காமன்வெல்த் பேட்மிண்டன் குழு போட்டி: மலேசியா  வெள்ளி! இந்தியா  தங்கம்!

மலேசிய அரங்கம்
Typography

 கோலாலம்பூர், ஏப்ரல்.9- ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டில்  பேட்மிண்டன் கலப்பு குழு போட்டியில் மலேசியா வெள்ளிப் பதக்கத்தையே பெறமுடிந்தது. இந்தப் போட்டியின் இறுதியாட்டத்தில் மலேசியாவை வீழ்த்தி  தங்கப் பதக்கத்தை வென்றதோடு மலேசியாவுக்கு கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது இந்தியா.

குழுப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக் ரங்கிரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஜோடி மலேசியாவின் பெங் சூன் சான் மற்றும் லியூ யிங் கோ ஜோடியை 21-14, 15-21, 21-15 என்ற புள்ளிகளில் வென்று  முதல் வெற்றிப் புள்ளியைப் இந்தியா பெற்றது. 

அடுத்து களமிறங்கிய மலேசியாவின் மூத்த பேட்மிண்டன் வீரர் லீ சோங் வெய், ஆட்டத்தை சமமாக்குவார் என்று மலேசிய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் இந்தியவின் முன்னணி வீரராக திகழும் கடாம்பி ஶ்ரீகாந்திடம் 21-17, 21-14 என்ற புள்ளிகளில் நேரடி செட்டுகளில் தோல்வி கண்டதால் இந்தியா 2-0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னணிலை  பெற்றது.

3ஆவது ஆட்டத்தில் மலேசியாவின் ஷேம் கோ மற்றும் வீ  கியோங் டான் ஜோடி இந்தியாவின் சத்விக் ரங்கி ரெட்டி மற்றும் சிராக் சந்திரசேகர் ஜோடியை 21-15 மற்றும் 22-20 என்ற புள்ளிகளில் வென்றதால் ஆட்டம் 2-1 என்ற நிலையில் இருந்தது.

எனினும், தங்கப் பதக்கத்திற்கான வெற்றிப் புள்ளியை 3ஆவது ஆட்டத்தில் தவற விட்ட இந்தியா 4ஆவது ஆட்டத்தில் அதன் மூத்த வீராங்கனையான சாய்னா நேவலை களமிறக்கியது. மலேசியாவின் முன்னணி வீராங்கனை சோனியா சியா அவருடன் மோதினார். 

இந்த ஆட்டத்தில் இரு வீராங்கனைகளுமே கடுமையாகப் போராடினர்.  எனினும் இறுதியில் சாய்னா நேவல் 21-11, 19-21, 21-9 என்ற புள்ளிகளில் வென்று காமன்வெல்த் பேட்மிண்டன் கலப்புக் குழு போட்டியில் முதன் முறையாக இந்தியா தங்கம் வெல்ல வழி வகுத்தார். இந்த குழுப் போட்டியில் தங்கத்திற்கு குறிவைத்திருந்த மலேசியா வெள்ளிப் பதக்கத்தையே பெற முடிந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS