இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாய் அனுசரிப்பு

Special Article
Typography

புனித வெள்ளி என்பது கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கின்ற ஒரு நாளாகும். கிறிஸ்துவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள், இயேசு உயிர்த்தெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்நாளின்போது தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கி.பி 33 - 34ஆம் ஆண்டுகளிடையில் இயேசு இறந்திருக்கலாம் என்று பல அறிஞர்கள் கணிக்கின்றனர். 

இயேசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் பல துன்பங்கள் அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்துவர்களின் நம்பிக்கை. இந்நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது விவிலிய நூல்களே.

புனித வெள்ளியன்று தேவாலயங்களில் நிகழும் ஒரு முக்கிய விசயம் சிலுவைப் பாதையாகும். தேவாலய அதிகாரபூர்வ வழிபாட்டில் இது இல்லாவிட்டாலும், கிறிஸ்துவர்கள் விரும்பி நடத்துகின்ற இந்த சிலுவைப் பாதை ஒரு இறைவேண்டலாகும். இயேசு அனுபவித்த துன்பங்களோடு மக்கள் தங்களையே ஒன்றுபடுத்திக்கொண்டு, மனத் துயர் கொண்டு, இனிமேல் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு கடவுளின் அருளை இறைஞ்சுகின்ற வாய்ப்பாக இந்த சிலுவைப் பாதையை கிறிஸ்துவர்கள் எண்ணுகின்றனர்.

இயேசுவின் இறுதி நாட்களை விவிலியத்தில் உள்ள நற்செய்தி வாசகங்களில் இருப்பதை நாம் பார்க்கலாம். விவிலிய சான்றுகளை இன்றுவரை கிறிஸ்துவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

மக்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தி போதித்து வந்த இயேசுவை கொலை செய்யவேண்டும் என்று யூத மத போதகர்கள் திட்டம் தீட்டி வந்தார்கள். இயேசுவின் சீடரான யுதாஸ் இஸ்காரியோத்து என்பவன் அவரைக் காட்டிக் கொடுக்க அவர்களிடம் 30 வெள்ளிக் காசுகளைப் பெற்றான். பிறகு, எருசலேம் கெத்சமனி தோட்டத்தில் கோவில் காவலர்கள் இயேசுவைக் கைது செய்தனர். முதலில் அன்னாஸ் என்பவரும் பிறகு எருசலேம் கோவில் தலைமைக் குருவும் இயேசுவை விசாரித்தனர். ஆனால், இயேசு அவர்களிடம் ஒன்றும் கூறாமல் மௌனம் காத்தார்.

பிறகு உரோமை ஆளுநர் போந்தியுஸ் பிலாத்து என்பவரிடம் கொண்டு சென்றனர். விசாரணைக்குப் பின், இயேசுவை குற்றமற்றவர் என்று பிலாத்து தீர்ப்பிட்டார். ஆனால், மக்கள் அதை ஏற்க மறுத்ததால், இயேசுவைக் கசையால் அடிக்கச் செய்து அவரை விடுதலைச் செய்ய பிலாத்து முனைந்தார். அப்போதும் அமைதி அடையாத மக்கள் இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்று கூச்சலிட்டனர். 

மக்கள் கலவரம் செய்தால் தனது ஆளுநர் பதவி பறிப்போய்விடும் என்ற அச்சத்தில் இயேசுவை சிலுவையில் அறைய பிலாத்து உத்தரவிட்டான். பிலாத்து “இவனது இரத்தப் பலியில் எனக்குப் பங்கில்லை” என்று கூறியதாக விவிலியச் சான்றுகள் தெரிவிக்கின்றன. காவலர்கள் இயேசுவின் தலையில் முள்முடியை அணிவித்து அவரை அடித்து துன்புறுத்தி, அவர் மீது சிலுவையைச் சுமத்தி கல்வாரி மலைக்கு நடக்கச் செய்தனர். அந்த இடத்திற்கு வந்ததும் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய வலப்புறத்திலும் இடப்புறத்திலுமாக இரண்டு திருடர்களையும் சிலுவையில் ஏற்றினார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு இயேசு கடவுளிடம் பிரார்த்தனைச் செய்தபின் உயிர் நீத்தார்.

இதுவே விவிலிய நற்செய்தி நூல்கள் இயேசுவின் துன்பங்கள் பற்றியும் சிலுவையில் அறையப்பட்டது பற்றியும் தரும் சான்றுகளின் சுருக்கம்.