கோலாலம்பூர், ஏப்ரல்.15- ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டில் பேட்மிண்டன் ஒற்றையர் ஆட்டத்தில் மலேசியாவின் மூத்த வீரர் டத்தோ லீ சோங் வெய்  தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்தார்.  இறுதியாட்டத்தில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரராக விளங்கும் இந்தியாவின் ஶ்ரீகாந்தை 19-21, 21-14, 21-14 என்ற புள்ளிகளில்  லீ சோங் வெய் வீழ்த்தினார்.

36 வயதுடைய லீ சோங் வெய்க்கு இது 3ஆவது காமன்வெல்த் தங்கம் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 25 வயதுடைய ஶ்ரீகாந்திடம் முதல் செட்டில் 19-21 என்ற புள்ளிகளில் கடும் போராட்டத்திற்குப் பின்னர் லீ சோங்  வெய் வீழ்ச்சி கண்டாலும், அடுத்தடுத்த செட்டுகளில் அவர் அபாரமாக விளையாடி வெற்றியை நிலைநாட்டினார். 

இந்தக் காமன்வெல்த் போட்டியின் தொடக்கத்தில், குழு ரீதியிலான ஆட்டத்தின் போது ஶ்ரீகாந்திடம்  லீ சோங் வெய்  தோல்வி கண்டார் என்பதால், மலேசிய ரசிகர்கள் மத்தியில் இன்றைய ஆட்டத்தின் போது பதட்டமான சூழ்நிலையே நிலவி வந்தது. முதல் செட்டில் லீ சோங் வெய் தோல்வி கண்ட போது தங்கம் கைநழுவி விட்டதைப் போல ரசிகர்கள் உணர்ந்தனர்.

ஆனால், அசுர வேகத்தில் அந்தத் தோல்வியிலிருந்து மீண்டு, தம்முடைய அனுபவங்களை முன்நிறுத்தி இந்த அபாரமான வெற்றி லீ சோங் வெய் நிலைநிறுத்தி மலேசியாவின் 'தங்க மகன்' என்பதை நிருபித்தார்.

இதனிடையே பெண்களுக்கான ஒற்றையர் போட்டியின் இறுதியாட்டத்திற்கு இந்தியாவின் இரு வீராங்கனைகள் தேர்வு பெற்றிருந்த நிலையில், மூத்த வீராங்கனையான சாய்னா நேவால் 21-18, 23-21 என்ற புள்ளிகளில் சக வீராங்கனையான பி.வி. சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கோல்டு கோஸ்ட், ஏப்ரல்.13-இங்கு நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டில் இசை நடன ஜிம்னாஸ்டிக் போட்டியில் மலேசிய வீராங்கனையான 23 வயதுடைய அமி குவான் டிக் வெங் தங்கப் பதக்கத்தை வென்றார்.

ரிப்பன் வகை இசை நடன  ஜிம்னாஸ்டிக்  போட்டியில் அமி மொத்தம் 13.200 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து மலேசியாவுக்கு தங்கத்தை பெற்றுத்தந்தார். 

அதேவேளையில்,  சைப்ரஸ் வீராங்கனை டியாமண்டோ  வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு  மலேசிய வீராங்கனையான கோய் சி யான் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 

 ஜிம்னாஸ்டிக்  போட்டிகளில் ஒரு தங்கம், 3 வெள்ளி  மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை மலேசியக்குழு வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே லான் போவ்ல்ஸ் எனப்படும்' பந்து உருட்டும்' போட்டியில் மலேசியாவின் எம்மா ஃபீயானா மற்றும் சித்தி ஷலினா ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றது. 

இறுதியாட்டத்தில் பலம் பொருந்திய தென் ஆப்பிரிக்க ஜோடியான நிக்கோல்னி மற்றும் கோலின் பிக்கெட் ஜோடியை வென்று மலேசிய வீராங்கனைகள் தங்கத்தை தட்டிச் சென்றனர்.

கோலாலம்பூர், ஏப்ரல்.12- ஆஸ்திரேலியாவின்  கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் மலேசியாவுக்கு மூன்றாவது தங்கத்தைப் பெற்றுத் தந்த 'டைவிங்' நீச்சல் வீராங்கனைகளான  சியோங் ஜுன் ஹுங் மற்றும் பண்டேலா ரினோங் ஜோடிக்கு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

தமது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் இந்தப் பராட்டுக்களை தெரிவித்ததோடு தம்முடைய வாழ்த்துகளையும் கூறியுள்ளார். ஏற்கெனவே, மலேசியா எடை தூக்கும் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டைவிங் நீச்சலில் 10 மீட்டர் பிளாட்பார்ம் போட்டியில் மலேசிய ஜோடி 328.08 புள்ளிகளைக் குவித்து தங்கத்தை வென்றது.  அதேவேளையில், கனடாவின் மியேகன் - கேய்லி மக்காய் ஜோடி 312. 12  புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் மலேசியாவின் லியோங் முன் நூர்- டபிதா சப்ரி  ஜோடி 308.16 புள்ளைகளைப் பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளனர் என்பாது குறிப்பிடத்தக்கது.

 

 கோலாலம்பூர், ஏப்ரல்.9- ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டில்  பேட்மிண்டன் கலப்பு குழு போட்டியில் மலேசியா வெள்ளிப் பதக்கத்தையே பெறமுடிந்தது. இந்தப் போட்டியின் இறுதியாட்டத்தில் மலேசியாவை வீழ்த்தி  தங்கப் பதக்கத்தை வென்றதோடு மலேசியாவுக்கு கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது இந்தியா.

குழுப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக் ரங்கிரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஜோடி மலேசியாவின் பெங் சூன் சான் மற்றும் லியூ யிங் கோ ஜோடியை 21-14, 15-21, 21-15 என்ற புள்ளிகளில் வென்று  முதல் வெற்றிப் புள்ளியைப் இந்தியா பெற்றது. 

அடுத்து களமிறங்கிய மலேசியாவின் மூத்த பேட்மிண்டன் வீரர் லீ சோங் வெய், ஆட்டத்தை சமமாக்குவார் என்று மலேசிய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் இந்தியவின் முன்னணி வீரராக திகழும் கடாம்பி ஶ்ரீகாந்திடம் 21-17, 21-14 என்ற புள்ளிகளில் நேரடி செட்டுகளில் தோல்வி கண்டதால் இந்தியா 2-0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னணிலை  பெற்றது.

3ஆவது ஆட்டத்தில் மலேசியாவின் ஷேம் கோ மற்றும் வீ  கியோங் டான் ஜோடி இந்தியாவின் சத்விக் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் சந்திரசேகர் ஜோடியை 21-15 மற்றும் 22-20 என்ற புள்ளிகளில் வென்றதால் ஆட்டம் 2-1 என்ற நிலையில் இருந்தது.

எனினும், தங்கப் பதக்கத்திற்கான வெற்றிப் புள்ளியை 3ஆவது ஆட்டத்தில் தவற விட்ட இந்தியா 4ஆவது ஆட்டத்தில் அதன் மூத்த வீராங்கனையான சாய்னா நேவலை களமிறக்கியது. மலேசியாவின் முன்னணி வீராங்கனை சோனியா சியா அவருடன் மோதினார். 

இந்த ஆட்டத்தில் இரு வீராங்கனைகளுமே கடுமையாகப் போராடினர்.  எனினும் இறுதியில் சாய்னா நேவல் 21-11, 19-21, 21-9 என்ற புள்ளிகளில் வென்று காமன்வெல்த் பேட்மிண்டன் கலப்புக் குழு போட்டியில் முதன் முறையாக இந்தியா தங்கம் வெல்ல வழி வகுத்தார். இந்த குழுப் போட்டியில் தங்கத்திற்கு குறிவைத்திருந்த மலேசியா வெள்ளிப் பதக்கத்தையே பெற முடிந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கோல்ட் கோஸ்ட், ஏப்ரல்.5- 2018 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியின் தொடக்க நாளில்  எடை தூக்கும் வீரர் அஷ்ரோய் ஹசால் வாஃபி மலேசியாவின் முதல் தங்கத்தை வென்றார்.

56 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட 24 வயதுடைய பகாங்கைச் சேர்ந்த  வீரரான அஷ்ரோய், கிளின் அண்ட் ஜெர்க் என்ற போட்டிப் பிரிவில் கூட்டு எடையாக 261 கிலோ எடையைத் தூக்கி முதலிடத்தைப் பிடித்து தங்கத்தை வாகை சூடினார்.

