ணிய ஒலிகளைப் பதிவு செய்வதும் இதில் அடங்கும். குறிப்பாக, நம்மை விட நவீன நிலையை எட்டிய உயிரினங்கள் இருக்குமானால், அவர்கள் நம்மோடு தொடர்பு கொள்ளவோ, நாம் அவற்றைப் புரிந்து கொள்ளவோ இத்தகைய நுண் ஒலிப்பதிவுகள் அவசியம் என்று கருதப்படுகின்றது.

கலிபோர்னியாவில் அமைந்துள்ள வேற்றுக் கிரக உயிரினங்கள் தொடர்பான ஆய்வுக் கழகம், சுமார் 20 ஆயிரம் நட்சத்திரங்கள் பற்றிய கண்காணிப்பில் இருக்கிறது இவை 'ரெட் ட்வார்ப்' (Red Dwarfs) என அழைக்கப்படுகின்றன. 

குறிப்பாக, இவற்றை 'குள்ள நட்சத்திரங்கள்' என்பார்கள். நமது சூரியனை விட இவை சிறியவையாகவும், ஒளி மங்கியவையாகவும் உள்ளன. உண்மையில் இவற்றை செத்துச் சுருங்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் எனலாம். அதனால்தான் சுருங்கிக்கொண்டே போகின்றன. ஒளியும் மங்கி வருகிறது.

இத்தகைய நட்சத்திரங்களின் வெப்பம் தணிந்து கொண்டிருப்பதால், அவற்றைச் சுற்றியிருக்கும் கிரகங்களில் நிலவும் இதமான வெப்பநிலை உயிரினங்கள் உருவாவதற்கும் வாழ்வதற்கும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் சாத்தியம் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இத்தகைய குள்ள நட்சத்திரங்களின்பால் கூடுதல் கவனம் செலுத்திவரும் விஞ்ஞானிகள், இங்கிருப்பதாக நம்பப்படும் உயிரினங்களிடம் இருந்து ஏதேனும் ஒலிச் சமிக்ஞைகள் வருகின்றனவா? என்பதைக் கண்காணிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS