புதிய பரிணாமத்தை நோக்கி மாணவர் முழக்கம்; இவ்வருடத்தின் வெற்றியாளர் யார்?

Special Article
Typography

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சிறந்த பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களை உலக அரங்கில் முன்னெடுத்து செல்லும் நோக்கில் ஆஸ்ட்ரோ வானவில்லும் வணக்கம் மலேசியாவும் இணைந்து நடத்தும் மாணவர் முழக்கம் போட்டி மீண்டும் இவ்வருடம் தொடங்கி பீடு நடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. 

2011 முதல் 2014ம் ஆண்டு வரை, நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தேசிய அளவில் அடையாளம் காட்டியபோது, அவர்களை உலக அரங்கில் அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் உதயமானது ஏற்பாட்டுக்குழுவிற்கு.

அதன் விளைவு, தேசிய போட்டியாக களம் கண்டு வந்த மாணவர் முழக்கம் கடந்த 2014ம் ஆண்டு உலக அரங்கில் காலடி எடுத்து வைத்தது. தொடங்கத்தில் சொற்போராய், குழு வாரியாக போட்டிகள் நடக்க, மலேசியாவோடு இந்தியா, சிங்கப்பூர், ஶ்ரீலங்கா என்ற மூன்று நாடுகளும் களத்தில் இறங்கின. கோலாலம்பூரில் முதல் வருட போட்டி என்றாலும் போட்யின் கடுமை அதிகம் தான். வெவ்வேறு மண் என்றாலும் தமிழ் மணம் ஒன்று தானே என்று சற்றும் சளைக்காது மாணவர்களுக்குள் நடந்த போட்டியில் தமிழ் வளர்த்த இந்தியா வெற்றி வாகை சூடியது, மகுடத்தையும் தட்டி சென்றது.

2015ம் ஆண்டு.. மாணவர் முழக்கப்போட்டியில் பெரும் மாற்றம். சொற்போராய் குழு நிலையில் போட்டியிட்ட நிலை மாறி, போட்டியாளர்களின் தனி திறமையை அடையாளம் காட்டும் வகையில், இப்போட்டி தனி நபர் பேச்சுப் போட்டியாக உருமாறியது. போட்டியின் மாற்றத்தினால் உற்சாகம் கொண்டனர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள். மாணவர் முழக்கம் வீர முழக்கமாய் மாறியது. 

2015ம் ஆண்டின் தேசிய வெற்றியாளர் அனைத்துலக போட்டியில் போட்டியிடுவார் என்ற உத்வேகம் மாணவர்களின் தனிநிகரற்ற பேச்சாற்றலை வெளிப்படுத்தியது. தேசிய நிலையில் கெடாவைச் சேர்ந்த மாணவி பிரியங்கா வடிவேல் மாபெரும் வெற்றியாளர் பட்டத்தைத் தட்டி சென்றார். கெடா மாநிலமே சந்தோசத்தில் திளைத்தது. இதற்கு காரணம் தன் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி சென்னையில் நடந்த அனைத்துலக மாணவர் முழக்கப்போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கவிருக்கிறார் என்பது தான். 

சென்னையில் அனைத்துலக போட்டி தொடங்கியபோது, மீண்டும் மலேசியாவோடு இந்தியா, சிங்கப்பூர், ஶ்ரீ லங்கா ஆகிய நாடுகள் பங்கெடுத்தன. இம்முறை தனிநபர் போட்டி என்பதால் போட்டியின் வீரியம் அதிகமாகவே இருந்தது. அனைத்துலக போட்டி சென்னையில் நடந்தபோது அங்கு கனமழை. இருந்தாலும் நான்கு நாட்டு மாணவர்களின் பேச்சு மழை பார்வையாளர்களையும் நடுவர்களையும் இலக்கிய மழையில் நனைய வைத்தது. 2015ம் ஆண்டும் தமிழின் கருவறையாம் தமிழகமே அனைத்துலக வெற்றியாளராக வாகைச் சூடியது. மலேசியா மூன்றாம் இடத்தையே பிடித்தது.

அனுபவம் கிடைத்த பிறகு, முதல் இடத்தை வெல்ல நோக்கம் கொண்ட மலேசியா மீண்டும் தேசிய நிலையில் மாணவர் முழக்கப் போட்டியை நடத்தியது. இம்முறை படைப்பாற்றலோடு மாணவர்கள் சுய சிந்தனை தன்மைக்கும் முக்கியத்துவம் தரும் வகையில், நடுவர்களின் கேள்விக்கு மாணவர்கள் உடனடியாக பதில் கூறும் அங்கம் உருவாக்கப்பட்டது. தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சளைத்தவர்களா என்ன? சற்றும் சளைக்காது நடுவர்களே பிரமிக்கும் வகையில் கேள்வி பதில் அங்கத்தில் சிறந்த படைப்பை வழங்கினர். மண்டல சுற்றுகள் முடிந்து தேசிய நிலையில் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த ராகவி வெற்றியாளராக வாகை சூடினார்.

தேசிய நிலையில் வென்ற பின் அனைவரின் பார்வையும் அனைத்துலக போட்டி மீது திரும்பியது. இம்முறை மலேசியா வெற்றி கோப்பையைத் தட்டி செல்லவேண்டும் என்று உறுதிக் கொண்டனர். இதற்கான பிரத்தியேக பயிற்சிகளும் நடத்தப்பட்டன. 

இம்முறை அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டி துபாய் மண்ணில் நடந்தது. ஆனால், போட்டியில் பங்கெடுத்த நாடுகள் நான்கு அல்ல. மொத்தம் ஐந்து நாடுகள் போட்டியில் களமிறங்கின. மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், ஶ்ரீ லங்கா மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசும் போட்டியில் குதித்தன. போட்டி மிக கடுமையாக இருக்க, யார் வெற்றியாளர் பட்டத்தைத் தட்டி செல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க, மீண்டும் இந்தியாவே வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது. மலேசியா வெற்றியாளர் கிண்ணத்தை விட்டுக் கொடுத்தாலும் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சிறப்பான படைப்பைக் காட்டி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

அனைத்துலக அரங்கில் மலேசியாவை முதன்மைப்படுத்தவேண்டும் என்ற வேட்கையினால், ஏழாம் ஆண்டாக இவ்வாண்டும் தேசிய நிலையிலான மாணவர் முழக்கம் தொடங்கியது. இம்முறை அனைத்துலக மாணவர் முழக்கத்திற்கு மலேசியாவைப் பிரதிநிதிக்கும் போட்டியாளரை அடையாளம் காணும் வகையிலேயே போட்டியின் விதிகள் மாற்றியமைக்கப்பட்டன.

முதல் கட்ட தேர்வாக, மாணவர்கள் வழங்கப்பட்ட தலைப்பிற்கு காணொளி வடிவில் படைப்பை அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டனர். நாடு முழுவதிலிருந்தும் ஏறக்குறைய 450க்கும் மேற்பட்ட காணொளிகள் அனுப்பப்பட்ட நிலையில் அதிலிருந்து 120 காணொளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு மண்டல போட்டிகள் நடந்தன.

கோலாலம்பூர், கெடா, ஈப்போ மற்றும் ஜொகூர் ஆகிய மண்டலங்களில் போட்டிகள் நடைபெற்ற நிலையில், மண்டல போட்டிகள் இரண்டு பிரிவாக நடத்தப்பட்டன. முதல் பிரிவில் மாணவர்கள் வழங்கப்பட்ட தலைப்புக்கு தங்களின் படைப்பை வழங்கிய பிறகு நடுவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்தனர். பின்னர் தற்கால நடப்புகளைக் கொண்ட காணொளியைப் பார்த்து அதனைக் கிரகித்து பேசினர். இதிலிருந்து இரண்டாம் சுற்றுக்குத் தேர்வான 24 மாணவர்கள் விவாதக் களத்தில் எதிர்தரப்புடன் கருத்து மோதல் செய்தப்பின் அவர்களுக்கு காட்டப்படும் படத்தினை தலைப்போடு ஒட்டி பேசினர்.

இவ்வாறு பலப்பரீட்சைக்குப் பிறகு, ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் தலா ஆறு மாணவர்கள் என மொத்தம் 24 மாணவர்கள் மாபெரும் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கோலாலம்பூரில் நடக்கவிருக்கும் மாபெரும் இறுதிப் போட்டியில் களமிறங்குவர். 

தேசிய நிலையில் வென்று அனைத்துலக போட்டிக்கு தேர்வாகவிருக்கும் மாணவர் யார் என்பது எதிர்வரும் ஜூலை 8ம் தேதி தெரியவரும்.