அடுத்து வெள்ளிப் பதக்கத்தை, இந்தியாவின் குருராஜா என்பவரும்  வெண்கலப் பதக்கத்தை இலங்கையின் சதுரங்கா லக்மால் என்பவரும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே,  மலேசியாவுக்கு முதலாவது தங்கத்தைப் பெற்றுத்தந்த  அஷ்ரோய்க்கு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தமது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர், மார்ச். 16- துங்கு இஸ்மாயிலின் இந்தப் பதவி விலகல் அறிக்கை குறித்து தாம் அதிர்ச்சி அடைந்திருப்பதாக  கால்பந்து சங்கத் தலைமைச்  செயலாளர் டத்தோ ஹமிடின் முகமட் அமின்  சொன்னார். எனினும் அவரது பதவி விலகல், சரியான வழிமுறையில் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அவரது பதவி விலகலைக் கால்பந்து சங்கம்  ஏற்றுக்  கொள்ளவில்லை என்று அவர் அறிவித்தார்.

துங்கு இஸ்மாயில் தமது அதிகாரப்பூர்வ பதவி விலகல் கடிதத்தைச் சங்கத்தின் நிர்வாக குழுவுக்கு அனுப்பவேண்டும். பின்னர் அதனை ஏற்றுக் கொள்வதா, இல்லையா? என்பதை  நிர்வாக குழுவின் முடிவைப் பொறுத்தது என்றார் அவர்.

அவர விலகல் அறிவிப்பை முகநூல் பதிவில் பார்த்தேன்.  அது திடிரென ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடு என்றே நான் நினக்கிறேன். குறிப்பாக மலேசியாவின் உலகக் கால்பந்துத் தரநிலை  மேலும் 3 இடங்கள் சரிந்திருப்பதற்கு துங்கு இஸ்மாயிலை காரணமாக சுட்டிக் காட்டியிருப்பதால் அந்த அடிப்படையில் அவர் மறு மொழி கூறியிருக்கலாம் என்று  டத்தோ ஹமிடின் அமின் கூறினார்.

அவர் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை கடந்த ஆண்டு மார்ச் 25 ஆம்தேதி அவர் பதவியேற்றமுதல் இதுவரையில் மிகச் சிறந்த முறையில் மலேசிய கல்பந்து சங்கம் துரித வளர்ச்சியை கண்டுள்ளது. எம்-லீக்கின் மதிப்பை அவர் உயர்த்தி இருக்கிறார்.சூப்பர் லீக குழுக்கள 3மில்லியன் ரிங்கிட்டையும் பிரிமியர் லீக் குழுக்கள் தலா 1 மில்லியன் ரிங்கிட்டையும் பெற்ரு வருகின்றன என்று டத்தோ ஹமிடின் சொன்னார்.

 

 

கோலாலம்பூர், மார்ச்.16- மலேசிய கால்பந்து சங்க (எப்.ஏ.எம்.) தலைவர் பொறுப்பிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்ததன் வழி, ஜொகூர் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம்,  மலேசியர்களிடையே அதிர்ச்சியை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

உலகத் தர வரிசையில் மலேசியாவின் கால்பந்து தர நிலை மேலும்  3 இடங்கள் சரிந்து 175 -இல் இருந்து 178 -க்கு இறங்கியிருப்பதால், கால்பந்து சங்கப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள இதுவே சரியான தருணம் என்று தாம் கருதுவதாக அவர் கூறியுள்ளார். 

தமது பதவி விலகலை அவர் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமான சவுத்தர்ன் டைகர்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தாம் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த காலக் கட்டத்தில் 23 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டிகளில் ஆசிய ரீதியில் மலேசிய குழுக்கள் சிறப்பாக விளையாடி புதிய வரலாறு படைத்துள்ளன என்று துங்கு இஸ்மாயில் கூறினார்.

மேலும் தம்முடைய பதவிக் காலத்தில் உள்நாட்டு கால்பந்துத் துறையை மறுகட்டமைப்புச் செய்து, அரசாங்க நிதியை மட்டும் நம்பியிருந்த நிலையை மாற்றி இருப்பதாக அவர் சொன்னார்.

மலேசிய கால்பந்து துறைக்குச் சேவையாற்றுவது ஒரு கௌரவம் . அந்தக் கௌரவத்திற்காக தாம் நன்றி கூறிக் கொள்வதாக தமது பதவி விலகல் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

More Articles ...