ஏப்ரல் 1- முட்டாள்கள் தினமா? யாருங்க அந்த முட்டாள்?

Special Article
Typography

"அங்க பாரு பாம்பு 'ஏப்ரல் ஃபூல்", இங்க பாரு டீச்சர் வராங்க 'ஏப்ரல் ஃபூல்" என்று ஆரம்பப்பள்ளி காலங்களில் அருகில் இருக்கும் நண்பர்களை ஏமாற்றுவதில் அலாதி ஆனந்தம் நமக்கு. இன்று சிறிது முதிர்ச்சியடைந்த பிறகு இதனைக் கண்டுக்கொள்ளாது போனாலும், ஏப்ரல் ஒன்றாம் தேதி ஏன் இந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என்ற சந்தேகம் இன்னும் பலருக்கு இருந்து கொண்டே இருக்கும். 

எப்படி இந்த 'முட்டாள்கள் தினம்' உருவானது? எங்கு தொடங்கியது? இதோ சில அலசல்.

ஏப்ரல் ஃபூல் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டில் தான் இது முதன்முதலில் தொடங்கப்பட்டது எனத் தெரியவருகிறது. 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562-ஆம் ஆண்டுகளில் அப்போதைய போப்பாண்டவரான 13-ஆவது கிரகரி, பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரிகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். 

இதன்படி ஜனவரி முதலாம் தேதி தான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. (இன்று நாம் ஆங்கில புத்தாண்டு என்று கொண்டாடுகிறோமே அது தான் இது) எனினும் இந்த “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய நாடுகளும், அவற்றின் மக்களும் உடனே ஏற்றுக் கொள்ளவில்லை. 

அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852-ஆம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660-ஆம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700-ஆம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752-ஆம் ஆண்டிலும் தான் இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டன. தொடக்கத்திலேயே புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள், பழைய வழக்கில்  ஏப்ரல் முதல் தேதியைப் புத்தாண்டாக கொண்டாடியவர்களை 'ஏப்ரல் முட்டாள்கள்' என்று அழைத்தார்கள். 

இதலிருந்து தான் ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று ஒரு ஆய்வின் மூலம் தெரியவருகிறது. இதைத் தவிர்த்து பல காரணங்கள் கூறப்பட்டாலும் அதற்குச் சான்றுகள் நிறுவப்படவில்லை.

எது எப்படியோ மற்றவர்களை ஏமாற்றி நாம் சந்தோசப்படுவதற்கு என்று ஒரு நாளை ஒதுக்கிய ஐரோப்பா மக்களுக்கு நன்றிங்க..