கால்பந்து: இரட்டை அதிர்ச்சி: மன்.சிட்டி –பார்சிலோனா தோல்வி

Sport
Typography

மன்செஸ்ட்டர், ஏப்ரல்.11 –ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் நேற்று ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சிகள் காத்திருந்தன. பலம் பொருந்திய பார்சிலோனா குழுவை ரோமா கால்பந்து குழு குப்புறக் கவிழ்த்தது. அதே வேளையில் மன்செஸ்ட்டர் சிட்டி குழுவை விவர்புல் தூக்கி வாரியடித்தது. அரையிறுதி போட்டிக்கு ரோமாவும், லிவர்புல் குழுவும் தேர்வு பெற்றுள்ளன. 

பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வெற்றியின் விளிம்பில் இருக்கும் மன்செஸ்ட்டர் சிட்டி, நேற்று நடந்த 2 ஆவது கட்ட காலிறுதி ஆட்டத்தில் லிவர்புல் குழுவுடன் மோதியது.

முதல் கட்ட காலிறுதி மோதலில் லிவர்புல் 3-0 என்ற கோல் கணக்கில் மன் சிட்டியை வீழ்த்தி இருந்ததால், அது நம்பிக்கையுடன் களமிறங்கியது.

 2 ஆவது கட்ட மோதலில் பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டம் தொடங்கிய 2 ஆவது நிமிடத்தில் கேப்ரியல் ஜேசஸ் ஒரு கோலை அடித்து மன் சிட்டிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

எனினும் பிற்பகுதியில் 56 நிமிடத்தில் லிவர்புல் குழுவின் 'அதிரடி மன்னன்' முகம்மட் சாலா ஒரு கோலை அடித்து ஆட்டத்தைச் சமமாக்கினார். அடுத்து 77 ஆவது நிமிடத்தில் ஃபிரிமோனா ஒரு கோலைப் போட்டு லிவர்புல்லுக்கு 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியைத் தேடி தந்தார்.

இந்த இரு கட்ட காலிறுதி ஆட்டங்களின் முடிவில் 5–1 என்ற கோல் விகிதாச்சாரத்தில் லிவர்புல், சாம்பியன் லீக் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பலம் பெருந்திய ஸ்பெயின் குழுவான பார்சிலோனாவை இந்த இத்தாலியின் ரோமா குழு 3–0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தரும் வகையில் வீழ்த்தியது.

வழக்கம் போலவே இந்த 2 ஆவது கட்ட ஆட்டத்திலும் பார்சிலோனா வெல்லும் என்ற எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  முதல் கட்ட காலிறுதியில் 4–1 என்ற கோல் கணக்கில் வென்ற பார்சிலோனா, அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தகர்ந்து போனது.

2 ஆவது கட்ட காலியிறுதியில் ஷெக்கோ, டி ரோஸி மற்றும் மனோலாஸ் ஆகியோர் கோல்களை அடித்து ரோமாவை 3–0 என்ற கோலில் வெற்றி பெற வைத்தனர்.

இதனால், இரு குழுக்களும் 4 –4 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டன என்றாலும் எதிரியின் அரங்கில் கோலடித்த குழு என்ற அடிப்படையில் ரோமா அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்று விட்டது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS