'முன்பை விட இப்போது நான் பக்குவப்பட்டுள்ளேன்'- தேசிய ஹாக்கி வீரர் குமார்!

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், டிச.27- கடந்த அக்டோபர் மாதம் வங்காளதேசத்தில் நடந்த ஆசியா கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியின் போது, வாடா என்றழைக்கப்படும் உலக ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியால் தடைச் செய்யப்பட்ட 'செபுதிராமீன்' (Sibutramine) எனப்படும் ஊக்கமருந்தை உட்கொண்ட சர்ச்சையில் சிக்கிக் கொண்ட தேசிய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் எஸ். குமார், முன்பை விட தாம் தற்போது பக்குவப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

ஒன்பது மாதம் மட்டுமே நிரம்பிய குமாரின் மகன் சித்தார்த் பவனாஜ் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது மகனின் ஆரோக்கியம் குறித்து தாம் மிகவும் பதறிப் போனதாகவும், கடந்த வெள்ளிக்கிழமையன்று சித்தார்த் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமக்கு சற்று தெளிவு ஏற்பட்டுள்ளதாக குமார் தெரிவித்தார். 

கடந்த 17-ஆம் தேதியன்று, ஆசியா கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியின் போது, தடைச் செய்யப்பட்ட அந்த ஊக்க மருந்தை குமார் உட்கொண்டிருந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.  

"ஊக்க மருந்து குறித்த முடிவு வெளியாக்கப்பட்டதைத் தொடர்ந்து நான் அமைதியற்ற நிலையிலேயே இருந்தேன். அதேச் சமயம், என் மகனின் நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டு அவனை மருத்துவமனையில் அனுமதித்தோம். எனது முழு கவனமும் என் மகனின் ஆரோக்கியத்தில் நான் செலுத்தியதால், முன்பைக் காட்டிலும் இப்போது நான் பக்குவப்பட்டுள்ளேன்" என்று குமார் சொன்னார். 

"நான் தவறுதலாக ஏதேனும் உணவை உட்கொண்டிருக்கக் கூடும். அதனால் தான் நான் ஊக்க மருந்தை உட்கொண்டேன் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று அவர் சொன்னார்.  

அச்சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கான தேதியை அனைத்துலக ஹாக்கி கூட்டமைப்பு அறிவிக்கும். கிறஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அந்தக் கூட்டமைப்பு அதிகாரிகள் அனைவரும் விடுப்பில் உள்ளனர். அவர்கள் அனைவரும் வேலைக்கு வந்தப் பின்னரே, குமாரின் வழக்கு தொடர்பு விசாரணைக்காக தேதி அறிவிக்கப்படும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS