திறமையை எம்- லீக் போட்டியில் காட்டுங்கள்!  இளம் கால்பந்து வீரர்களுக்கு  கோரிக்கை

மலேசிய அரங்கம்
Typography

சிப்பாங், ஜன.23- சீனாவில் நடந்த  23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் ( ஏ.எப்.சி.)  கால்பந்துப் போட்டியில் சிறப்பாக விளையாடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி புதிய உத்வேகத்தை ஏற்படுத்திய மலேசிய கால்பந்து வீரர்கள், தொடர்ந்து கடும் சவால்களைச் சமாளிக்கத் தாயராக வேண்டும் என்று குழுவின் பயிற்சியாளர்டத்தோ ஓங் கிம் சுவீ வலியுறுத்தினார்.

மலேசிய லீக் (எம்-லீக்) போட்டியில் தாங்கள் விளையாடும் அந்தந்தக் குழுக்களின் வெற்றிக்காக  இந்த இளம் ஆட்டக்காரர்கள் அனைவரும்  முழு வீச்சில் விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சீனாவில் நடந்த ஏஎப்சி போட்டியில் சிறப்பாக விளையாடியதை பெருமையாகக் கருதி மலேசிய லீக் போட்டிகளின் போது அலட்சியமாக இருந்து விடக்கூடாது. சம்பந்தப்பட்ட மலேசிய லீக் குழுக்களின் பயிற்சியாளர்களின் மனதைக் கவரும் வகையில் விளையாடி தொடர்ந்து அந்தந்தக் குழுக்களில் முதல் 11 ஆட்டக்காரர்களில் ஒருவராக திகழவேண்டும் என்று நேற்று சீனாவில்  இருந்து தாயகம்  திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் ஓங் கிம் சுவீ தெரிவித்தார்.

ஏஎப்சி சாம்பியன் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஈராக்கிடம் 4-1 என்ற கோல்கணக்கில் தோல்வி கண்டாலும் அடுத்து ஜோர்டானுடன் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலை  கண்டு 3ஆவது ஆட்டத்தில் பலம் பொருந்திய சவுதி அரேபியாவை 1-0 என்ற கோல்கணக்கில் மலேசியா வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

காலிறுதி ஆட்டத்தில் பலம் பொருந்திய தென்கொரியாவுடன் மோதியதில்  மலேசியா 2-1 என்ற கோல்கணக்கில் தோல்வி கண்டது.  இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில்  முதல் கோலை தென்கொரியா அடித்தது. எனினும்,  மலேசிய வீரர் தனபாலன் ஒரு கோலை அடித்து ஆட்டத்தைச் சமாக்கினார். இருப்பினும், ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருந்த போது தென்கொரியா மேலும் ஒரு கோலைப் போட்டு வெற்றி பெற்றது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS