கால்பந்து சூதாட்டம்: மிஃபாவின் துரித  நடவடிக்கை! -சந்தோக் சிங் பாராட்டு

மலேசிய அரங்கம்
Typography

 கோலாலம்பூர், ஏப்ரல்,11- கால்பந்து விளையாட்டின் வளர்ச்சியையும், அதன் தரத்தையும் கால்பந்து சூதாட்டம் பாதிக்கும். இதனைத் தடுப்பது அனைவரின் கடமை. காலபந்து அணிகள் சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டாளர்களைக் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று முன்னாள் கால்பந்து வீரர் சந்தோக் சிங் வலியுறுத்தினார்.

கால்பந்தாட்ட சூதாட்டம் மிகவும் மோசமானது. நாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது. தரமான வளர்ந்துவரும் விளையாட்டாளர்கள் தவறான பாதைக்குச் சென்று தங்களது வாழ்க்கையை தொலைக்கவும் இது காரணமாகிறது. திறமையும், கட்டொழுங்கும் இருந்தால் மட்டுமே ஒருவர் சிறந்த விளையாட்டாளராக வர முடியும் என்றார் அவர். 

கால்பந்துட சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுமென எப்.ஏ.எம் தலைவர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் (டி.எம்.ஜே)  அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இத்தகைய கடுமையான  நடவடிக்கைகளின் மூலமாகவே மலேசிய கால்பந்துத் துறையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென சந்தோக் சிங் கருத்துரைத்தார்.

அண்மையில் கால்பந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டக்காரர்களுக்கு எதிராக மிஃபா மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் தூரநோக்கு சிந்தனையோடும், அணியின் கட்டொழுங்கை நிலைநிறுத்தும் வண்ணமும் நல்லதொரு முடிவெடுத்துள்ளார் என்று சந்தோக் சிங் சுட்டிக்காட்டினார்.

மிஃபாவைப் பொறுத்தவரையில் இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதிக்கும் அணியாக தனது பாதையில் இருந்து மாறாது முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. சரியான வழிகாட்டுதலோடு முறையாக கட்டொழுங்கோடு இந்த அணி மென்மேலும் வளர்ந்து மலேசிய கால்பந்துத் துறையில் சிறந்த இடத்தை அடையும், அதற்கேற்ப மிஃபா நிர்வாகமும் செயல்படுமென டத்தோ சந்தோக் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS