சீ கேம்ஸ்: நாளை கோலாகல விழா! முன்கூட்டியே திரள்வீர்! -கைரி

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், ஆக.18- நாளை மிக விமரிசையாக புக்கிட் ஜாலில் அரங்கில், 29ஆவது சீ விளையாட்டு போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவைக் காண விரும்பும் பொதுமக்களை விழாவுக்கு கடைசி நேரத்தில் புறப்படாமல் முன்கூட்டியே புறப்பட்டு வருமாறு கேட்டுக் கொண்டார் இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின்.

சீ விளையாட்டிற்காக விற்பனைக்கு வைத்த 85 ஆயிரம் நுழைவு டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. அரங்கினுள் நுழையும் முன்னர் மக்களிடம் பொதுவான பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும். 

சீக்கிரமே வருபவர்கள் சோதனைகளை முடித்து அரங்கினுள் நுழையலாம். மாலை 6 மணிக்குதான் தொடக்க விழா என்றாலும் 4 மணிக்கெல்லாம் அரங்கம் திறக்கப்பட்டு விடும் என்று அவர் கூறினார்.

ஆக, விரைந்து வருபவர்களுக்கு அரங்கினுள் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டும்.

இதனிடையே, சீ விளையாட்டைக் காண வருபவர்கள் முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கைரி கேட்டுக் கொண்டார். இதனால் வாகன நெரிசலைக் தவிர்க்க முடியும். 

மேலும், சீ விளையாட்டிற்காக புக்கிட் ஜாலீலைச் சுற்றியுள்ள சில சாலைகள் மூடப்படவுள்ளதால் சொந்த வாகனங்களில் வருவது மக்களுக்குதான் அலைச்சல் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதே வேளையில், தரைமார்க்கப் பொது போக்குவரத்து ஆணையம் (SPAD) மக்களின் வசதிக்காக சுமார் 7 எல்.ஆர்.டி மற்றும் பேருந்து நிலையங்களின் சேவை நேரத்தை நீட்டித்துள்ளது. மேலும், சீ விளையாட்டுகள் நடைபெறும் இடத்திற்குச் செல்லும் பொதுப் போக்குவரத்திற்கு 50 விழுக்காடு கட்டணக் கழிவும் வழங்குகிறது.

எனினும், சொந்தப் போக்குவரத்தை உபயோகித்தி வருபவர்களுக்கும் 3 ஆயிரத்து 500 வாகன நிறுத்தும் இடங்கள் சிலாங்கூர் டர்ஃப் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நாளை மாலை 3 மணிக்கு திறக்கப்படும். அங்கிருந்து விளையாட்டு அரங்கிற்குச் செல்ல பேருந்து வசதியும் உண்டு என்று கைரி உறுதிப்படுத்தினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS