பாரா ஆசியான் போட்டி; தவனேஸ் மீண்டும் அதிரடி! 3ஆவது தங்கம் வென்றார்!

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், செப்.22- பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டியில் மலேசிய ஓட்டப் பந்தய வீரர் தவனேஸ்வரன் சுப்பிரமணியம் மீண்டும் அதிரடி வெற்றிகளைக் குவித்தார்.

நேற்று நடந்த 200 மீட்டர் ஓட்டத்தில் 24.15 வினாடிகளில் ஓடி மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும், நால்வர் பங்கேற்கும் 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் மலேசியக் குழு 2ஆவது இடத்தைப் பிடித்ததால், இக்குழுவில் இடம்பெற்றிருந்த தவனேஸ்வரன் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார்.

சிகாமட்டைச் சேர்ந்த 18 வயதுடைய தவனேஸ்வரன் 100 மீட்டர் ஓட்டத்திலும் 400 மீட்டர் ஓட்டத்திலும் ஏற்கனவே இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பாரா ஆசியான் போட்டியில் திடல் களப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவர்களில் தவனேஸ்வரனை அடுத்து உமி சயுதா என்ற வீராங்கனை 3 தங்கங்களை வென்றுள்ளார்.

இவருக்கு பிறவியிலேயே இரண்டு கால்களும் இருவேறு அளவில் இருக்கின்றன. அதாவது சிறுத்தும் பெருத்தும் உள்ளன. இருப்பினும், இதையெல்லாம் கடந்து தென் கிழக்காசியாவின் பாரா போட்டியில் தலைசிறந்த ஓட்டக்காரர் என்ற பெருமையை நிலைநாட்டியுள்ளார்.

போட்டியின் தொடக்க நிலையில், அவர் மிக மெதுவாகவே ஓடினார். ஆனால், போட்டியை முடிக்கும் தருணத்தில் அவரது துரிதத்திற்கு இதர போட்டியாளர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. 

“நான் பாரா ஆசியான் ஓட்டப் போட்டியில் சிறந்த வீரனா? என்று தெரியாது. ஆனால், இப்போட்டியில் பங்கேற்றது அதற்காக அல்ல. ஒரு போட்டியில் கலந்து கொண்டு என் திறமையைச் சோதிக்க வேண்டும் என்று மட்டுமே நான் விரும்பினேன்” என்று தவனேஸ்வரன் குறிப்பிட்டார்.

"மேலும் எனது அடுத்த இலக்கு, எனது கல்வி. நான் எஸ்.பி.எம். தேர்வு எழுதவுள்ளேன். படிப்பிலும் சிறந்த வெற்றியைக் குவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்றார் அவர்.

கடைசியாக, 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற போது தேசிய அரங்கத்தில் அவரது ஓட்டத்தைக் காண அவரது பெற்றோர்களும் உடன்பிறப்புகளும் திரண்டு இருந்தனர்.

"எனது ஓட்டத்தைக் காண வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர்கள் நேற்றுத்தான் ஜொகூரில் இருந்து அரங்கத்திற்கு வந்திருந்தனர். இது எனக்கு மிக மகிழ்ச்சி அளித்தது" என்றார் தவனேஸ்வரன்.

BLOG COMMENTS POWERED BY DISQUS