Top Stories

கோலாலம்பூர், மே 23- இந்தியாவில் வெளியாகி சக்கை போடு போட்ட 'தங்கல்' இந்திப்படம் சீனாவில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்து வருகிறது. இன்றைய தேதிக்கு தங்கல் சீன டப்பிங் படத்தின் வசூல் 643 மில்லியன் யுவான் அதாவது ரிம.400.81 மில்லியனாகும்.

கடந்த மே 8ம் தேதி முதல் சீனாவில் இந்த தங்கல் படம் வெளியாகி இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெண்கள் மல்யுத்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் சீன மொழியில் 'மல்யுத்தம் செய்வோம் அப்பா' (Let's Wrestle, Dad) என்ற பெயரில் வெளியானது. 

ஹாலிவூட் அல்லாத வெளிநாட்டுப் படங்களில் தற்போது அமீர்கானின் தங்கல் படமே வசூல் சாதனைப் படைத்து முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஜப்பான் மொழி அனுமேஷன் படமான 'யூர் நேம்' படம் மட்டுமே 566 மில்லியன் யுவான் வரை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதோடு, உலக திரையரங்கில் இந்திய சினிமாவை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்ற பாகுபலி படம் இவ்வாண்டு இறுதிக்குள் சீன சந்தையை குறி வைத்து வெளியிட திட்டமிட்டுள்ளதால் விரைவில் சீன சினிமா இந்திய படங்களின் முக்கிய சந்தையாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கோலாலம்பூர், மே.23- மலேசிய மண்ணில் மாபெரும் வரலாறு படைத்த எவரெஸ்ட் நாயகர்களான டத்தோ எம்.மகேந்திரன் மற்றும் டத்தோ என்.மோகனதாஸ் ஆகியோரின் சாதனை எழுச்சியினை நினைவு கூரும் வகையில் எவரெஸ்ட் வெற்றியின் இருபதாம் ஆண்டு நிறைவு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

மலேசிய இந்தியர் விளையாட்டு மன்ற அறவாரியத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்த விழாவில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் முன்னிலை வகித்தார்.

1997-ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் மலேசியரான டத்தோ எம்.மகேந்திரன், அவரை அடுத்து இரண்டாவது மலேசியரான டத்தோ என். மோகனதாஸ் மற்றும் அவர்களுடன் எவரெஸ்ட் குழுவில் இடம்பெற்று இருந்தவர்களுக்கும் சிறப்புச் செய்யப்பட்டது. 

"நமது சாதனை. நாம் தொடர்ந்து நினைவு கூர்ந்து ஒரு வரலாற்றுப் பதிவு மங்கிவிடாமல் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பது நமது கடமை என்று மலேசிய இந்திய விளையாட்டு மன்ற அறவாரியத் தலைவர் டத்தோ டி.மோகன் கூறினார்.

மகேந்திரன், மோகனதாஸ் ஆகியோருடன் அன்றைய எவரெஸ்ட் குழுவில் இடம்பெற்றிருந்த மலையேறிகளுக்கும் இந்த நாளில் சிறப்புச் செய்யப்பட்டிருப்பது தமக்கு பெரும் மகிழ்வை அளித்திருப்பதாக துணையமைச்சர் டத்தோ எம். சரவணன் கூறினார்.

அன்றைக்கு ஏகப்பட்ட சவால்கள், தடங்கல்கள், அத்தனையும் கடந்துதான் எவரெஸ்ட்டை அடைந்தோம். இன்றைக்கு நினைத்தாலும் பெருமிதமாக இருக்கிறது என டத்தோ மோகனதாஸ் சொன்னார்.

நாட்டுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் அன்று இருந்தது. சொல்லப்போனால், 1997-ஆம் ஆண்டில் நாங்கள் கண்ட வெற்றி, 'மலேசியா போலே' என்ற சுலோகத்தை, ஒரு மந்திரச் சொல்லாக இன்றளவும் எல்லா துறைகளிலும் ஒலிக்கும்படி செய்திருக்கிறது என்று டத்தோ மகேந்திரன் கூறினார்.

விளையாட்டுத் துறை சார்ந்த பிரமுகர்களும் முன்னாள் விளையாட்டு வீரர்களும் 1997ஆம் ஆண்டின் எவரெஸ்ட் குழு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

 

கோலாலம்பூர், மே.20- ‘பந்து விளையாட்டு சமூகத்துடன் ஒரு நாள்’ எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் நூற்றுக்கணக்கான ஆரம்பப் பள்ளி மாணவர்களுடன் தன் நேரத்தை செலவு செய்தார்.

7 வயது முதல் 12 வயது வரை உள்ள மாணவர்கள் பலர் பந்து விளையாட்டு துறையில் ஆர்வம் செலுத்த இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவதாக அவர் கூறினார். தேசிய பந்து விளையாட்டு வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள ‘துனாஸ் அக்காடமி’ நடத்தி வரும் பல நிகழ்ச்சிகளை அவர் ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த நிகழ்ச்சியின் போது பண்டார் துன் ரசாக் மற்றும் வாங்சா மாஜு அணிகளுக்குள் நடைபெற்ற பந்து விளையாட்டு போட்டியில் கைரி நடுவர் ஆனார். இந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி சம நிலையில் முடிவுற்றது.

வரும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் சீ விளையாட்டு போட்டிக்கு பிறகு புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கத்தைப் பழுது பார்த்த பின்னர், பொதுமக்கள் அவ்வரங்கத்தை பயன்படுத்த வழி செய்யப்படும் என்றும் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.