மனிதனின் செவ்வாய்ப் பயணம்; திட்டத்தை சட்டமாக்கினார் டிரம்ப்!

Science
Typography

வாஷிங்டன், மார்ச்.22- செவ்வாய்க் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவது, மனிதர்கள் மாற்றுக் கிரகத்தில் குடியமர்வதற்கான வழிகள் குறித்து ஆராய்வது ஆகிய திட்டங்களை மேற்கொள்ள புதிய நாசா சட்டம் ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

செவ்வாய்க் கிரகத்திற்கான ஆய்வுப் பணி தொடரப்படவேண்டும் என்று நசாவுக்கு திட்ட இலக்கு ஒன்றை முன்னாள் அதிபர் ஒபாமா வரையறுத்திருந்தார்.

தற்போது அந்தத் திட்ட இலக்கை, நாசாவுக்கான சட்டமாக மாற்றியிருக்கிறார் அதிபர் டிரம்ப். 2030ஆம் ஆண்டுக்குள் செவ்வாய்க் கிரகத்திற்கு நாசா அமைப்பு தனது விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு இந்தச் சட்டம் வழிவகுத்துள்ளது.

இதனை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் அங்கீகரித்தன. அந்த அங்கீகாரத்தில் கையெழுத்திட்டதன் வழி இதனைச் சட்டமாக்கியுள்ளார் டிரம்ப்.

அதேவேளையில், 2017ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடாக 1,950  கோடி டாலரை அவர் நாசாவுக்கு ஒதுக்கியுள்ளார். தற்போது கட்டுமானத்தில் இருக்கும் அதிநவீன ராக்கெட்டான எஸ்எல்எஸ் மூலம் 'ஓரியன்' என்ற விண்கலம் செவ்வாய்க்கு விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லக்கூடும். 

பூமியிலிருந்து சுமார் 140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் செவ்வாய்க் கிரகம் உள்ளது என்ற போதிலும் புதிதாக வடிவமைக்கப்படும் எஸ்எல்எஸ் ராக்கெட், இதுவரை உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகளியே மிகச் சக்தி வாய்ந்ததாகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS